கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா மற்றும் தெஸ்பியான் பிலிம்ஸ் சார்பில் சைலஜா தேசாய் ஃபென் ஆகியோர் தயாரிப்பில் பர்ஸானா பலத்திங்கல் , ஆதிசேஷன், சினான், டோவினோ தாமஸ் நடிப்பில் ஜித்து மாதவன் எழுத்தில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் இயக்கி வெளிவந்து மலையாளத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழிலும் வந்திருக்கும் படம்.
சிறையில் இருந்து சிறு வயது மகன் பாலனோடு (ஆதிசேஷன்) விடுதலையாகி வருகிறாள் ஒரு பெண் (பர்ஸானா பலத்திங்கல்).
சிறையில் இருக்கும் ஒரு பெண் தாதா மற்றும் போலீஸ் துறை இரு தரப்பும் செய்ய வந்த உதவிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்து டீக்கடையில் வேலைக்குச் சேர்கிறாள்.அங்கே ஒருவன் தவறாக நடக்க முயல, அங்கிருந்து வெளியேறுகிறாள்.
பல இடம் பல வேலை என்று அவள் முயல ஒவ்வொரு இடமும் ஒரு பிரச்சனை . . அதே நேரம் அவள் ஒன்றும் நல்லவளும் அல்ல.
ஒரு நிலையில், வனப்பகுதியில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில், ஒரு பெரிய பங்களாவில் தனியாக வசிக்கும் மூதாட்டியை பராமரிக்கும் வேலை கிடைக்கிறது.
தினமும் மதியம் ஒரு மணிக்கு மூதாட்டியின் மகன் வெளிநாட்டில் இருந்து பேசுவார் . அவருக்கு பதில் சொன்னால் போதும். மற்றபடி நிம்மதி.
பாலனை பள்ளியில் சேர்க்கிறாள்.
பள்ளி வாகனம் நிற்கும் இடத்தில் இருந்து வீடு சற்று உள்ளே போகவேண்டும் . எனவே எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும் வரை அங்கேயே நிற்க வேண்டும் என்பது பாலனுக்கு அம்மாவின் கட்டளை.
ஒரு நிலையில் ஜெயிலில் உதவிய பெண் தாதா தேடி வந்து விட , பிரச்சனை.
அதை சமாளித்தால் மூதாட்டி இறந்து போகிறாள், அவள் இறந்ததை சொன்னால் வேலை போய் விடும் என்பதால் மூதாட்டியின் ஆசைப்படி, தானே மூதாட்டியைப் புதைத்து, அங்கே ஒரு வாழைக் கன்று வைக்கிறாள்.
ஒரு நாள், பாலன் பள்ளிக்கு போய் இருக்கும் நிலையில் , மூதாட்டியின் உறவினர்கள் வந்து விட, அங்கே துப்பாக்கி சூடு நடக்கிறது.
வாகன நிறுத்தத்தில் பாலன் காத்திருக்க அம்மா வரவில்லை. போலீஸ்தான் வருகிறது.
போலீசிடம் இருந்து தப்பும் பாலன், மாநிலம் கடந்து ஓடி ஒரு தாதாவிடம் (டோவினோ தாமஸ்) தஞ்சம் .புகுகிறான் . பல வருடம் அங்கே வளர்ந்து டீன் ஏஜுக்கு மாறி (சினான்) மீண்டும் அம்மாவை தேடி வருகிறான்.
சிறுவயதில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தான் தப்பித்த காரணத்தால் தனது காதலியை இழந்த ஒரு போலீஸ்காரர் , தன் மேல் உள்ள கோபத்தில் அம்மாவைப் பழிவாங்கி இருப்பது பாலனுக்கு தெரிகிறது. பாலனுக்கு அவன் அம்மா மீண்டும் கிடைத்தாரா இல்லையா என்பதே இந்தப் படம்.
படத்தின் முதல் காட்சியில் இருந்து இடைவேளை அம்மா மகன் என்று இரண்டே கேரக்டர்கள். ஆனால் ஒரு நொடி கூட கண்ணை எடுக்க முடியாமல் மொத்தமாக ஈர்த்துக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் சிதம்பரம்.
அட்டகாசமான அந்த லொக்கேஷன் சிதம்பரத்தின் இயக்கம், பர்ஸானா பலத்திங்கல் , ஆதிசேஷன், ஆகியோரின் அற்புதமான நடிப்பு , ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு, சுஷில் ஷியாமின் இசை எல்லாம் .. ஆஹா ஆஹா .. எப்பேர்ப்பட்ட ஓர் அற்புதமான காட்சி அனுபவம் . பிரம்மிப்பு. பிரம்மிப்பு.
இரண்டாம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளிலும் வித்தியாசமான கதைப் போக்கு கவனிக்க வைக்கிறது. ரொம்ப சோதிப்பது டோவினோ தாமஸின் காட்சிகள்தான். எனினும் படம் முடியும் நேரத்தில் அட்டகாசமான ஒரு திரைக்கதை திருப்பம், ‘அட!’ போட வைக்கிறது. திரைக்கதையும் விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது
யூகிக்க முடிந்த விஷயம் என்றாலும் கிளைமாக்ஸ் ஒரு கவிதை. எனக்கு பாலு மகேந்திரா இயக்கிய யாத்ரா ஞாபகம் வந்தது.
நல்ல எழுத்து, மயக்கும் லொகேஷன்கள் , நல்ல நடிப்பு இவற்றால் கவனிக்க வைக்கிறது பாலன் – the boy.