நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் பாலாஜி தரணிதரனை, வாசன் விஷுவல் வென்ச்சர் நிறுவன உரிமையாளர்கள் கே எஸ் சீனிவாசன் மற்றும் சிவராமன் இருவரும் தங்களுக்கு அடுத்த படம் இயக்கித் தரும்படி ஒப்பந்தம் செய்தார்கள்.
தனது அடுத்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை புரிந்து கொண்டிருந்த பாலாஜி தரணிதரன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல கதைகளை எழுதி , திருப்தி இல்லை என்று அவற்றை எல்லாம் விட்டு விட்டு கடைசியாக தனக்கு திருப்தி தரும்படி ஒரு கதையை உருவாக்க…..
ஆரம்பிக்கிறது ஒரு பக்கக் கதை . (படத்தின் தலைப்பே அதுதான் )
படத்தின் ஹீரோவாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கிறார் . சிறுவயது முதலே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததோடு தேசிய விருதையும் பால்ய வயதிலேயே பெற்றவர் காளிதாஸ் .
தமிழ்ப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகும் காளிதாசை மீடியா முன்பு அறிமுகம் செய்ய, தனது பாபநாசம் படத்தின் ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு வந்திருந்தார் கமல்ஹாசன் .
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சித்ரா லட்சுமணன் “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு முதல் படத்துல சொன்னார் பாலாஜி தரணிதரன். ஆனா அதை எல்லாம் அவர்தான் வச்சிருக்கார் . அதுல ஒரு பக்கத்தைதான் இப்போ ஒரு பக்கக் கதையா எடுக்கறார் போல இருக்கு ” என்றார் .
தயாரிப்பாளர் சீனிவாசன் ” ஒன்றரை வருஷமா பல கதைகளை எழுதுவார் . அப்புறம் ‘வேணாம். திருப்தியா இல்லை’ன்னு வேற கதை எழுதுவார் . ஒரு நிலையில் எங்க கிட்ட வந்து ‘உடனே படம் பண்ணனும்னு நினைக்கறீங்களா சார்? தேவையான டைம் எடுத்துக்கட்டுமா?’ன்னு கேட்டு , அவரே திருப்தியான கதைதான் இந்த ஒரு பக்க கதை ” என்றார் .
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை தயாரித்த ராஜ்குமார் “மிக அற்புதமான இயக்குனர் பாலாஜி தரணிதரன் . நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம் எடுக்கும்போது சிரமப்பட்டு எடுத்தோம் . பல சமயம் அவரு சில நியாயமான விஷயங்கள் கேட்கும்போது கூட , ‘ நான் ரொம்ப சின்ன புரடியூசர் . என்னால் முடியாதே’ ன்னு என் நிலமைய சொல்லுவேன் . கொஞ்சம் கூட மனம் கோணாம ‘சரிங்க சார்’னு அட்ஜஸ்ட் பண்ணி எடுப்பார் . அப்படி எடுத்து ஜெயிச்சோம் . நிச்சயமா சொல்லுவேன் . தயாரிப்பாளர் சீனிவாசன் ரொம்ப லக்கி ” என்றார் .
“என் நிறுவனத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த முதல் படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் . அதற்காக பாலாஜி தரணிதரனுக்கு நன்றி ” — இது ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன சதீஷ் குமார் .
நெகிழ்வோடு பேசிய ஜெயராம் “கமல் சார் நடித்த மரோ சரித்திரா படத்தை சின்ன வயசில் பார்த்துட்டு , இரண்டு நாள் பேச்சே வராமல் இருந்தவன் நான் . அவர் கூட செர்ந்தெல்லாம் நான் நடிப்பேன் என்றோ, என் மகனை அவர் வந்து அறிமுகம செய்வார் என்றோ நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை . நன்றி என்ற வார்த்தை அவருக்கு சொன்னால் போதாது . அவருக்கு என்றும் கடமைப் பட்டு இருப்பேன்” என்றார் .
இயக்குனர் பாலாஜி தரணிதரன் “என் முதல் படத்தின் பாடல்களை வெளியிட்டது கலைஞானி கமல்ஹாசன் . அவரோட பேரை நான் அந்தப் படத்தில் காப்பாத்தினேன் . இந்தப் படத்தின் அறிமுக விழாவுக்கே அவர் வந்து இருக்காரு. இந்தப் படத்தின் மூலமும் அவர் பேரை காப்பாத்துவேன் ” என்று இரத்தின சுருக்கமாக முடிக்க ,
அடுத்து பேசிய காளிதாஸ் அப்பா ஜெயராம் வழியில் “கமல்ஹாசன் சாருக்கு என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் “என்றார் .
கமல் தனது பேச்சில் “ஜெயராம் மீது கொண்ட அன்புக்காக நான் வந்திருக்கிறேன். சினிமா உலகமே என் குடும்பம் . இங்கே என்னோடு சண்டை போடுபவர்கள் கூட என் குடும்பம்தான் . அதெல்லாம் சம்பந்தி சண்டை மாதிரி. ஆனால் நெருங்கிய உறவுகள் இருக்கும் இல்லையா ? அப்படி ஒருவர் ஜெயராம் . அவரை பிடிக்காதவர்களே கிடையாது . அவர் பெயரைக் காக்கும் பிள்ளையாக அவரை மறக்காத பிள்ளையாக காளிதாஸ் இருக்கவேண்டும் . இது ஒரு நிகழ்ச்சிதான். மற்றபடி காளிதாசை அறிமுகப்படுத்துபவர் என்று என்னை சொல்லாதீர்கள் . அவரை அறிமுகப்படுத்துபவர் இயக்குனர்தான் ” என்றார்
ஒரு பக்க கதை பாலாஜி தரணிதரனால் சரித்திரமாகட்டும்