தாரகை சினிமாஸ் சார்பில் ஸ்வேதா காசிராஜா தயாரிக்க, பாலு எஸ் வைத்தியநாதன் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி, கதாநாயகனாக நடிக்க, அஞ்சனா கீர்த்தி, மெகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா, பயில்வான் ரங்கநாதன் நடிப்பில் வந்திருக்கும் படம் .
அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றை தனியாருக்குத் தர முடிவு செய்கிறார் கல்வி அமைச்சராக இருக்கும் பெண்மணி . இதற்கு முதல்வரும் (ஜாக்குவார் தங்கம் ) உடந்தை
இதை எதிர்த்து மாணவர்கள் சிலர் ( பாலு வைத்தியநாதன், லொள்ளு சபா ஜீவா, மெகாலி மீனாட்சி ) போராடுகிறார்கள் . அவர்களை ஒடுக்க முதல்வரும் கல்வி அமைச்சரும் களம் இறங்குகிறார்கள் .
இன்னொரு பக்கம் பரம்பரை பரம்பரையாக வக்கீல் குடும்பத்தில் வந்த ஒரு பெண் (அஞ்சனா கீர்த்தி) தனது வக்கீல் அப்பா மற்றும் தாத்தா , போலீஸ்கார மாமா ஆகியோரின் எதிர்ப்பை மீறி, அறம் செய் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து, மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு எதிராகச் செய்யும் செயல்களை கண்டித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போராடுகிறார் .
நடந்தது என்ன என்பதே படம்
நீட் தேர்வு முதற்கொண்டு மத்திய மாநில அரசுகள் செய்யும் அத்தனை தவறுகளையும் நேரடியாகச் சாடும் படம். சபாஷ் .
நாயகனுக்கு திலீபன் என்று பெயர் வைத்து இருப்பது…. நீட் தேர்வு காரணமாக செத்துப் போன அனிதா, ஒருவேளை தோல்விக்குப் பிறகு உயிரோடு தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர் கொண்டு இருந்தால் எப்படி இருந்திருப்பார் என்று சொல்லும் காட்சி … என்று ‘ அட!’ போட்டுப் பாராட்ட சில இடங்கள் .
சமூக நீதி பற்றிப் பேசும் இந்தப் படத்தில் கதாநாயகியை பிராமணப் பெண்ணாதான் காட்டணுமா? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?
அரசுகளை மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் படத்தில் விடவில்லை. முதல்வர் பெயர் காட்பாடி கந்தசாமி . தவிர எதிர்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவை எளிதாகப் புரியும்படி நேரடியாகவே சாடுகிறார்கள்.
வண்டி வண்டியாக லோடு லோடாக டன் டன்னாக டயலாக் பேசினாலும் கூட அதையும் மீறி நடிப்பில் கவர்கிறார் அஞ்சனா கீர்த்தி . வாழ்த்துகள். தேனில் இளநீர் கலந்து குலுக்கி விட்டுக் குடிக்கக் கொடுப்பது போன்ற அவரின் இனிமையான குரல் படத்தில் இல்லை என்பது ஒரு குறை என்றாலும் டப்பிங் பேசியவரும் சிறப்பாகப் பேசியுள்ளார் . பாராட்டுகள் .
இன்னொரு கதாநாயகி மெகாலி மீனாட்சி உற்சாகமாக நடிக்கிறார். ஆனால் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு இன்னும் கவனம் வேண்டும்
லொள்ளு சபா ஜீவாவும் இயல்பாக நடித்துள்ளார் .
பெட்டிக்கடையில் ஒரே ஃபிரேமில் நின்று அவ்வப்போது கமென்ட் அடிக்கும் டி ஆர் எஸ் சும் அவர் பாணியில் நடித்துள்ளார் . (அந்தக் கடை நிலவியல் ரீதியாக எந்த இடத்தில் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை)
மற்ற எல்லோரும் நடிப்பு என்ற பெயரில் செயற்கையான உடல் மொழிகள் மற்றும் தவறான வசன ஏற்ற இறக்கத்தில் படுத்தி எடுக்கிறார்கள்
ஸ்ரீகாந்த் தேவா இசையில் சினேகன் , தேன்மொழி தாஸ் எழுதிய பாடல் வரிகள் அருமை ( வாடா வாடா வந்தியத் தேவா யாருங்கோ?)
படத்தில் யார் வந்தாலும் ஒரு கூடை வசனம் பேசுகிறார்கள் . பத்து வார்த்தையில் முடிக்க வேண்டிய விசயத்தை நூறு வார்த்தையில் பேசுகிறார்கள் .
”எங்களுக்கு புரிஞ்சிருச்சி…. போதும் விட்ருங்க… பிளீஸ் .. ” என்று கதறினாலும் கூட, அப்பவும் விடாமல், “முடியாது . இன்னும் பேசுவேன் , ஹுக்கும்… ஹுக்கும்… ஹுக்கும்… ” என்று சிணுங்கியபடி பிடிவாதமாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
விளைவு? இரண்டு மணி நேரத்துக்கான சரியான திரைக்கதை கூட இல்லாத படம் மூன்று மணி நேரம் எட்டு நிமிடம் ஓடுகிறது .
இத்தனைக்கும் படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது. சொல்ல வேண்டியது . ஆனால் அதை சொல்ல வேண்டிய வகையில் அல்லவா சொல்லி இருக்க வேண்டும் ?
கதையில் ஒரு காட்சி எங்கே வருகிறது .. ஆரம்பத்திலா ? நடுவிலா ? முடிவுக்கு அருகிலா என்பதை வைத்து அந்தக் காட்சியின் நீளம் மாறும் . வசனமும் அப்படியே
அதற்கும் அப்பாற்பட்டு ஒரு விஷயத்தை வசனத்தில் சொல்ல எத்தனை நொடிகள் அல்லது வார்ததைகள் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம் .
ஆனானப்பட்ட விசயமே என்றாலும் அந்த நீளம் அல்லது கால அளவில் ஒரு ரிதம் இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் நல்ல வசனமும் நஞ்சுதான்
காட்சியின் சூழல் , கேரக்டரின் தன்மை , பேசும் விஷயம் , அதற்கு ஏற்ற வார்த்தைகள்… இவற்றைப் பொறுத்தே நடிப்போரின் முக பாவனைகள் , குரல் மாடுலேஷன் , உடல் மொழிகள் , அசைவுகள் இருக்க வேண்டும்.
அந்த ஒட்டுமொத்த ஒத்திசைவோடு ஒளிப்பதிவு , கேமரா நகர்வுகள் , படத் தொகுப்பு, பின்னணி இசை , எல்லாம் அமையும்போது அந்தக் காட்சி சும்மா தகதகவென ஜொலிக்கும்.
A PERFECT FILM IS ALWAYS TUNED BETWEEN TWO TABLES என்பார்கள் . ONE IS WRITING TABLE AND ANOTHER ONE IS EDITING TABLE.
நினைத்ததை எல்லாம் எழுதி , எழுதியதை எல்லாம் செயற்கையான நடிகர்களை வைத்து தவறான அமைதி இடைவெளிகளோடு பேச வைத்து , பேசியதை எல்லாம் அப்படியே அடுக்கி கொண்டு வந்து திரைவழியே, பார்ப்பவர் முகத்தில் கொட்டினால் எப்படி இருக்கும்?
அது அறமில்லாத செயல் அல்லவா?