ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஸீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, முரளி ஷர்மா, ஹரீஷ் பேராடி, கும்கி அஸ்வின், முத்துக்குமார் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ஹரி அய்யர் இயக்கி இருக்கும் படம்.
கணவன் இல்லாத நிலையில் அநியாயமாக விபச்சாரி பட்டம் சுமத்தப்படும் ஒரு பெண்ணுக்கு மகனாகப் பிறந்து , அப்படி விபச்சாரி பட்டம் சுமத்திய மோசமான பெண்ணைக் கொன்று, அதனால் அந்தப் பெண்ணின் எதிரியைக் காப்பாற்றி , அதற்கு விசுவாசமாக, தான் காப்பாற்றிய அந்த அரசியல்வாதி நபரால் ( சமுத்திரக்கனி) வளர்க்கப்பட்டு,
அவருக்கு சொந்தமான ஒரு பாரில் தங்கிக் கொண்டு அவர் சொல்வதை செய்யும் நபராக இருக்கும் ஒருவன் ( விஷால்)
திடீரென்று ஒரு பெண்ணைப் (பிரியா பவானி சங்கர்) பார்த்து சிலிர்த்துப் போகிறான் .
அதேநேரம் அவளை கொல்ல ஆந்திர மாநில தாதா அண்ணன் தம்பிகள் மூவர் ( முரளி ஷர்மா, ஹரீஷ் பெராடி, முத்துக்குமார் ) கும்பல் கும்பலாக கொடூர ஆயுதங்களை அடுத்தடுத்து அனுப்புகின்றனர் .
காரணம், தமிழ்நாடு ஆந்திரா பிரிக்கப்பட்டபோது தமிழகத்துக்கு வர வேண்டிய திருப்பதி ஆந்திராவுக்கு கொடுக்கப்பட்டது
(உண்மையில் மொழி வாரி மாநிலப் பிரிவினையால் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, நந்தி மலை , ஆரணியாறு, ராயலசீமாவின் தென் பகுதி உள்ளிட்ட தமிழர் நிலம் 32, 000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஆந்திராவுக்கு அநியாயமாகத் தாரை வார்க்கப்பட்டது, இப்போது உள்ள ஒட்டு மொத்த தமிழ்நாடே 1, 30 ,058 கிலோ மீட்டர்தான். ஆக தமிழகம் தனது நிலப்பரப்பில் ஐந்தரையில் ஒரு பங்கை, அதாவது , 1 / 5.5 ஆந்திராவிடம் மட்டும் பறிகொடுத்தது. இந்தப் பிரிவினையால் மொழி இன அதிகாரம் மாறிய நிலையில், அங்கிருக்கும் தமிழர் நிலங்களை ஆந்திரர்கள் அடித்துப் பிடுங்கினார்கள் )
அப்படி ஆந்திரப் பகுதியில் அநியாயமாக சிக்கிய பகுதியில் அந்தப் பெண்ணின் முன்னோர் சமாதி நிலம் சிக்கிக் கொள்ள, அதை பிடுங்கத்தான் இந்தக் கொலை முயற்சி .
வழக்கமான காதல் ஆசை ஏதும் இல்லாமல் அவன் அந்தப் பெண்ணை , தன் உயிரையும் பணயம் வைத்துக் காப்பாற்ற முயல்வதன் காரணம் ஏன்?

அடிதடி மட்டுமின்றி அரசியலும் கலக்கும் அந்த நில விவகாரம் என்ன ஆச்சு ? என்பதே படம்.
சற்றும் சுறுசுறுப்போ விறுவிறுப்போ குறையாத சிங்கமாக சண்டைக் காட்சிகளில் சிலிர்த்துக் கொண்டு பாய்கிறார் விஷால். குறையாத முறுக்கு. சபாஷ் விஷால். குளோசப் சோகக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் . இல்லை என்றால் கொஞ்சம் மிட் லாங் ஷாட் ஆகவாவது எடுத்து இருக்கலாம்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்துக்குப் பெரும்பலம். பின்னணி இசை மட்டுமின்றி பாடல்களிலும் ஹிட் கொடுத்து இருக்கிறார். குட்.
கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், விக்கி ஆகிய சண்டை இயக்குனர்கள் சும்மா தெறிக்க விட்டு பொறி பறக்க விடுகிறார்கள். தீப்பிடிக்கிறது திரையில் . படமே மாபெரும் சண்டை விருந்துதான்.
சுகுமாரின் ஒளிப்பதிவு சேசிங் காட்சிகளில் அசத்துகிறது.
அட்டகாசமான் லொக்கேஷன்கள் . அதுவும் அந்த கருப்பு மண் வயல்கள்.. அடடா அபாரம் ! கருப்பு மண்ணை எல்லாம் பாத்தே ரொம்ப நாளாச்சு . அருமை . நன்றி.
நிலம் விஷயமாக நாயகி எடுக்கும் முடிவும் அருமை. இந்தப் படத்தின் திரைக்கதையில் அத்தி பூத்த ஓரிரு இடங்களில் அதுவும் ஒன்று.
வசனங்கள் சில இடங்களில் கவனிக்க வைக்கின்றன.
வழக்கமான காரணம் இன்றி ஒரு பெண்ணைக் காப்பாற்ற நாயகன் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதற்கான காரணமும் அது தொடர்பான காட்சிகளும் அருமை . (ஆனால் அதற்குப் பின் கதை என்று சொல்லப்படும் காட்சிகள் அபத்தம்)
பிரியா பவானி சங்கர் ஒகே .
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் , கும்கி அஸ்வின் இருந்தும் காமெடியை பாலைவனக் கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் கதையாகத் தேட வேண்டி இருக்கிறது .

ஹரி அய்யரின் வழக்கம் போல பரபரவென படம் போகிறது . ஆனால் எங்கே போகிறது என்பதுதான் கேள்வி .
இன்னும் சிறப்பான திரைக்கதை எழுதி இருக்க முடியும். ஆனால் தானும் ஒரு பூணூல் கல்யாணம் செய்து கொள்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார் இயக்குனர் .
எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் உண்டு . கெட்டவர்களும் உண்டு .
எனவே எந்த ஒரு சமுதாய , மொழி இன மக்களையோ ஒட்டு மொத்தமாக வெறுக்கும் அல்லது தூக்கி வைத்துக் கொண்டாடும் மனநிலை, ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாது . முக்கியமாக படைப்பாளிக்கு இருக்கக் கூடாது . அதுதான் எனது கொள்கை
ஆனால் சாதி மத ரீதியாக அடுத்தவனை வெட்டுபவர்களை விட ஆபத்தானது அப்படி வெவ்வேறு சமூக மக்கள் வெட்டிக் கொண்டு சாவதற்கான சூழலை கட்டமைப்பதும் அதை வளர்ப்பதும்தான்.
அப்படிச் செய்யும் அடையாளம் கொண்டவர்களிடமே போய் நீ இனி நேரடியாகவும் வெட்டக் கத்துக்கோ என்பது என்ன மாதிரியான சிந்தனை, அவர்களிலும் நல்லவர்கள் உண்டு என்றாலும் ?
அதுவும் இப்போது இருக்கும் அரசியல் சூழலில்!
அதுவும் கொலை கொள்ளை சம்மந்தப்பட்ட ரவுடி தாதா ஒரு கதையில் அப்படி ஒரு சமூகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் அவசியம் என்ன ? பிரியாணிக்குள் எதுக்குங்க புளியோதரை?
இது என்ன ஒரு மன அடிமைத்தனம்? அடிமை வம்சங்களில் பாபிலோனிய அடிமைகளிடம் கூட இப்படி ஒரு அடிமைச் சிந்தனை இருந்திருக்காது .
தமிழ் நாட்டுக்கு வர வேண்டிய நிலங்கள் ஆந்திராவுக்குப் போனதால் வரும் பிரச்னைதான் இந்தப் படத்தின் கதை. ஆனால் அப்படிப் போகக் காரணம் ஈ வெ. ராமசாமியார் மட்டுமல்ல , இந்தப் படத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் அதே சமூகத்தினரும்தான் என்பது, இந்தக் காட்சிகளை எழுதியவர்களுக்குத் தெரியுமா? அல்லது யாருக்கோ நூல் சுற்றிய சொம்படிக்க தங்கள் வசதிக்கு மறைத்தார்களா?

இது தவிர, ஏழைகளின் கல்விக் கனவை அழிக்கும் நீட் தேர்வுக்கு ஜால்ரா வேறு. இந்தக் காட்சிகளை எடுத்தோரின் வரும் தலைமுறைகள் ஆறாம் வகுப்பு போகவே நீட் மாதிரி ஒரு தேர்வு எழுத வேண்டி இருக்கும் . அப்போ வலிக்கும் .
உண்மையில் இந்தப் படத்தை அவர்கள் தமிழுக்கு எடுத்து அப்படியே தெலுங்குக்கும் எடுக்கவில்லை. தெலுங்குக்கு எடுத்து அப்டிக்காவே தமிழுக்கும் எடுத்து இருக்கிறார்கள்.
அதே நேரம் , கொஞ்ச நாளாக சீரியல்களையும் டெலிஃபிலிம்களையும், ஷார்ட் பிலிம்களையும் , கார்ப்பரேட் பிலிம்களையும் ,அந்தக் கால தூர்தர்ஷன் டிராமாக்களையும் அமெச்சூர் நாடகங்களையும் , மாரியம்மன் கோவிலுக்குக் கூழ் ஊற்றும் மண்டபத்துக்குப் பின்னால் வண்ணார் தொழில்அக்காவிடம் பழைய வேட்டி சேலையை வாங்கி திரைகட்டி பள்ளிப் பிள்ளைகள் போடும் நாடகங்களையும் , துவக்கப்பள்ளி ஃபேன்சி டிரஸ் காம்பெட்டிஷன்களையும் ….
இது போன்ற இன்னபிற சமாச்சாரங்களையும் கொடுமைகளையும் கோரங்களையும் எல்லாம்…
சினிமா என்று பொய் சொல்லி ரசிகர்களை நம்ப வைத்து ஏமாற்றி தியேட்டருக்கு வர வைத்து பல கொலைகாரர்கள் சாவடித்துக் கொண்டிருந்த நிலையில்,
நல்லதோ கேட்டதோ, வத்தலோ தொத்தலோ , சுக்கோ இஞ்சியோ, முத்தலோ பிஞ்சோ அலுமினியமோ பித்தளையோ … அதையும் மீறி , திரையில் ஒரு பரபர விறுவிறு சுறுசுறு சினிமாவாக ஜொலிக்கிறான் ரத்னம் .
ரத்னம் . இந்த 2024 ஆம் வருடம் தமிழில் ரிலீஸ் ஆகி இருக்கும் முதல் ‘ சினிமா’
ஜிகினாக்கள் அதிகம் என்பதால் ஜினிமா என்று வேண்டுமானால் சொல்லலாம் .