
தொழிலதிபர் நாசே ராமச்சந்திரனின் மூத்த புதல்வரான ராஜேஷ் ராமச்சந்திரன் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி ஃபிங்கர் பிரின்ட் புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி …

ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜேஷ் யாதவுடன் சேர்ந்து, கதைகள் கேட்டு, பெருமாள் பிள்ளை என்பவர் சொன்ன கதை பிடித்துப் போக, தனது தம்பி துருவாவை கதாநாயகனாக ஆக்கினார். கதாநாயகியாக மிருதுளா பாஸ்கர், முக்கிய வேடத்தில் கிஷோர் , மற்றும் பூ ராம் ஆகியோர் நடித்திருக்கும் அந்தப் படத்தின் பெயர் திலகர்.
விடுதலைப் போராட்டத் தலைவரும் நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குருவுமான லோகமான்ய பாலகங்கதர திலகரின் பெயரில் படத்தின் பெயர் இருந்தாலும் இது நம்ம ஊர் மண்வாசனைப் படம்
1990 களின் காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் முக்குலத்து மக்களின் வாழ்வில் நிகழ்வதாக சித்தரிக்கப்படும் படம் இது. மிக அமைதியாக நல்லவனாக அன்போடு வாழ விரும்பும் ஒருவனை ரொம்ப சீண்டினால் என்ன ஆகும் என்பதை ஆக்ரோஷமாக சொல்லும் இந்தப் படத்தின் முடிவில் வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்று சொல்கிறார்களாம். (புண்ணியமுண்டாகட்டும்!)

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரக் கனி, படத்தை வாங்கி வெளியிடும் கலைப்புலி எஸ். தாணு , ஹீரோக்கள் ஸ்ரீகாந்த் , கடைசி நேரத்தில் வந்து இணைந்த விஜய் சேதுபதி என்று பல பிர(ற)’பல’ங்கள் !
திரையிடப்பட்ட பாடல்களில் கண்ணனின் இசையும் படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு கேரக்டரில் நடித்து இருக்கும் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் மிக சிறப்பாக இருந்து, சீனு ராமசாமி , சமுத்திரக்கனி ஆகியோர் பேசும்போது, அவர்களால் பாராட்டப்பட்டது.
ராஜேஷ் யாதவ்”எடுத்த உடனேயே துருவாவை நடிக்க வைக்க முடிவு பண்ணல. . ஏன்னா இந்தக் கதைக்கு ஷூட்டிங்ல ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும் . அதனால காரை விட்டுட்டு சென்னைல பல சமயம் சைக்கிள்ல பயணிக்க வச்சோம். கஷ்டமான உடல் வேலைகள் எல்லாம் கொடுத்தோம். அப்புறம்தான் நடிக்க வச்சோம் ” என்றார் .
“படத்துக்கான கதைப் பின்புலம் அமைந்த .. அதற்கேற்ப படபிடிப்பும் நடந்த பகுதியில், நாங்கள் இருந்த முப்பது நாட்களில் நாற்பது கொலைகள் விழுந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார் . அந்த இடத்தில் அந்த மக்கள் பின்னணியில் வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்ற கருத்தை வைத்து படம் இயக்கி இருக்கும் இயக்குனர் பெருமாள் பிள்ளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ” என்றார் பூ ராம்.
“கிஷோர் சிறந்த நடிகர் . படத்துல அவரையும் ஹீரோ துருவாவையும் பாக்கறதுக்கு சொந்த அண்ணன் தம்பியை பாக்கற மாதிரியே இருக்கு . படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” — இப்படிக் கனிந்தது சமுத்திரக் கனி

“நான் இந்த நிகழ்ச்சிக்காக வரும் வழியில், இன்னும் கடலில் கரைக்கப்படாத நிறைய பிள்ளையார் சிலைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். இந்தப் படத்தின் பேருக்கு சொந்தமான சுதந்திரப் போராட்ட தலைவர் லோகமான்ய பால கங்காதர திலகர்தான் , முதன் முதலில் இப்படி பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கி விநாயகர் சிலைகளை வச்சு வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அன்று வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நமது மக்களை திரட்ட ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்தினார் ” என்று ஆரம்பித்த கரு.பழனியப்பன், .
தொடர்ந்து “ஒரு ஆச்சர்யம் என்னன்னா, திலகர் என்பது வடநாட்டுப் பேரு . ஆனா நம்ம மாநிலத்துல தென் மாவட்டங்கள்ல நிறைய ஆட்களுக்கு இந்த பேரை வைக்கிற அளவுக்கு எப்படி இந்தப் பேரு இவ்வளவு பிரபலமா ஆச்சு?
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற கோஷத்தை பிரபலப்படுத்தியவர் திலகர் . ஆனா பாருங்க… அந்த கோஷத்தை முதன் முதலில் சொன்ன லாலா லஜபதிராய் பேரையோ அவர்களோடு இணைந்து செயல்பட்ட விபின் சந்திர பால் பேரையோ நம்மாளுக யாரும் தன் பிள்ளைகளுக்கு வைக்கல . ஆனா திலகர் பேரைத்தான் வச்சான் . காரணம் அவரோட அதீத நேர்மையும் துணிச்சலும்தான் .


சுதந்திரப் போராட்டத்தின் அங்கமா ஒரு மாணவன் வெடிகுண்டு வச்சபோது அவனுடைய சுதந்திர உணர்வை பாக்காம அதை கண்டிச்சு எல்லா காங்கிரஸ் தலைவர்களும் எழுதினாங்க. திலகர் மட்டும்தான் ‘அந்நியனை விரட்ட அதுவும் ஒரு போராட்ட வழி’ன்னு சொல்லி அந்த மாணவனை பாராட்டினாரு . ” என்று, திலகரின் வரலாற்றையே சுருக்கமாக சொன்னார் .
அமீர் பேசும்போது ” கரு. பழனியப்பன் திலகர் பத்தி பிரம்மாதமா பேசினாரு.திலகரை பத்தி இப்ப யாருக்கு தெரியும் ?எனக்கு தெரிஞ்ச திலகர்னு ஒருத்தன் விவகாரமான ஆளு. காந்தின்னா மகாத்மா காந்தின்னு இப்போ எத்தனை பேருக்கு தெரியும்.? எனக்கு தெரிஞ்சு மதுரையில் காந்தி என்ற பேருல நல்ல மனுஷன், சாராய வியாபாரி, கட்டபஞ்சாயத்து பண்றவன்னு பலபேர் இருந்தாங்க .
அதனால இந்தப் படத்துல எதாவது ஒரு இடத்துல நிஜமான திலகர் பத்தி கொஞ்சம் சொல்லிடுங்க . அட்லீஸ்ட் போட்டோவாவது காட்டிடுங்க “என்றார்.
செஞ்சுடலாம்ல?