சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் பிக்சர்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மாற்று சாய் சௌஜன்யா தயாரிக்க, சூர்யா, மமிதா பைஜு , ராதிகா, ரவீனா டாண்டன் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கி இருக்கும் படம் விஸ்வநாத் அன்ட் சன்ஸ்.
தொழிலதிபரான விஜய் விஸ்வநாத் (ராஜீவ் மேனன்), ” எந்தப் பொருள் பழுதானாலும் உடனே தூக்கிப் போட்டு விட்டு புதுசு வாங்காமல் பழசை பழுது பார்த்து பயன்படுத்த வேண்டும்” என்று சொன்ன சொல்லை, சிறுவயதிலேயே வேத வாக்காகக் கொண்டு வளர்ந்து மாபெரும் தொழிலதிபராக ஆனவர் அவரது மகன் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) ,
எந்த அளவுக்கு அப்பா சொல்லுக்கு உண்மையானவர் என்றால் , ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் சஞ்சயின் துப்பாக்கியை எதிரிகள் சேதப்படுத்த, அந்த துப்பாக்கியை அங்கேயே ரிப்பேர் செய்து சுட்டு கோல்டு மேப்பிடல் வாங்கும் அளவுக்கு. .
ஆனால் அப்பா அந்த வார்த்தைகளுக்கு உண்மையாக இல்லை.
சஞ்சயின் அன்பான அம்மா (ராதிகா) இருக்கும்போதே, ஒரு நடிகையை(ரவீனா டாண்டன்) இரண்டாம் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெறுகிறார் விஜய் விஸ்வநாத்.
எனக்கு அறிவுரை சொன்ன நீங்கள், என் அம்மா இருக்க இன்னொரு திருமணம் செய்தது ஏன் என்று சஞ்சய் கேட்க, “அது வேறு இது வேறு . நீ கல்யாணம் செய்தாலும் இந்த விஷயத்தில் இப்படித்தான் இருப்பாய் ”என்று விஜய் விஸ்வநாத் கூற,
தனது அம்மாவுக்கு அப்பா செய்த கொடுமையை தான் இன்னொரு பெண்ணுக்கு செய்யக் கூடாது என்பதற்காக கல்யாணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார் சஞ்சய் விஸ்வநாத் !
மாதம் ஒருமுறை மூன்று நாள் வெளிநாடு சென்று பல நாட்டு அழகிகளை சந்தித்து ஜல்சா பண்ணி ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்கிறார்.
ஆனால் ‘தனக்கு ஒரு பேரன் வேண்டும் அதனால் கல்யாணம் செய்து கொள்’ என்று அம்மா வற்புறுத்த, ”பேரன்தானே வேண்டும்? . வருவான்” என்று சொல்லி ,
வெளிநாட்டுக்கு போய், முகம் அறியாத ஒரு பெண்ணை வாடகைத்தாயாக வைத்து தனது உயிரணுவைத் தந்து, குழந்தை பெற வைத்து, குழந்தையை மட்டும் , கொண்டு வருகிறார்.
அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜையில் ஒரு பிரச்னை வர, சஞ்சயின் எலும்பு மஜ்ஜை பொருந்தாத நிலையில், குழ்நதையின் அம்மா வந்தால்தான் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் சொல்ல,
அந்த முகம் தெரியாத அம்மாவை தேடிக் கண்டுபிடித்தால்….
அவள் இறுதியாண்டு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி.(மமிதா பைஜூ) சரக்கடிப்பதில் கில்லாடி.
அவளிடம் விஷயம் சொல்ல, எந்த செண்டிமெண்ட் உணர்வும் இல்லாமல், ” பயணச் செலவு உட்பட பெரும்பணம் கொடுத்தால் வருகிறேன்” என்கிறாள் . அப்படியே பெரும் பணம் கொட்டிக் கொடுத்து அழைத்து வர, குழந்தை பிழைக்கிறான் .ஆனால் வாடகைத்தாய் க்கு பாசம் நேசம் , அப்புறம் சஞ்சய் மீது காதல் வருகிறது.
. கல்யாணம் செய்து கொள்ள அவள் விரும்ப,
இருப து வயது வித்தியாசம், அதனால் காலப் போக்கில் ஏற்படும் பிரச்னைகள் இவற்றைக் காரணம் காட்டி சஞ்சய் மறுக்க,
அம்மா குறுக்கே வர, அப்பாவின் இரண்டாம் மனைவி குடும்பக்கதை எல்லாம் குறுக்கே மறுக்கே வர, கடைசியில் என்ன ஆச்சு என்பதே இந்த விஸ்வநாத் அன்ட் சன்ஸ்.
பணத்தைக் கொட்டி எடுக்கப்பட்டிருக்கும் படைப்பு.
ஒலிம்பிக், எலும்பு மஜ்ஜை, ஸ் வாடகைத்தாய், வயது பொருந்தாக் காதல் என்று அதற்கேற்ப திரைக்கதை பல பரிமாணங்களை தொடுகிறது .
இவற்றுக்கும் அப்பாற்பட்டு சூர்யாவின் நிஜ வாழ்க்கை இமேஜுக்கு பொருத்தமான ஜார்ஜ் மரியான் கதை, அரசியலில் மேலிட செல்வாக்கு இருந்தாலும் அதையும் மீறிய லோக்கல் அரசியல்வாதிகளின் பலம் சொல்லும் காட்சிகள் என்று ‘ அட!’ போட பல சிறப்பான காட்சிகள் உண்டு . சஞ்சயின் அம்மாவுக்கும் வாடகைத்தாயக்குமான காட்சிகளை அருமையாக எழுதியிருக்கிறார் வெங்கி அட்லூரி பிரமாதமான மேக்கிங் கொடுத்து இருக்கிறார்.
சில காட்சிகள் கண் கலங்கவும் வைக்கின்றன.
சஞ்சய் கேரக்டரில் , மீண்டும் கஜினி படத்தில் வந்த சஞ்சய் ராமசாமியை நினைவு படுத்தும் ஒரு செல்வச் செழிப்பான கேரக்டரில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் சூர்யா, சிறப்பு.
சற்றே நெகட்டிவ் ‘ஷேட்’ உள்ள கேரக்டர் என்றாலும் தனது அற்புதமான நடிப்பால் பிரித்து மேய்கிறார் மமிதா பைஜூ . இன்னொருவரை இந்தக் கேரக்டரில் யோசித்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அப்படி ஜொலிக்கிறார். காமெடி இல்லாத குறையை (காமெடி என்று இருக்கும் சில விஷயங்கள் காமெடியாக இல்லை) தனது கியூட் நடிப்பால் சமன் செய்கிறார்.
இருவருக்கும் இடையில் ராதிகா தன் பங்குக்கு ஸ்கோர் செய்கிறார்.
ஜிவி பிரகாஷின் இசை படத்துக்கு பெரும்பலம், மிக சிறப்பான பின்னணி இசை .
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு அருமை.
இப்படி ஒரு எமோஷனான கதைக்கு ..
ஒரு மணி நேரத்தில் ஒரு ஹோட்டலை நள்ளிரவில் எழுதி வாங்குவது, அப்புறம் அந்த ஒலிம்பிக் காட்சி என்று காதுல ‘பூ மலை’ காட்சிகளும் உண்டு.
அப்பா அம்மாவை விட்டு வேறு பெண்ணை மணந்ததால் அம்மா வருந்துவதை பார்க்கும் மகன் என்ன செய்ய வேண்டும்? ‘நான் அப்படி என் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டேன்’ என்று தீர்மானிக்க வேண்டும் . அதை விட்டு விட்டு திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்பது சூப்பர் லாஜிக்கல் கூட செட் ஆகவில்லையே.
சரி அதுதான் போகட்டும். கல்யாணமே வேண்டாம் என்ற நிலையில் ஒரு குழந்தையை தத்து எடுத்து இருக்கலாம். வாடகைத் தாய்மை எதற்கு?
ராதிகாவின் ஒரு முடிவின் போதே படம் முடிந்து விடுகிறது. அப்பா இறந்த அப்புறம் சித்தி , சித்தி மகளின் நிலை என்ன என்ற விஷயம் நல்ல பரிமாணம் என்றாலும் அதை டீல் செய்த விதம் பக்கா டிராமா. அதுவும் கடைசி காட்சிகள் எல்லாம் ஓவர்.
தவிர போகப் போக பக்கா தெலுங்குப்படமாக முழுசா மாறின சந்திரமுகியாகி விடுகிறது
இப்படி சில குறைகள் இருந்தாலும், சூர்யா, மமிதா பைஜு, ராதிகா , ஜி வி பிரகாஷ் குமார் நால்வரும் படத்தை ஜோராக தூக்கி சுமந்து கரை சேர்க்கின்றனர்.
விஸ்வநாத் அன்ட் சன்ஸ்..கம்பெனிக்கு வரவு உண்டு.