வெப்பமிகு தமிழ் மண்ணில் அரசர்கள், அக்கால போர் வீரர்கள் எப்படி இருந்திருப்பார்கள்; எப்படிப்பட்ட உடை , ஒப்பனை கொண்டிருப்பார்கள் என்பதோடு, உலக அளவில் அதிகாரம் என்பது மனிதனின் குணத்தை மாற்றும் தன்மை கொண்டது என்பதையும் யாத்திசை படத்தின் மூலம் இயல்பாக சொன்ன இயக்குனர் தரணி ராசேந்திரன்.
அடுத்தபடியாக இவர் ஜே கே பிலிம் என்டர்டைன்மென்ட் சார்பில் கமலக்கண்ணன் தயாரிக்க, யாத்திசை ஹீரோ சேயோன் மற்றும் பவானி ன், இவர்களோடு சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, Death Railway என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின் போது , கடல் வழிகள் பாதுகாப்பற்றதாக மாறிய பிறகு, பர்மா போருக்காக துருப்புக்களையும் பொருட்களையும் கொண்டு செல்ல, தாய்லாந்தின் பான் பாங் மற்றும் பர்மாவின் (இப்போது மியான்மர்) தான்பியுசாயத் இடையே கட்டப்பட்ட 415 கிமீ (258 மைல்) நீளமுள்ள ஒரு ரயில் பாதையை ஜப்பான் காட்டியது . சயாம்-பர்மா ரயில் பாதை அல்லது தாய்-பர்மா ரயில் பாதை என்றும் இது அழைக்கப்படுகிறது)
1942 முதல் அக்டோபர் 1943 வரை கட்டப்பட்ட இந்த ரயில்பாதையை பல்லாயிரக்கணக்கான நேச நாடுகளின் போர்க் கைதிகளையும் சுமார் 200,000-க்கும் மேற்பட்ட ஆசியப் பொதுமக்களையும் (பல தமிழ் தொழிலாளர்கள் உட்பட) கட்டாயப்படுத்தி கட்ட வைத்தது ஜப்பான். . கொடூரமான வேலைச் சூழல்கள், பட்டினி, நோய் மற்றும் கொடுமைகள் காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் அதில் செத்துப் போனார்கள்; மற்றும் கொல்லப்பட்டார்கள்.
இதன், தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதி ரயில்பாதை (காஞ்சனபுரியைச் சுற்றியுள்ள பகுதிகள், புகழ்பெற்ற பாலப் பகுதி மற்றும் வாங் போ மேம்பாலம் உட்பட) இன்னும் செயல்பாட்டில் உள்ளது.
ஆனால் தரணி ராசேந்திரன் எடுத்து இருப்பது இந்தக் கதையை அல்ல.
அதே உலகப் போர்க் காலகட்டத்தில் நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் நடந்த போரை வைத்து இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்.
பல நூறு கோடி பட்ஜெட் செலவில் எடுக்க வேண்டிய இந்தப் படத்தை, அவரே உருவாக்கிய நவீன படப்பிடிப்பு உபகரணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு மிக உழைத்து எடுத்துள்ளார்.
“பொதுவாக ஏ ஐ மூலம் இது போல எடுப்பது மிக சுலபம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி சுலபமாக எல்லாம் நாங்கள் எடுக்கவில்லை. மிகவும் போராடி நேர்த்தியாக எடுத்துள்ளோம் . தரமாக எடுப்பது சுலபம் அல்ல. ஏ ஐ இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம் என்று ஒரு கருத்து இருக்கிறது . ஆனால் அது உண்மையில்லை . ” என்கிறார் தரணி ராசேந்திரன்.
போர்கள் அவசியமில்லை என்ற கருத்தை முன்னிறுத்தும் இந்தப் படத்தில் நாயகனாக சேயோன், நாகலாந்து வாழ் பெண்ணாக பவானி ஆகியோரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐ என் ஏ உறுப்பினராக சசிகுமாரும், பிரிட்டிஷ் அதிகாரியாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம் யாத்திசை போலவே வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார் தரணி ராசேந்திரன்.