ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைப் பாண்டியன், அன்பு , வினோத், சீனிவாஸ் ஆகியோர் தயாரிக்க, யோகி பாபு, இனியா , மகேஷ் சுப்பிரமணியன், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்க, டெனிஸ் மஞ்சுநாத் இயக்கி இருக்கும் படம்.
கிராமம் ஒன்றில் கோவில் திருவிழாவில் அம்மன் மகுடத்தை யார் சுமந்து வருவது; மற்ற நாட்களில் யார் வைத்திருப்பது என்பதில் அண்ணன் ( மாரிமுத்து) – தம்பி ( நமோ நாராயணன்) இருவருக்குள் பனிப் போர் . இப்போது அது அண்ணன் வசம் இருக்கிறது.
அண்ணனின் மகள் (இனியா) திருவிழாவுக்கு படம் போட வந்த ஒருவன் (யோகிபாபு) மீது காதல் கொண்டு அவனுடன் ஓடிப் போக , வழியில் மடக்கப்படுகின்றனர். காதல் பிரிக்கப்படுகிறது . காதலனை அடித்து பாழுங்கிணற்றில் போட்டு எரிக்கிறார்கள் .
அண்ணன் வசம் இருக்கும் அம்மன் மகுடத்தை திருட சிலர் முயல , அப்போதுதான் அண்ணனிடம் இருப்பது பொய் மகுடம் என்பது தெரிகிறது .
உண்மை மகுடம் எங்கே என்று ஊர் கூடிக் கேட்க, மகளின் காதலனை எரித்த கிணற்றுக்குள் அதுவும் விழுந்து விட்டதும் காதலன் பேயாக மாறி கிணற்றுக்குள் இருப்பதும் தெரிய வருகிறது .
மகுடத்தைத் திருட நகரத்தில் இருந்து வந்த ஒரு தாதா (மொட்டை ராஜேந்திரன்) , அவனிடம் தொழில் பயின்ற மூவர் (மகேஷ், பால சரவணன் , சென்றாயன்) ஆகியோர் இப்போது மகுடத்தை எடுக்க கிணற்றுக்குள் இறங்க , இன்னொரு பக்கம் மகுடத்திற்கு ஆசைப்படும் தம்பி அவர் மகனோடு ( கும்கி அஸ்வின்) அய்யனார் கோவில் சுரங்கப்பாதை வழியே கிணற்றுக்குள் வர , நடந்தது என்ன என்பதே படம்
எளிய கிராமத்துப் படம் .
நகைச்சுவை ஒரு பக்கம் , பேய் திரில்லர் ஒரு பக்கம் என்று தியேட்டர்களுக்கு மட்டுமின்றி ஓ டி டி தளங்களுக்கும் ஏற்ற படம் . குடும்பத்தோடு பார்க்க வசதியாக இருக்கும் .
எல்லா நகைச்சுவை நடிகர்களுமே தங்கள் பங்குக்கு எளிய நகைச்சுவைகளைத் தருகிறார்கள்.
கிராமியப் பின்புலம் அழகு .
பேயாக வருகிறார் யோகிபாபு . அவர் பாணி வசனங்கள் உண்டு .
மெல்லிய காதல் சோகம் உண்டு .
கதை முதற்கொண்டு படைப்பு மற்றும் தொழில் நுட்ப ரீதியாக எல்லா வகையிலும் இன்னும் நேர்த்தி தேவைப்படும் படம்தான் என்றாலும் வன்முறை , ரத்தச் சக்தி, ஆபாசம் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே இப்போது அதிசயம்தான் .
அந்த பொறுப்புக்கு தூக்குத்துரையை தூக்கி வைத்துப் பாராட்டலாம் .