சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ், ஜீவன் சௌத்ரி,ஜித்தன் ரமேஷ், ஜீவா தயாரிக்க, விஷால், அஞ்சலி, துஷாரா, ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் , தம்பி ராமையா நடிப்பில் இயக்குனர் ரவி அரசுவின் கதைக்கு திரைக்கதை அமைத்து விஷால் இயக்கி இருக்கும் படம்.
மருத்துவப் பிரதிநிதி ஒருவனுக்கு (விஷால்) காதல் மனைவி (துஷாரா) …மற்றும் பள்ளி வயதில் இரு பிள்ளைகள். கல்யாண சமயத்தில் தன்னிடம் கார் இருப்பதாக மாமனாரிடம்(தம்பி ராமையா) பொய் சொல்லி, இத்தனை வருடம் சமாளித்த நிலையில் இனி கார் வாங்காமல் இருக்க முடியாது என்ற நிலை.
ஷோ ரூம்களில் எல்லாம் அவனது சிபில் ஸ்கோர் மற்றும் வேறு லோன்களில் தவணை கட்டாமல் இருப்பதை வைத்து கழுவிக் கழுவி ஊத்த, செகண்ட் ஹேண்டில் நாலரை லட்சம் கொடுத்து ஒரு பென்ஸ் காரை வாங்குகிறான் மருத்துவப் பிரதிநிதி
. குடும்பத்தோடு காரில் சுற்றுலா போகும்போது, ஒரு கூட்டம் அவனை கொலை செய்ய முயல்கிறது. காரணம் அந்தக் காரின் பழைய முதலாளியின் எதிரிகள் அவர்கள்.
ஒரு நிலையில் காரின் இப்போதைய ஓனரான சேல்ஸ்மேனை பார்க்கும் வில்லன். ”அவனை குடும்பத்தோடு கொளுத்துங்கடா…” என்று சொல்ல மனைவியையும் மகளையும் இழக்கிறான் மருத்துவப் பிரதிநிதி.
விஷயம் அறிந்து விசாகப்பட்டினத்தில் இருந்து துடிதுடித்துக் கிளம்பி வருகிறார் ஒரு டான் (விஷால் நம்பர் 2).அவரைப்பார்த்து மருத்துவப் பிரதிநிதி கொந்தளிக்கிறான் . காரணம் அவரது குழந்தையே இவன்தான் சார்.
டான் விசாகப்பட்டினத்தில் இருந்த காலத்தில், அங்கு பெண்களுக்கு மீன் விற்பனை தொழிலில் உதவும் ஒரு மீன்காரப் பெண்ணை (அஞ்சலி), காதலித்து திருமணம் செய்து கொள்கிறான்.
சீனாவில் இருந்து தரக் குறைவான மோட்டார் உதிரி பாகங்களை இறக்குமதி செய்கிறான் அங்குள்ள அப்போதைய பெரிய தாதா. அவை வந்தால் வாகன விபத்தில் நிறைய உயிர்கள் போகும் என்ற நிலை.
அதற்காக மீன்காரப் பெண்களுக்காக கட்டப்பட்ட இடத்தை பெரிய தாதா இடிக்க வர, மீன்கார நாயகி எதிர்க்க,
”பிரச்னை வந்தால் என்னை விட மீனவப் பெண்களை காப்பாற்றத்தான் நீ போக வேண்டும் என்று மீன்கார நாயகி சொன்னதை கேட்டு அப்பா டான் அங்கே போக, அம்மா செத்துப் போக,
அம்மாவின் கட்டளை தெரியாமல், “உனக்கு எங்களை விட அவங்கதான் முக்கியமா ?” என்று அப்பா மீது மகன் கோவித்துக் கொண்டு வந்து விட,
இதான் நடந்த கதை. .
தவிர , இப்போதும் வில்லன் குழு போலி. மோட்டார் பாகங்களை வாங்க முயல, நடந்தது என்ன என்பதே இந்த மகுடம்.
இரண்டு வேட விஷால் நன்றாக அடிக்கிறார் . செயற்கையாக நடிக்கிறார்.
துஷாரா விஜயன் கொஞ்ச நேரம் துடிக்கிறார்.
முற்றிப் போன பயத்தம் நெத்து போல இருந்தாலும் அஞ்சலி அட்டகாசமான நடிப்பில் வெடிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையில் நச்சிந்தி மச்சானே பாடல் சும்மா பட்டையை கிளப்புகிறது.
படம் ஆரம்பிக்கும்போது , ‘ஆஹா இயல்பான கேரக்டரில் விஷால் நடித்து இருக்கிறார் போல இருக்கே’ என்று நம்பிக்கையாக உட்கார்ந்தால். நடப்பதே வேறு.
கல்யாண சமயத்தில் கார் இருக்கிறது என்று சொன்ன பொய்யை பன்னிரண்டு வருடம் மெயின்டைன் செய்கிறாராம் மருத்துவப் பிரதிநிதி .
ஒரு நிலையில் வேறு வழி இல்லாமல் கார் வாங்கப் போனால் , மருத்துவப் பிரதிநிதியின் சம்பளத்தையும் அவர் முன்புதவணையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்டாததாலும் கார் கம்பெனிகள் கார் லோன் தர மறுக்க, மருத்துவப் பிரதிநிதி குடும்பம் ஐயோ பாவமாம். லாலா… லாலா… லா ..லால்…லா …!
அடுத்த காட்சியில் அந்த பரிதாபக் குடும்பம் நாலரை லட்ச ரூபாய் ரெடி கேஷ் கொடுத்து ஒரு பென்ஸ் காரை செகண்ட் ஹேண்ட் ஆக வாங்குகிறது. ஏனுங்க டைரக்டரே. அந்த நாலரை லட்சம் காசை வச்சு ஒரு காம்பாக்ட் ஆன புது காரே வாங்கி இருக்கலாமே. ?
அதுவும் அது செகண்ட் ஹேண்ட் கார் அப்பா டானின் சொந்தக்காராம், பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?
இப்படியாக ஆரம்பமே அந்தர கந்தர கோலமாக இருப்பதால் அப்புறம் எதுவுமே ஒட்டவில்லை.
அப்பா மேல் மகன் கோபம் கொள்ள காரணம் வேறு ரொம்ப குழந்தைத்தனம் . அம்மாவின் மனமும் அப்பாவின் குணமும் கூடவே வாழும் மகனுக்கு தெரியாதா? அந்த டேப் ரிக்கார்டர் சீன வேறு படு செயற்கை.
நண்பேன்டா என்ற பெயரில் ஜான் விஜய் வேறு, நடிப்பு என்ற பெயரில் கொலை செய்கிறார்.
ஓவராக நடிப்பதற்கு என்றே ஒரு கூட்டத்தையே படத்துக்குள் கொன்டு வந்திருக்கிறார் விஷால்.
விஷயம் இதுதான்.
வெளிநாட்டில் இருந்து வரும் தரமற்ற உதிரி பாகங்களால் இந்தியாவில் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் , பொருளாதார இழப்பு இவற்றை வைத்து ஒரு கதை எழுதி இயக்குனராக போயிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு.
ஒரு நிலையில் அவரை டைரக்ஷனில் இருந்து கழட்டி விட்டு, காசு கொடுத்து அனுப்பி விட்டு, கதை என்று மட்டும் டைட்டில் போட்டுவிட்டு, அந்தக் கதையை கிழித்து சீரழித்தது ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இப்படி ஒரு படத்தைக் கொடுத்து விட்டார் விஷால்.
கஷ்டம்தான் .
மொத்தத்தில் மகுடம்.. … மண்குடம்