தியா @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் சாய் பல்லவி, நாக ஷவ்ரியா , குழந்தை வெரோனிகா நடிப்பில், 

இயக்குனர் விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம் தியா . கரு என்ற பெயரில் உருவான படமே பெயர் மாறி வந்திருகிறது . ரசிகனுக்கு வெகுமதியா இந்த தியா ? பார்க்கலாம் . 

கல்லூரியில் படிக்கிற காலத்தில் துளசியும் ( சாய் பல்லவி) கிருஷ்ணாவும் ( நாக ஷவ்ரியா) காதலிக்கிறார்கள் . உடல் தொடர்பும் ஏற்படுகிறது . அதில் துளசி கர்ப்பம் ஆகிறாள் . 
 
விசயம் பெற்றோர்களுக்கு தெரிகிறது . கிருஷ்ணாவின் அப்பா ( நிழல்கள் ரவி) , துளசியின் அம்மா (ரேகா) மற்றும்  தாய்மாமன் வாசு ( ஜெயகுமார்) ஆகியோருக்குள் சண்டை வருகிறது . ஒரு நிலையில் சமாதானமும் ஆகிறது . 
‘பிள்ளைகள் படித்து முடிக்கட்டும் . அப்புறம் திருமணம் செய்து வைக்கலாம்’ என்று முடிவு எடுக்கிறார்கள் . அதே நேரம் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடலாம் என்று தீர்மானிக்கிறார்கள் . 
 
கிருஷ்ணாவின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது . துளசிக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் கரு கலைக்கப் படுகிறது . 
 
படிப்பு முடிந்ததும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது . 
 
ஆனால் வயிற்றில் வளர்ந்த அந்த முதல் உயிரை மறக்க முடியாத துளசி,  அதற்கு தியா என்று பெயர் இட்டு மனதுக்குள் வளர்க்கிறாள் . ஒரு வயதில் அது இப்படி இருக்கும் . இரண்டு வயதில் இப்படி இருப்பாள் என்று படங்களை வரைந்து வைக்கிறாள் . 
ஐந்து வருடத்தில் ஓவிய தியாவுக்கு ஐந்து வயது ஆகும் நிலையில் தியா நிஜத்தில் வருகிறாள்.  தான் கலைக்கப்பட காரணமாக தாத்தா , பாட்டி , பாட்டியின் தம்பி என்று பலரையும் பழி வாங்குகிறாள் . 
 
துளசி ஒரு நிலையில் இதை உணரும்போது , அடுத்து தன் மகள் பழிவாங்க இருப்பது தனது கணவனைத்தான் என்பதை உணர்கிறாள் . அதன்படியே தியா தன் தந்தையை கொல்ல களம் இறங்க , துளசி கணவனை காப்பாற்ற முயல , 
 
ஜெயித்தது துளசியா ? தியாவா ? தியா எனில் எப்படி? துளசி எனில்  எப்படி ? என்பதே இந்த தியா . 
உருட்டல் , புரட்டல்  இல்லாமல் ஐஸ் கத்தி சொருகுவது போல ஜிலீர் சிலீர் என ஒரு பேய்ப்படம் . 
மேக்கிங்கில் அசத்தி கலக்கி மிரட்டி பின்னிப் பெடல் எடுக்கிறார் இயக்குனர் விஜய் . பிரம்மாதம் . 
 
காட்சி அமைப்பு , கேமரா நகர்வுகள், எல்லாம் அபாரம் . அழுத்தமான கனமான காட்சிகள் ! 
 
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பட்டப் பகல் பளீர் வெளிச்சத்தில் கூட அமானுஷ்ய தன்மை தருவதில் அபாரமாக ஜெயிக்கிறது . 
 
பின்னணி இசையில் இன்னும் பல மடங்கு பலம் கூட்டுகிறார் சாம் சி எஸ் . தியாவின் வருகையை உணர்த்தும் அந்த பொம்மை , அதற்கு சாம் கொடுத்து இருக்கும் தீம் மியூசிக்  இரண்டும்  கலை இயக்குனர் , ஒளிப்பதிவாளர் இசை அமைப்பாளர் , இயக்குனர் நால்வரும் கூட்டணி போட்டு ஜெயித்து இருக்கும் விஷயம் . 
 
தாத்தா , பாட்டியை அடுத்து தியா அம்மாவின் தாய்மாமனைதான் கொல்வாள் என்று என்னும் நிலையில் திரைக்கதை வேறு இடம் பாய்வது அபாரம் . 
 
அந்த சைல்ட் லாக் விசயமும் திரைக்கதைக்கு கைதட்டி விசில் அடிக்க வைக்கிறது . 
 
பிரேமம் மலர்  டீச்சர் சாய் பல்லவி தமிழில் முதன் முதலில் துளசியாக மணக்கிறார் . அவருக்கு இருக்கும் இமேஜ் படத்துக்கு பெரும்பலம் . மென்மையாக நடிக்கிறார் . அதற்காக புருஷன் உயிருக்கு ஆபத்து என்பதை கூட சாதரணமாகத்தான் சொல்லணுமா என்ன ?
பெரும்பாலும் அமைதியான  பார்வை , சிறப்பான உடல் மொழிகள் என்று  அசத்துகிறாள் குழந்தை வெரோனிகா . 
 
நாக ஷவ்ரியா,  கேரக்டருக்கு  ஷவ்ரியமாக நடித்துள்ளார் 
 
காமெடி இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஆர் ஜே பாலாஜி . ஆனாலும் காமெடி கம்மியே . 
 
மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை கவனமாக செய்து விட்டுப் போகிறார்கள் . 
 
தியாவின் ஆவி கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் தன்னை தவறான உறவில் கருத்தரித்த அப்பா அம்மாவைதானே முதலில் கொல்ல வேண்டும் . அப்புறம்தான் மற்றவர்களுக்கு வர வேண்டும் .
ஆனால் வரிசை தலை கீழாக இருப்பதும் அம்மாவை மட்டும் மன்னிப்பதும் என்ன நியாயம் ? அதுதான் பாசம் என்றால் அந்த பாசத்துக்குள் அப்பாவையும் மன்னிகலாமே . ஏன் மன்னிக்கவில்லை . 
 
இன்று கர்ப்பம் கலைய விஷம் ஆன உணவு, மோசமான மருத்துவம் , உடற்பயிற்சி இல்லாமை,  இவற்றால் விளையும் சிஸ்டிக் ஓவரி , சினைப்பை நீர்க்கட்டிகள் உட்பட பல காரணங்கள் உண்டு .
 
எனில் அந்த குழந்தைகள் சம்மந்தப்பட்ட  கார்ப்பரேட் கம்பெனி ஓனர்கள், அரசியல்வாதிகள்,  பெரு முதலாளிகள், இல்லுமினாட்டிகளைஎல்லாம் கொல்லுமா? அது நியாயம்தானே ?
 
அம்மா மேல் அவ்வளவு பாசமாக இருக்கும் தியா அம்மாவுக்காக  அப்பாவை மன்னிக்காதா ? அதற்கு துளசி என்ன முயற்சி செய்தாள் ? 
திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்து இருக்க முடியாதா ?
 
இப்படி சில கேள்விகள் வந்தாலும் , 
 
தங்கள் இஷ்டத்துக்கு கல்யாணத்துக்கு முன்பு சந்தோஷமாக இருந்து விட்டு அப்புறம் கருவை கலைத்து விட்டு ஜஸ்ட் லைக் தட் போகும் நபர்களுக்கு எல்லாம்  நல்ல படியாக அறிவுரை சொன்னால் கேட்க மாட்டர்கள் . 
 
இப்படி மிரட்டினால்தான் கேட்பார்கள்  என்று  இயக்குனர் விஜய்  தில்லாக பிரம்பு எடுத்து இருக்கும் விதத்தில், மனம்  கவர்கிறாள் தியா . 
 
சபாஷ் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *