கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன், இவற்றுக்கு முன்பு பதினெட்டு கன்னடப் படங்களையும் ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கி விட்டு, பனிரெண்டு படங்களுக்கு கதை திரைக்கதை வசனமும் இரண்டு படங்களுக்கு திரைக்கதையும் எழுதி விட்டு, இரண்டு படங்களை தயாரித்தும் விட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.
கன்னட சினிமாவில் இவ்வளவு சாதித்த இவர், யாரோ கன்னட சினிமா பிரபலத்தின் வாரிசு என்றால் இது பெரிய விஷயம் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ,வேலை விஷயமாக அங்கே போனவர் என்றால் அது இமாலய சாதனை அல்லவா?
அந்த தயாள் பத்மநாபன் அடுத்து இயக்கி , ஜூலை பத்தாம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு. !
ம்ஹும் …! கலைவாணர் – பாகவதர் இருவரும் கைது செய்யப்பட்ட – லட்சுமிகாந்தன் என்ற மஞ்சள் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட– பரபரப்பான சம்பவத்தை பற்றிய படம் அல்ல இது.
”எந்த குற்றத்துக்கும் தூக்குத் தண்டனை என்பது சரியா? திருந்துவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் அல்லவா? அதைப் பற்றி படம் இது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் கூட திருந்த வாய்ப்பு தரலாம் . இந்தப் படம் தூக்குத் தண்டனை பற்றி விவாதிக்கிற பரபரப்பான சமூக அக்கறையுள்ள படம் ” என்கிறார் தயாள் பத்மநாபன்.
2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாள் பத்மநாபன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் ம் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனம் கவிதாபாரதி.
படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மட்டும் கலந்து கொண்டு பேசியது அழகு.
தர்புக சிவா இசையில் படத்தில் மூன்று பாடல்கள் , கதையின் சூழலுக்கு ஏற்ற பாடல் ஒன்றை இயக்குனரே எழுத,பாரதியின் பாடல் ஒன்றையும் பாரதிதாசன் பாடல் ஒன்றையும் பயன்படுத்தி உள்ளனர்.
புரட்சிகரமான பாடல் வரிகளுக்கு பெயர் பெற்ற பாரதிதாசனின் எழுத்தில் வந்த, ” முத்தம் ஒண்ணு தாடா..” பாட்டில், ‘பயிற்று நெற்றே…” போன்ற மண் வாசனை கொண்ட அற்புதமான வார்த்தைகளை காண முடிந்தது.
நிகழ்ச்சியில் பேசிய கவிதா பாரதி, ” பொதுவாக அரசியல் ரீதியாக நாங்களும் ரங்கராஜ் பாண்டே வும் வேறு வேறு அணியில் இருப்போம். ஆனால் நடிகராக அவர் சிறப்பாக பணியாற்றினார். பொதுவாக பாரதியாருக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் பாரதிதாசனுக்கு கொடுக்கப்படாத நிலையில் இந்தப் படத்தில் அவரது பாடல் இருப்பது மகிழ்ச்சி.”என்றார்.
ரங்கராஜ் பாண்டே பேசும்போது, ” பாரதிதாசனுக்கு .கொடுக்கப்படும் முக்கியத்துவம் பாரதிக்கு இல்லை என்பதுதான் என் பார்வை. கவிதாபாரதி பேசும்போது மேடையில் இருக்கும் எல்லோருமே எனக்கு எதிராக என்பது போல பேசினார் . அப்படி இல்லை. மேடையில் என் தரப்பு ஆட்களும்இருக்கலாம். . இப்படி நாம் மாறி மாறி பேசிக் கொண்டு இருப்பதால் பேசாமலே இருப்பவர்கள் ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள் . இரண்டு தரப்பையும் விட்டு விட்டு மூன்றாவது தரப்புக்கு மக்கள் ஒட்டு போட்டுவிட்டார்கள்” என்றார். இப்படி முதல்வரின் சட்டமன்ற பேச்சின் எதிர்வினை இந்த ஆடியோ லாஞ்சிலும் எதிரொலித்தது. (திரிஷா – விஜய் கேக் கொண்டாட்ட புகைப்படத்தை மேடையில் பேசிய யாரும், அதுவரை பார்க்கவில்லை போல)
ரங்கராஜ் பாண்டே தொடர்ந்து பேசியபோது, ” லிஸ்ஸி ஆண்டனி, பிரிகிடா , வெற்றி இவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இயக்குனர் தயாள் பத்மநாபன் சிக்கனத்துக்கும் திட்டமிடலுக்கும் பெயர் போனவர் . ஒரு நல்ல படம் எடுக்க அறுபது லட்ச ரூபாய் போதும் என்கிறார். எழுபது ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் சிறப்பாக படத்தை எடுத்து விடுவேன் ‘ என்கிறார் ” என்று சொன்னது ஓர் எதிர்பாராத விஷயம்.
தனது பேச்சில் இதற்கு விளக்கம் கொடுத்த தயாள் பத்மநாபன் ” நான் சொன்னது கன்னடத்தில்தான், தமிழில் அல்ல. தமிழில் குறைந்த பட்சம் ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி வரை ஆகும் . காரணம் இங்கே நடிகர் நடிகை டெக்னீசியன் சம்பளம், லொகேஷன் வாடகை எல்லாமே ரொம்ப அதிகம்” என்றார்
ரங்கராஜ் பாண்டே வின் எளிமையைப் புகழ்ந்த சுப்பிரமணிய சிவா, இயக்குனர் பற்றி சொல்லும்போது “தேவை இல்லாமல் ஒரு ஷாட் எடுக்க மாட்டார். திட்டமிட்டு செயல்படுவார் ..” என்று பாராட்டினார். அது உண்மை என்றே இயக்குனருடன் பணியாற்றியவர்களும் சொல்கிறார்கள்.
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைக் கொலைகள், மிருகத்தனமான துரோகக் கொலைகள் இவற்றை பார்க்கும்போது , குற்றவாளிகளை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் என்றே உணர்வே பொதுப் புத்தியில் அடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் , எத்தகைய குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்ற கருத்தையும் சமமாகப் பேசுவது சவாலான விஷயம்தான். ஆனால் இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது வாழ்வியல் அனுபவங்களாக பேசிய இரண்டு விஷயங்கள் அவர் அந்த சவாலில் சாதிப்பார் என்ற உறுதியைத் தருகிறது .
” விழுப்புரத்தில் இருந்து பெங்களூர் சென்று வேலை கிடைத்து வாங்கிய முதல் சம்பளத்தில் ஆசை ஆசையாக ஒரு கீ போர்டு வாங்கினேன். நாங்கள் குடியிருந்த பகுதியில் ஒரு ரவுடி இருந்தான் . ஒரு நாள் எனது அறைக்கு வந்து , ” குடிக்க எனக்கு காசு இல்ல. உனக்கு எதுக்குடா கீ போர்டு ?’ என்று சொல்லி விட்டு தூக்கிக் கொண்டு போய் விட்டான். என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று ஒரு மாதம் வெறி பிடித்து அலைந்தேன்.
என் நண்பரான ஓர் ஈழத் தமிழர்தான் ‘ அவன் சுயமா சம்பாதிக்க வக்கில்லாத பிச்சைக்காரன் நாம சம்பாதிச்சுக்கலாம் விடு . ..” என்று சொல்லி சொல்லி என் கொலை உணர்ச்சியை மாற்றினார். அவர் அதை செய்யாமல் விட்டு இருந்தால் நானும் கொலைகாரனாக மாறி இருப்பேன்.
பின்னாளில் நண்பர் ஒருவரை நம்பி பல லட்சம் இழந்தேன். மிக வறுமை. ரயிலில் போய்க் கொண்டு இருந்தேன். எதிர் இருக்கையில் ஒரு தம்பதி . பெண்ணின் கழுத்தில் நிறைய நகை. . நகையை கழட்டி பையில் வைக்க கணவர் சொல்ல மனைவியும் கழட்டி வைத்தார் . ஒரு நிலையில் இருவரும் தூங்கி விட்டார்கள். எனக்குள் ஒரு எண்ணம் வந்தது. நாம் இந்த நகையை தூக்கிக் கொண்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடலாம், அவர்களுக்கு தெரிய போவது இல்லை என்று தோன்றியது .
கூடவே இன்னொரு எண்ணம். . ஒரு கீ போர்டுக்கு நமக்கு கொலை வெறி வந்ததே. அது நியாயம் என்றால் , விழித்துப் பார்க்கையில் நகை இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும் ? அது என்னவாக இருந்தாலும் அது நியாயம்தானே என்று தோன்றியது . திருட்டு நினைப்பில் இருந்து வெளியே வந்தேன்.
ஒரு சூழலில் மனதில் வரும் தீய எண்ணத்தை வெல்பவர்கள் குற்றவாளியாக ஆவதில்லை . வெல்ல முடியாதவர்கள் குற்றவாளி ஆகிறார்கள் . எனவேதான் எந்த குற்றத்துக்கும் தூக்கு தண்டனைதான் தீர்வா என்ற விவாதத்தை இந்தப் படம் செய்கிறது ” என்றார் இயக்குனர் தயாள் பத்மநாபன் .
குற்றம் செய்யாத ஒருவரை குற்றவாளி என்று போலீசை நம்ப வைத்து, அவரை தூக்குத் தண்டனை மேடை வரை கொண்டு போய் , கடைசி நேரத்தில் உண்மையை சொல்லி, ”இப்போது நாங்கள் வந்து உண்மைகளை சொல்லாவிட்டால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டு இருப்பீர்கள் . அதன் பின் இவருக்கு எப்படி நிவாரணம் வழங்க முடியும். தண்டனை என்ற பெயரில் ஒருவரை கொன்று விட்டால், சட்டம் செய்த தவறுகளுக்கு யார் பதில் சொல்வது?” என்ற கேள்வியை முன் வைத்து ,
மோகன் நளினி நடிக்க, ‘சட்டத்தை திருத்துங்கள்’ என்ற ஒரு படத்தை 1984 ஆம் ஆண்டு ராம நாராயணன் இயக்கி இருந்தார் . டெக்னிக்கலாக இருந்த காரணத்தால் அந்தப் படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. .
ஆனால் தயாள் பத்மநாபனின் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ உணர்வுப் பூர்வமாக இருக்கிறது. இது வெல்லும்.