ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகன் தயாரிக்க , அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டு தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” படத்தில் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்திற்கான மூலக்கதையை கிஷோர்குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
வரும் மே 24 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியபோது, “இந்தத் திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்துக் கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி இருவரும்தான். அவர்களால்தான் இப்படம் சாத்தியமானது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். “என்றார்

இசையமைப்பாளர் விவேக் சரோ பேசியபோது, “இது என் முதல் படம், நான் பல டீவி விளம்பர்ங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விசயமாகத்தான் இருக்கிறது. இந்தப் படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப் படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப் பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மே 24 ஆம் தேதி படம் வருகிறது ஆதரவு தாருங்கள். “என்றார்.

நடிகை விஷ்ணு பிரியா பேசியபோது, “எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதாபாத்திரம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவருமே எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும், பார்த்து ஆதரவு தாருங்கள் “என்றார்.

நாயகி அக்ஷயா கந்தமுதன் பேசியபோது, “எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி. இந்தப் படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக் காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தப் படத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப் படம் எனக்கு கனவுப் படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. “என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியபோது, “ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாக சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை. இம் மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளை தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது. இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துகள். “என்றார்

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியபோது, ” இந்தக் குழுவில் யாரையுமே எனக்கு தெரியாது. நேற்று என் நண்பர், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மூலம் இந்தப் படத்தின் குழுவினரைச் சந்தித்தேன். 15 வருடங்களாக கோடம்பாக்கத்தில் நடிகராக அலைந்தவர்தான் முருகன். இவர் மாதிரி பலரைப் பார்த்திருக்கிறேன். இன்னும் கனவுகளோடு அலையும் மனிதர்களின் சோகம் சொல்ல முடியாதது. அப்படி இருந்த முருகன் தனக்கான வாய்ப்பைத் தானே உருவாக்க எண்ணி இந்தப் படத்தை எடுத்துள்ளார். அதிலும் வித்தியாசமான படங்கள் மட்டுமே செய்யும் வெற்றியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார், அதிலேயே ஜெயித்து விட்டார். வாய்ப்புகள் தந்து புதியவர்களை உருவாக்குபவன் சின்ன வயதுக்காரன் என்றாலும் அவன் குருவாகிவிடுவான் அந்த வகையில் வெற்றி குருதான். இந்த புதிய முகங்கள் எல்லோரும் இணைந்து தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டட்டும் என வாழ்த்துகிறேன். இந்தப்படத்திற்கு என் வாழ்த்துக்கள். “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியபோது, ” பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பதுதான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாகப் படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார். ஒரு புதுமையான கதையில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். “என்றார்.

நடிகர் வெற்றி பேசியபோது, “எங்களை மதித்து எங்களை வாழ்த்த வந்த ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப் படம் கிடைத்தது. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே நான் செய்கிறேன் என ஒப்புக் கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப் படத்திற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நல்ல படத்திற்கு ஆதரவு தரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் “என்றார்