CONCITY @ விமர்சனம்

இல்ல இல்ல… தமிழ்ப் படம்தான். 

பவர் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்  சார்பில் தயாரித்து எழுதி ஹரிஷ் துரைராஜ் இயக்க, அர்ஜுன் தாஸ், அன்னா பென் , யோகிபாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் நடிப்பில் வந்திருக்கும் தமிழ் படம் 
 
CONCITY  என்றால் மோசடி நகரம்  என்று பொருள்.
 
மின்சார வாரியத்தில் வேலை செய்யும் சரவணன் ( அர்ஜுன் தாஸ்), மின் கட்டணம் கட்ட வருவோரிடம் எல்லாம் , பிரிண்டர் ரிப்பேர் என்று சொல்லி,  கையில் எழுதி ரெசிப்ட் கொடுத்து விட்டு , அந்தப் பணத்தை நண்பன் ஒருவன் மூலம் டிரேட் மார்க்கெட்டில் போட்டு பணம் சம்பாதித்து ,  மின் கட்டும் காலக்கெடு முடிவதற்குள் பணத்தை கட்டி …..இப்படி   சம்பாதிக்கிறான். 
 
 வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து வீட்டை  வாடகைக்கு விட்டு வாடகை பெற்றுத் தருவதாக சொல்லும் நிறுவனம் ஒன்று,  அந்த வீடுகளை லீசுக்கு விட்டு பல லட்சம் பெற்றுகே கொண்டு  தலைமறைவாக, விஷயம் அறிந்து வீட்டு ஓனரும் லீசுக்கு எடுத்தவரும் முட்டிக் கொள்ள… இப்படி  ஒரு குற்றத்தால் ஏமாற்றப்பட்ட — கணவன் இல்லாத ஒரு கர்ப்பிணி — பெண் ( அன்னா பென் ) அதே ஏமாற்று வேலையை செய்து பணம் சம்பாதிக்கிறாள் . 
 
டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு  உதவி,  அதன் மூலம் நல்ல பெயர் பெற்ற சினிமா பிரமுகர் ஒருவர் இறந்து போன நிலையில், அவரது மனைவியும் ( வடிவுக்கரசி) மகனும் ( யோகிபாபு) பணத்துக்கு சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போக, மருத்துவ உதவி கேட்டு  அவர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைக்க, அவர்களுக்கு பணம் குவிகிறது. 
 
ஒரு நிலையில்  சிகிச்சை தேவை இல்லை என்று தெரிய வர, அதை சொல்லாமல்,  எல்லோரும் அனுப்பும் பணத்தை வைத்து, திரைப்படம்  படம் எடுக்க முடிவு செய்கினறனர். 
 
எல்லோரும் தான் சம்பாதிக்கும் பணத்தை சரவணனிடம் இன்வெஸ்ட் செய்ய, மொத்தமாக வந்த பத்து கோடியை அவன் தனது நண்பன் ஒருவனுக்கு அதிக வட்டிக்கு கொடுக்க, அந்த நண்பன் கொல்லப்பட , பணம் திரும்ப வரவில்லை. 
 
மின்சார கட்டணம் கட்டியவர்களின்  மின் சேவை நிறுத்தப்பட, வீட்டு உரிமையாளர்களிடம் கர்ப்பிணி மாட்டிக் கொள்ள, சினிமா குடும்பத்தின் குட்டும் வெளியே வர, போலீஸ் துரத்த, 
 
அவர்கள் அப்படியே கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இடம் பெயர்ந்து குடும்பமாக வசிக்கின்றனர் கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்க, அவள் சரவணனின் மனைவி என்றும் , எல்லோரும் ஒரு குடும்பம் என்று ஊர் நம்புகிறது 
 
அந்தக்  குழந்தைக்கு உணர்வு ரீதியாக அப்பாவாகவே மாறி விடுகிறான்  சரவணன். 
 
சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் பள்ளியில் இருக்கும் சிறுவன் கடத்தப்படுகிறான். 
 
கடத்தியது இவர்கள் ஏமாற்றிய வழக்குகளை எல்லாம்  விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர். 
 
சிறுவனுக்காக எல்லோரும் மீண்டும் சென்னைக்கு வர, நடந்தது என்ன என்பதே படம். 
 
எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கருத்தை நியாயப்படுத்த முயலும் பணத்தாசைப் படங்களில் மேலும் ஒன்று.  
 
எல்லோரும் எப்படி ஏமாற்றினார்கள்?ஏன் ஏமாற்றினார்கள்? எந்த வகையில் அதை சாதித்தார்கள்? என்று சலனப்பட்ட மனசுகளில் ஆசையைத் தூண்டும் வகையில்,  நுணுக்கமாக காட்சிகள். சில லாஜிக். சில லாஜிக் மாதிரி.  
 
கணவன் மனைவி சண்டை என்பது போல ஆரம்பித்து அப்புறம் கதைக்கு வரும் அந்த  உத்தி அருமை. 
 
நோயே இல்லாத பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லும் முட்டாள் டாக்டரின் மருத்துவமனை,  அடுத்த சில ஆண்டுகளில் மாபெரும் மருத்துவமனையாக மாறி இருப்பதை கேமரா மொழியில் சொல்லும் இடத்தில்  ஹரீஷ் துரைராஜின் இன்டலெக்சுவல் டைரக்ஷன் சபாஷ் போட வைக்கிறது.  
 
சில காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் டீல் செய்வதன் மூலமும் பாராட்டுப் பெறுகிறார் . 
 
தனது கனமான குரலை வைத்துக் கொண்டு செண்டிமெண்ட் வசனங்களும் பேசி கவர்கிறார் அர்ஜுன் தாஸ்.  நிதானமான நடிப்பு, அந்த வயதானவர் கெட்டப் கடல் மீன்கள் கமல்ஹாசனை நினைவு படுத்துகிறது . அருமை . அருமை 
 
குணாதிசயச் செறிவு நிறைந்த முகத்துடன் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் அன்னா  பென். 
 
சீரியஸ் நடிப்பு காமெடி இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார் யோகிபாபு  . வடிவுக்கரசி எதிர்பாராத காமெடி அசத்தல். 
 
விடிவி கணேஷ் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். 
 
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டனின் இசை இரண்டும் மிக சிறப்பான பங்களிப்போடு,டைரக்டருக்கு  வலு சேர்க்கிறது. 
 
சின்னச் சின்ன திருப்பங்கள் கிளைமாக்ஸ் வரை  கவனிக்க வைக்கின்றன. 
 
ரொம்ப நிதானமான படம். இது போன்ற படங்கள் நிறைய வந்து விட்டன 
 
படம் முடியும்போது  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிறது. 
 
இது போன்ற படங்களுக்கு தேவைப்படும் விறுவிறுப்பு ரொம்பக் குறைவு. அதெல்லாம்  யாருக்கும் ஒன்னும்  ஆவாதுப்பா என்ற மன நிலைக்கு முன்பே கொண்டு வந்து விடுகிறார்கள். 
 
எப்படி எல்லாம் நுணுக்கமான பண்றோம் பாருங்க என்ற முனைப்பு , ஒரு CASE STUDY பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதே  தவிர முழுமையான தியேட்டரிக்கல் அனுபவம் கிடைக்கவில்லை. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *