நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் வழங்க, லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் .கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா ஆகியோர் தயாரிக்க,
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி ஆண்டனி, அருண் பாலாஜி நடிப்பில் தமிழ்பிரபாவின் திரைக்கதை வசனத்தில் ,
எஸ். ஜெயக்குமார் கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
அரக்கோணம் பகுதியில் ஒரு கிராமம் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே சாதி வெறிப் பகை.
அங்கு இருக்கும் கிரிக்கெட் மைதானம் ஒன்றில் இரு தரப்பும் தனித்தனியாக கிரிக்கெட் விளையாடுவது உண்டு . ஒரே நேரத்தில் விளையாட வரும்போது முதலில் ஸ்டம்ப் போட்டவருக்கே முன்னுரிமை என்பது போய் ஒரு நிலையில் ஒரு சில ஓவர்கள் கிரிக்கெட் விளையாடி , ஜெயிப்பவருக்கே முன்னுரிமை என்ற ஒப்பந்தம் போடப்பட அதிலும் பகையே வளர்கிறது .
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களில் கிறிஸ்தவ சமய இளைஞனுக்கும் ( அசோக் செல்வன்) பிற்படுத்தப்பட்ட சமூக இளம்பெண்ணுக்கும் ( கீர்த்தி பாண்டியன்) காதல் . அவனது தம்பி ஒருவனுக்கும் (பிரித்வி ராஜ்) ஒரு பெண்ணுக்கும் (திவ்யா துரைசாமி) காதல்.
இளைஞர்கள் இருவரும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் . தாயார் (லிசி ஆண்டனி) கிறிஸ்தவ மத நம்பிக்கையில் ஊறி இருக்க, தந்தை ( இளங்கோ குமார வேல் ) யதார்த்தம் அறிந்தவர் .
பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞன் ஒருவன் ( சாந்தனு) அவனும் சிறந்த கிரிக்கெட் வீரன்.
இரண்டு சமுதாய கிரிக்கெட் அணிகளும் ஒரு போட்டியில் மோத, அதில் தங்கள் அணி சார்பாக விளையாட நகரத்தில் பயிற்சி பெற்ற தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை காசு கொடுத்து அழைத்து வருகிறான் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞன்.
போட்டியில் வென்றாலும் அந்த தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் காசு கொடுத்தவனையே கேவலமாகப் பார்க்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள் . ஒரு நிலையில் அடித்து விரட்டும்போது தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் ஆதரவாக வந்து நிற்கிறான்.
தாழ்த்தப்படுவதன் வலி பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞனுக்குப் புரிகிறது .
இரு தரப்பும் ஒன்று சேர்ந்து ஓரணியாகி, அந்த பயிற்சியும் அனுபவமும் மிக்க அணியையும் அது போன்ற மற்ற அணிகளையும் எதிர் கொள்கிறார்கள் .
ஓரணியாக விளையாடினாலும் சாதி வெறுப்பு கொண்ட நபர்கள் அந்த அணியில் முறுக்கிக் கொண்டு நிற்க, போட்டி என்ன ஆனது ? பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்ணுடனான தாழ்த்தப்பட்ட இளைஞனின் காதல் என்ன ஆனது என்பதே புளூ ஸ்டார் .
தாழ்த்தப்பட்ட சமூக கிரிக்கெட் அணியின் பெயராக இருந்து பிறகு ஒன்று பட்ட அணியாக உருவாகும் மண்ணின் மைந்தர்களின் கிரிகெட் அணியின் பெயர்தான் புளூ ஸ்டார் .
படத்தில் முதலில் கவர்வது . படத்தில் காட்டும் களம் நிலம் புலம் இவைதான் . அவ்வளவு அற்புதமாக அந்த அரக்கோணம் பகுதியின் நிலவியல் வாழ்வியலை உணர வைக்கிறார்கள் .

நடிகர்களுக்கான தோற்றம், ஒப்பனை, நடை உடை பாவனை , பேச்சுத்தொனி யாவும் அற்புதம் . குறிப்பாக அந்த ”ரஞ்த்தே…… ” அழகு
வாழ்த்துகள் ஜெயக்குமார் மற்றும் குழுவினருக்கு .
நடிப்பில் கீர்த்தி பாண்டியன், பிரித்வி, சாந்தனு, அசோக் செல்வன் என்ற வரிசையில் அசத்தி இருக்கிறார்கள் முக்கிய நடிகர்கள் .
ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து உருவான பாடப்படாத நாயக கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் பக்ஸ். இவர்கள் தவிர லிசி, இளங்கோ, அருண் பாலாஜி என்று எல்லோருமே கதாபாத்திரத்துக்கே செதுக்கப்பட்டது போல் பங்களித்து இருக்கிறார்கள் .
அதிலும் குறைவான காட்சிகளே வந்தாலும் சாதி ஆணவத்தின் கெட்டிப்பட்ட தன்மையை சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்துகிறார் அருண் பாலாஜி
பிற்படுத்தப்பட்ட சமூகத் தரப்பில் தமிழ் பேசுவோரை மட்டும் சாதி ஆதிக்கம் கொண்டவராகக் காட்டும் குறுகிய பார்வையில் இருந்து விலகி மாற்று மொழி ஆட்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கும் கூர்மை கவனிக்க வைக்கிறது . தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக தமிழ் உணர்வையே பழிக்கும் மடமையில் இருந்தும் மாறி , தன்னை தமிழனாகவும் உணரும் ‘தமிழ்’ உணர்வு கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி உண்மையை எழுத முடியும் மகிழ்ச்சி பிரபா.
அதேநேரம் அதில் வன்மம் காட்டாமல் ஒரு நிலையில் அந்த தரப்பையும் மனம் மாறுவோராகக் காட்டும் பெருந்தன்மை உண்மையான தமிழ்த் தன்மை . பாராட்டுகள் .
இந்த தமிழ் வீரியத்தின் சிகரம் அந்த சீனியர் அணியின் புல்லட் வீரர் கதாபாத்திரம்தான். “நீங்க ஏன் இந்திய அணியில் சேர மருத்தீங்க என்ற கேள்விக்கு, ” ஏன்னா அது இந்திய அணி (நம்ம அணி இல்ல) ” என்ற பதில் விளையாட்டில் அவர் அடிக்கும் சிக்சர்களையும் விட பெரிய சிக்ஸர்.
தாழ்த்தப்பட்ட சமூக நாயகர்களின் தாயாரை மத நம்பிக்கை உள்ளோராகக் காட்டும் போது கதாபாத்திரங்களின் பாணியில் இயல்பாகவும், பார்ப்போர் பார்வையில் எள்ளலாகவும் தோன்றும் வசன உத்தியும் மேட்டிமையாக இருக்கிறது. அதே நேரம் இறுதியில் அந்த உணர்வுக்கும் மரியாதை தரும் காட்சிகள் ஒரு நிலையில் வருவது பக்குவம்.
தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனைக் காதலிக்கும் பிறப்டுத்தப்பட்ட சமூகப் பெண்ணின் பாத்திரப்படைப்பு மக்கு போல எழுதப்படாமல், அந்தப் பெண்ணை அறிவாளியாக காட்டும்படி எழுதப்பட்டு இருப்பதும் பெண்கள் சமுதாயத்துக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே தெரிகிறது .
ஒரு பிற்படுத்தப்பட்ட சமூக நபர் குடி போதையில் ”உசந்த சாதி உசந்த சாதின்னு உசுப்பேத்தியே உருப்பட விடாம பண்ணிடுவாங்கடா . நான் அப்படித்தான் நினைச்சு படிக்காம வீணாப் போனேன் . நானெல்லாம் படிச்சிருந்தா எங்க இருந்திருப்பேன் தெரியுமா? நம்பி மோசம் போயிடாதீங்கடா ” என்று புலம்பிய படியே போகும் காட்சி மென்மையாக சன்னமாக காட்டப்பட்டு இருந்தாலும் கருத்தியலாக அது ஒரு பெரு முழக்கமாக இருக்கிறது . இந்தப் படத்தின் ஆன்மா அந்தக் காட்சியில்தான் இருக்கிறது . சாதி ஆணவத்துக்கு எதிரான போராட்டம் இப்படித்தான் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும் .

தமிழ் அ அழகனின் ஒளிப்பதிவு நம்மை படத்தின் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் கை பிடித்து அழைத்துச் செல்ல , கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நம்மை காட்சிகளுக்குள் நிறுத்தி இருத்தி விடுகிறது.
ஆர் கே செல்வாவின் படத் தொகுப்பு சிறு சிறு நிகழ்வுகளை அழகாகத் தொகுத்துக் கவனம் கவர்கிறது. ஜெயரகுவின் கலை இயக்கம் யதார்த்தத்துக்கு பலம் சேர்க்கிறது .
படத்தில் குறைகள் இல்லாமலும் இல்லை .
தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வலியை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞன் உணரும் கதைக்கு, கிரிக்கெட் விளையாட்டை களமாக எடுத்த உத்தி சரி. ஆனால் படத்தில் ஒரு அளவுக்கு மேல் கிரிக்கெட்டே ஓடுவதால் படத்தின் நோக்க உணர்வு பின் தங்கி விளையாட்டு மேலோங்கும் விபரீதம் நிகழ்கிறது . திரையரங்குக்கான படம் என்ற ரீதியில் இது ஒரு குறைபாடு
சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு நிலையில் குத்துச் சண்டை பின் தள்ளப்பட்டு நோக்கம் சரியாக முன்னால் வந்து நிற்கும் .அதுதான் அந்தத் திரைக்கதையின் மாபெரும் வெற்றி . மாறாக அதில் படம் முழுக்க குத்துச் சண்டையே இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? அதுதான் இங்கே நடந்திருக்கிறது.
இதில் அந்த நேர்த்தி இல்லை.
இங்கே இருப்பவன் தாழ்த்தப்பட்டவன்; பிற்படுத்தப்பட்டவன் . சரி … தொழில் முறைப் பயிற்சியில் வென்று பிற்படுத்தப்பட்டவனையும் தாழ்த்தப்பட்டவனையும் சேர்ந்து தாழ்த்தும் நபர்கள் யார்? நகரத்தில் இருப்பவன் ; முன்னரே பயிற்சி பெற்றவன் என்பது ஒரு சமுதாய அடையாளமா? எனில் அவன் யார் அவனது சமூக அடையாளம் என்ன என்பதை மற்ற சமுதாயங்களை அடையாளப்படுத்தியதில் பாதி கூட அடையாளப்படுத்திச் சொல்லும் திராணி ஏன் உங்களுக்கு இல்லை?
சாதி அடுக்கால் தனக்குக் கீழ் சாதியே இல்லாதவன் அழிந்தே போகிறான் . எல்லாப் பயல்களும் சேர்ந்துதான் அவனின் அழிக்கிறான். தனக்கு மேல் சாதியே இல்லாதவன் தூசு கூடப் படாமல் சுகமாக இருக்கிறான். இனி சாதி ஆணவம் தொடர்ந்து வளர்க்கப்படுவதன் முழு பலன் யாருக்கு ? சாதி ஆணவத்தின் மையப்புள்ளியை சாடும் நேர்மை ஏன் உங்களுக்கு இல்லை.? கொள்ளியை அணைக்க வக்கில்லாமல் சட்டியைக் கரண்டியும் கரண்டியை சட்டியும் மட்டும் மாறி மாறி இன்னும் எத்தனை நாள் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள் .?
இன்னொரு பக்கம்.. யதார்த்தம் என்ற பெயரில் நாயகனின் தனிப்பட்ட வாழ்வின் முடிவாகக் காட்டி இருக்கும் விஷயம் தவறு . யதார்த்ததை விடக் கருத்தியல் முக்கியம் . சினிமாவில் கூட அதைச் சாதிக்கா விட்டால் யதார்த்தத்தில் எப்படிக் கொண்டு வரப் போகிறோம்? பரியேறும் பெருமாளின் தன்மைக்கு அந்த முடிவு சரி , ஆனால் இதில் அது தப்பிக்கும் செயலாகவே இருக்கிறது .
என்றாலும் கூட
புளூ ஸ்டார் … தமிழ் ஸ்டார் .