லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வினோத் கிஷன், கவுரி கிஷன், ரோகினி, லகுபரன் மற்றும் பலர் நடிப்பில் ஜகன் விஜயா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் பகுப்புத்திரை படம் என்கிறார்கள் அதாவது ஒரே நேரத்தில் திரையை இரண்டு பாதியாக மேலிருந்து கீழாகப் பிரித்து இரண்டு காட்சிகள் வரும் (ஸ்பிலிட் ஸ்கிரீன் என்பதை எல்லாரும் நேரடியாக மொழி பெயர்த்து பிளவுத் திரை என்கிறார்கள் . வாயில நல்லா வருது )
இளம்பெண் ஒருத்தியை ( கவுரி கிஷன்) சிலர் கடத்தி ஒரு வீட்டில் அறையில் அடைத்து வைக்கிறார்கள் . அந்தப் பெண் கையில் ஒரு பழைய போன் கிடைக்கிறது. அதில் இருந்து ஒரே நம்பருக்குத்தான் போன் போகிறது ( டயல் பேட் பழுதானால் சில எண்களுக்கு உரிய பொத்தான்களைப் பயன்படுத்த முடியாது என்பது ஓகே. . ஆனால் ஒரு நபருக்குத் தவிர ஏன் மற்ற நம்பர்கள் எதுக்குமே போகலை என்பது தெரியல. ஏதாவது விஞ்ஞானமா இருக்கும்)
அந்த பக்கம் போனை எடுப்பவர் (வினோத் கிஷன்) பேச்சு மற்றும் மூளை வளர்ச்சி மாற்றுத் திறனாளி . அவர் அம்மா (ரோகினி) அலுவலக வேலைக்குப் போகிறவர் . எனவே மகனை வீட்டில் வைத்துப் பூட்டி விட்டுப் போகிறவர் . கடத்தப்பட்ட பெண் இவரிடம் போனில் பேசி உதவி கேட்க,இவரால் அந்தப் பெண்ணுக்கு உதவ முடிந்ததா இல்லையா ? பெண் காப்பாற்றப்பட்டாளா இல்லையா என்ன நடந்தது என்பதே படம் .
அதாவது ஒரு பக்கம் அந்த மாற்றுத் திறனாளி இளைஞன் வீட்டில் நடப்பது காட்டப்படும் . மறுபக்கம் அந்தப் பெண் இருக்கும் அறையில் நடப்பது காட்டப்படும் . இரண்டும் ஒரே நேரத்தில் காட்டப்படும் .
வினோத் கிஷன் கஷ்டப்பட்டு பேசி நடித்துள்ளார் . பாராட்டுக்கள் . ஆனால் அவரது பேச்சின் அதீத அளவு ஒரு நிலையில் பரபரப்பு பரிதாபம் இவற்றுக்கு மீறி தலைவலியை உண்டு பண்ணுகிறது .
கவுரி கிஷனும் சிறப்பாக நீளமான ஷாட்களில் அனாயசமாக நடித்துள்ளார் . ஆனால் போனில் உதவி கேட்கும் நபரிடம் “இது கூட தெரியல . உங்க அம்மா என்ன உன்னை வளத்து இருக்காங்க ?” என்று கேட்பதெல்லாம் …….
ஒரு கதபாத்திரம் ஒரு சூழலில் எப்படி இயங்கும் என்ன பேசும் என்ற புரிதல் இல்லாத அரைவேக்காட்டுத்தனம் பல இடங்களில் .
இதெல்லாம் கூட விட்டுவிடுவோம் .
சாதரணமாக டி வி சீரியல்களில் கூட இரண்டு பேர் போன் பேசுவது போல காட்டும்போது இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் பேசுவதைக் காட்டுவார்களே அது போல் தான் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன . வெகு சில காட்சிகளில் மட்டுமே இங்கே வேறு சம்பவமும் அங்கே வேறு சம்பவமும் நடக்கிறது . அதில் கூட ஒரு பக்கம் உள்ள காட்சி, ஒரு நிலையை எட்ட வேண்டும் என்பதற்காக இடது பக்கம் உப்புமா முழுசாக கிண்டி முடிப்பதையும் இன்னொரு பக்கம் ஒரு நபர் சும்மா செஞ்சு வச்ச சிலையாட்டம் நிற்பதையும் காட்டுகிறார்கள்
இதுக்கு எதுக்கு ஸ்பிலிட் ஸ்கிரீன் என்று பெரிய பெயர் எல்லாம் ? பேரு வச்சா போதாது . சோறும் வைக்கணும் இல்லையா?
ஸ்பிலிட் ஸ்கிரீன் படம் என்றால் என்ன ?
இந்த பக்கம் ஒரு கதை நிகழ வேண்டும் . அந்த பக்கம் ஒரு கதை நிகழ வேண்டும் . இந்த பக்கம் பேசும்போது அந்த பக்கம் சைலன்ட்டாக இருக்க வேண்டும் . இரண்டிலும் பேசினாலும் கூட, இந்த பக்கம் பேச்சுக்கு இடையே அமைதி இடைவெளி நிகழும்போது அந்தப் பக்கம் பேச வேண்டும் . அல்லது ஒரே நேரத்தில் பேசினால் இரண்டும் புரியும் படி வார்த்தைகள், ஒலிக் கலவை இருக்க வேண்டும் . ஆனால் அரிதாக ஓரிரு சமயங்களில் மட்டும் தேடிக் கண்டு பிடிக்கும் அளவுக்கே இந்தப் படத்தில், மேலே சொன்னவற்றில் ஒன்றிரண்டு நிகழ்கிறது. இந்தப் படத்தில் காட்டும் அளவுக்கு சாதாரண சினிமாக்களிலேயே பலர் செய்து விட்டார்கள் . என்ன.. அவர்கள் சோறு மட்டும் வைத்தார்கள் . பேரு வைக்கலை. )
முக்கியமாக ஸ்பிலிட் ஸ்கிரீன் படம் என்றால் ஒரு பக்கம் நடக்கும் கதைக்காக எந்த காம்ப்ரமைஸ்சும் செய்யாமல் மறு பக்கக் கதையில் காட்சிகள் நிகழ வேண்டும் . (ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. முன்னரே சொன்னது போல உப்புமா செய்வது எப்படி என்ற சமையல் குறிப்பை முழுக்க காட்டுகிறார்கள். )
எந்தப் பக்கம் நடக்கும் கதையையும் தனியாகப் பார்த்தாலும் இயல்பாக அதன் போக்கிள் எந்தத் தடையும் இன்றி காட்சிகள் போக வேண்டும் . அதற்கு ஏற்ப நேர அளவைக் கணக்கிட்டு காட்சிகளை அமைக்க வேண்டும் . வசனம் எழுத வேண்டும் . சிறு சிறு உரசல்கள் வந்தால் எடிட்டிங்கில் சரி செய்ய வேண்டும் . அப்போதும் எடிட்டிங்கிலும் ஓரு ஷாட் கூட தேவை இல்லாமலோ தேவை இல்லாத நீளத்திலோ வரக் கூடாது அப்போதுதான் அதற்கு ஸ்பிலிட் ஸ்கிரீன் படம் என்று பெயர் . இவை ஏதும் இல்லாமல் அப்புறம் எப்படி ?
சரி கதை திரைக்கதை எப்படி என்றால் அதிலும் பாராட்டும்படி எதுவும் இல்லை .
“ஒரே படத்தில் இரண்டு கதை… இந்தப் பக்கம் ஒரு கதை அந்தப் பக்கம் ஒரு கதை…. ” என்று இவர்கள் படத்தை மக்களிடம் தவறாக அறிமுகப் படுத்தியதே பெரிய தப்பு .
இப்படி எல்லாம் சொல்லாமல் வேறு விதமாக படத்தை அறிமுகம் செய்து ரிலீஸ் செய்து இருந்தால் கூட, படம் பார்க்கும் ரசிகனுக்கு ‘அட’ என்ற ஆச்சர்யம் ஏற்பட்டு அது படத்துக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கும் .
புல் தடுக்கி பயில்வான் தலையில் ராஜராஜ சோழன் கிரீடத்தை வைத்தால்…. கழுத்து என்ன ஆகும் ?
வித்தியாசமான முயற்சிகளை பலவீனப்படுத்துவது நம். நோக்கம் இல்லை . அவை உண்மையிலேயே அக்கறையான முயற்சிகளாக இருக்க வேண்டும் . அரைகுறைக் கட்டுமாணங்கள் விரைவில் சிதிலம் அடைந்து அடுத்தவர்கள் வருவதற்கான வழியையே அடைக்கும்