ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சுபு , மும்தாஸ் ஆகியோர் தயாரிக்க, விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ் வெஞ்சரமூடு, நடிப்பில் எஸ் யு அருண்குமார் இயக்கி இருக்கும் படம் .
மனைவி (மாலா பார்வதி), மகன் ( சூரஜ் வெஞ்சரமூடு ) மகள்கள், மருமகள், மருமகன் , பேரன் பேத்தி என்று பெரிய கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் பெரியவர் ( மாருதி பிரகாஷ் ராவ்) ஒருவர், ரொம்பக் கெட்டவர். அவரும் அவரது மகனும் தங்கள் அடியாள் படையுடன் கொலை, அதிகாரப் பறிப்பு, மற்றும் பணத்துக்காக எதையும் செய்யும் நபர்கள் .
பல வருடங்கள் முன்பு அவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி (எஸ் ஜே சூர்யா) எஸ் பி ஆகி அவர்களைப் பழிவாங்க தருணம் வேண்டிக் காத்திருக்கிறார் .
பெரியவரின் வீட்டுக்குப் போன ஒரு பெண், ” என் கணவனை என்னடா பண்ணீங்க/” என்று கதற, பெரியவரின் மகன் வந்து அந்தப் பெண்ணை அடிக்க, கலாட்டா வருகிறது
இன்னொரு பக்கம் , பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் போலீசுக்குப் போய் “என் மனைவியையும் மகளையும் பெரியவரின் ஆட்கள் என்னவோ செய்து விட்டார்கள்..” என்று புகார் கொடுக்க ,
பழிவாங்கக் காத்திருந்த எஸ் பி, ஒரு அனாதைப் பிணத்தைக் கணவனிடம் காட்டி, ‘என் மனைவியைக் கொன்று விட்டார்கள்’ என்று வற்புறுத்திக் கையெழுத்து வாங்கி, அதை சாக்காக வைத்து பெரியவரையும் அவரது மகனையும் என் கவுண்டரில் அந்த இரவே போட்டுத் தள்ள முடிவு செய்கிறார்
பெரியவருக்கு தங்களைக் காப்பாற்ற காளியால்தான் முடியும் என்று என்று புரிகிறது.
காளி?
பெரியவருக்கு அடியாளாக இருந்து , ஒரு சிங்கிள் மதரை (துசாரா விஜயன்)த் திருமணம் செய்து கொண்டு, பெரியவருக்காக கொலைகளை செய்து அதனாலும், பெரியவர் செய்த துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு , இப்போது திருந்தி,
மனைவியின் மகளையும், மனைவிக்கும் தனக்கும் பிறந்த மகனையும் சமமாகப் பாவித்தபடி , பெரியவரிடம் இருந்து விலகி , மளிகைக் கடை வைத்துப் பிழைத்தபடி, இந்த வயசிலும் மனைவியோடு ரொமான்ஸ் செய்து வாழ்பவன் .
தங்களைக் காப்பாற்றச் சொல்லி காளியிடம்பெரியவர் வந்து கெஞ்ச, மனைவியின் மறுப்பையும் மீறி காளி மீண்டும் ஆயுதம், வெடிகுண்டு எல்லாம் எடுக்க,
பெரியவரின் மகனோ காளியின் மனைவி பிள்ளைகள் , அம்மா ஆகியோரை வளைத்து காளிக்கு வன்மமான அழுத்தம் கொடுக்க, ஒரு நிலையில் ஆரம்பிக்கும் படார் படீர், டமால் டுமீல், டிஷ்யூம் டிஷ்யூம் , சதக் சதக். ரத்தத் தாண்டவமே, இந்தப் படம்.
பெரியவரின் வீட்டுக்கு போய் கதறும் பெண் சம்மந்தப்பட்ட முதல் காட்சியில் இருந்து என்வுண்டருக்கு எஸ் பி பிளான் செய்யும் காட்சி வரை அந்த ஆரம்பப் பதினைந்து நிமிடம் அட்டகாசம் .
எழுத்திலும் மேக்கிங்கிலும் முழுமையாக ஜொலிக்கும் பகுதி . ‘ஆகா… சிக்கிருச்சிடா.. ஒரு செம படம் …’ என்று சந்தோஷப்படும் அளவுக்கு வாயைப் பிளக்க வைத்தார்கள்
படம் முழுக்கவே அதகளம் செய்து இருக்கிறார் விக்ரம் . சிங்கம் போல நடந்து வரும் செல்லப் பேராண்டியை விட, மளிகைக் கடையில் மகளைத் தூங்க வைத்துக் கொண்டும் , மனைவியிடம் வாக்குவாதம் செய்து கொண்டும் வாடிக்கையாளர்களைக் கையாளும் அந்த வாழ்வியல் விக்ரம்தான் பக்கா மாஸ் அண்ட் கிளாஸ் .
அருண் குமார் படங்களுக்கே உரிய துணிச்சலான கதாநாயகியாக , இயல்பாக யதார்த்தமாக பொருத்தமான உடல் மொழிகளுடன் சிறப்பாக நடித்துள்ளார் துஷார விஜயன் .
சூரஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ஒகே என்றாலும் பேச்சில் வரும் மலையாள வாசனை பொருந்த மறுக்கிறது . பெரியவரின் மனைவியாக வரும் மாலா பார்வதியும் மலையாள நடிகைதான் . ஆனால் அவரிடம் அந்தக் குறை தெரியவில்லை. பெரியவராக வரும் மாருதி பிரகாஷ் ராஜின் முகத்தில் தெரியும் தெலுங்குத் தன்மை நடிப்பில் இல்லாதது ஆறுதல் . (ஒருவேளை தென்னிந்தியக் குடும்பம் போல)
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படம் சொல்லும் உணர்வுக்குத் தேவையான இரவின் அமைதியையும் பூடகத்தையும் சிறப்பாக வழங்குகிறது . அருமை
ஜி வி பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு பரபரப்பைப் பாய்ச்சுகிறது . சபாஷ்
பெரியவருக்காக காளி ஒத்துக் கொண்டு எஸ் பியைக் கொலை செய்ய, கிழங்கு என்ற அடையாளப் பெயர் கொண்ட நிலவெடி மூலம் முயலும் காட்சி வரை இந்தப் படத்தின் லெவலே வேறு .
ஆனால் அதற்குப் பிறகு படம் சுணங்கிக் கொண்டே போகிறது .
“நான் சொன்ன உடனே நீ என் கிட்ட , ‘ எஸ் பி உன்னை எப்போ அரஸ்ட் பண்ணாரு?’ ன்னு தானே கேட்கணும். ஏன் கேட்கல? அப்போ உனக்கு அது முன்னயே தெரியும் இல்ல? ” என்று சூரஜ் வெஞ்சரமூடு சொல்வது ….
“எதுக்குடி இங்க வந்தீங்கன்னு கேட்க வேண்டியவ, ஹார்லிக்ஸ் வேணுமான்னு கேட்கறா… என்னமோ இங்க தப்பு இருக்குப்பா.. ” என்று பெரியவரின் மகள் கேட்பது
படத்தை ஆரம்பித்து வைத்த விவகாரம் இறுதிக் காட்சியில் ஜஸ்ட் லைக் தட் முடிவது …. ( அங்கே விக்ரம் கொடுக்கும் சலிப்பு- விரக்தி- துளி அழுகை ரியாக்ஷன் .. ஆஸ்கர் தரம் )
– ஆகிய இடங்கள் மட்டுமே அதற்குப் பிறகு, அருண்குமாருக்கு சபாஷ் போட வைக்கின்றன .
மற்றபடி ஆரம்பத்தில் தனித்தன்மையுடன் இருந்த எல்லா கேரக்டர்களும் இடைவேளைக்கு முன்னாலேயே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஆகின்றன .
பையில் ஃபைல் வைக்க வேண்டிய இடத்திலும், பனியன் ஜட்டியை, ஷூ சாக்சைத் திணித்தது போன்ற அந்த இடைவேளைக் காட்டி , இந்தப் படத்தைப் பொறுத்தவரை அரைவேக்காட்டுத் தனத்தின் உச்சம் .
இரண்டாம் பகுதி முழுக்கவே செக்குமாடு .
முதல் பாதி அரைமணி நேரம் முன்பு வரை நல்லதோர் வீணை செய்து அதன் பின்னர் அதை புழுதியில் எறிந்து, அதுவும் போதாது என்று இரண்டாம் பகுதியில் அதை சுக்குநூறாக உடைத்துத் தள்ளுகிறார்கள் .
அதுவும் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வெகு ஜன மக்களுக்குப் புரியுமா என்ற கவலையே இல்லாமல் அவர்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
வேறு இடத்தில் மறைந்து வாழ்பவன் இயல்பாகவே தாடி மீசை காடு போல வளர்ப்பான் என்ற லாஜிக் ஓகே. (அல்லது மொட்டை. ஆனால் மொட்டை என்பது தொடர் வேலை. எனவே படத்தில் வருவது போல தாடி மீசைதான் சரி) அதே நேரம் விக்ரமின் கெட்டப்பிலும் கூட இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். வயதை மறைப்பதை விட முக்கியம், பொருத்தமான தோற்றம் .
முதல் காட்சியில் பெரியவர் வீட்டு வாசலில் வந்து கத்தி பெரியவரின் மகனிடம் அடி வாங்கிய பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் என்ன ஆச்சு என்ற சஸ்பென்சை நீட்டித்து இருந்தால் கூட , அது ஒரு பக்கம் படத்தை என்கேஜிங் ஆக வைத்துக் கொண்டு இருந்திருக்கும் . அதையும் சில காட்சிகளிலேயே குளோஸ் பண்ணி திரைக்கதையை முட்டு சந்தை நோக்கித் திருப்பி விடுகிறார்கள்.
எடிட்டர் ஜி கே பிரசன்னாவின் உழைப்பு இந்த தவறான திரைக்கதைப் போக்கால் வீணாகி விட்டது .
ஆனால் ஆர்ட் டைரக்டர் சி எஸ் பாலச்சந்தரும் , ஸ்டன்ட் இயக்குனர் போனிக்ஸ் பிரபுவும் தங்களை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள் .
உதவி செய்ய வந்த காளியையே, பெரியவரின் மகன் மகள்கள் எல்லோரும் குத்துகிறார்கள் . அவர்களை எல்லாம் மன்னித்து மன்னித்து நாயடி பேயடி வாங்கி மறுபடியும் மறுபடியும் மன்னித்து அப்புறமும் அப்புறமும் பேரடி பேரிடி எல்லாம் வாங்குகிறான் காளி….. ஏங்க, அவன் என்ன, பல்லாண்டு வாழ்க எம் ஜி ஆரா ?
அதே போல பெரியவரும் பெரியவர் மகனும் எஸ் பி யும் என்னதான் அயோக்கியர்கள் என்றாலும் அவர்கள் காளியோடு ஒரு டீல் பேசும்போது அவர்கள் அதற்கு மட்டுமாவது உண்மையாக இருந்தால்தானே அந்த கேரக்டர்களுக்கும்ஒரு உயிர்ப்பு இருக்கும்.
எல்லாமே புறம்போக்குகளுக்காக எச்சக்கலைகளாக ஈத்தரைகளாக இருந்தால் அதற்கு கும்பலில் வரும் அடியாட்கள் கேரக்டரே மேல் என்பது போல அல்லவா இருக்கிறது ?
அப்பேர்ப்பட்ட ஆட்கள் தனக்கு துரோகம் செய்யும்போதும் அவர்களை மன்னித்து மன்னித்து தொடர்ந்து காளி அடி வாங்கும் போது, ‘பேசாம நீ செத்துரு காளி .. நாங்க வீட்டுக்குப் போகணும்’ என்ற உணர்வே எழுகிறது.
இப்படியாக மாமியாராக ஆரம்பித்து, கழுதையாவது தெரியாமலே கட்டை எறும்பாக முடிகிறது படம்.
அனேகமாக இதுவே இயக்குனர் அருண்குமாரின் பாணியோ என்னவோ.
ஏ
னெனில் அவர் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி என்று இயல்பாக ஒரு படம் செய்தார் . படம் ஹிட் . அடுத்து விஜய் சேதுபதியை வைத்து பண மதிப்பாக ஒரு பெரிய படம் செய்தார் . அவருக்கு லாபம் . ஆனால் புரடியூசருக்கு அல்ல.
அடுத்து சித்தார்த்தை வைத்து சித்தா என்று ஒரு நல்ல படம் செய்தார் . படம் வெற்றி .ஆனால் அவருக்கு பெரிய வருமானம இருந்திருக்காது .
இப்போது விக்ரமை வைத்து பண மதிப்பாக ஒரு பெரிய படம் செய்து இருக்கிறார் . அவருக்கு லாபம் இருக்கும் . ஆனால் புரடியூசருக்கு சிந்துபாத் அளவுக்கும் சேதாரம் வர வாய்ப்பில்லை.
இந்த வரிசையில் அடுத்து அருண்குமார் செய்யும் படம் நல்ல படமாக இருக்க வாய்ப்பு உண்டு . ஆனால் அந்த அடுத்த படம் என்பது வீர தீர சூரன் PART 1 தானா? அல்லது அதற்கும் அடுத்த படமா என்பதுதான் இப்போது வீர தீர சூர கேள்வி
வீர தீர சூரன் PART 2… சும்மா சொல்லக் கூடாது , பில்டிங் செம ஸ்ட்ராங்.