அண்மையில் சென்னை வந்திருந்த சிவா அய்யாதுரை பத்திக்கையாளர்களை சந்தித்தார் .
நிகழ்ச்சியை எஸ்.ஜி.பி.சி இந்தியா நிறுவன ஆதரவுடன் ‘சுவாசம்’ அமைப்பினைச் சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன் பி.ஆர்.ஓ ஜானுடன் இணைந்து ஒருங்கிணைப்பு செய்து இருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிவா பல விசயங்களை மனம் விட்டுப் பேசினார்.
” உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நான் 1978ல் ஈமெயிலை ஒரு இந்தியனாக ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ஒரு தமிழனாக ஈமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன்.இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் அப்போது இதை விளம்பரப்படுத்தி பிரபலப்படுத்தும் அளவுக்கு என்னிடம் வக்கீலோ அல்லது உடனிருந்து வழி நடத்த நபரோ இல்லை.
ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ‘இதைக் கண்டு பிடித்தது ஒரு 14 வயது தமிழ்ச் சிறுவன் ;இந்தியச் சிறுவன்’ என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.14வயது இந்தியச் சிறுவனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது முதலில் இங்கிருந்த பொருள்களைக் கொண்டு சென்றார்கள். அடுத்து இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்\. அவ்வளவுதான்.
ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,
சேர்க்கவே மாட்டார்கள் சேர விடவே மாட்டார்கள் . எனக்கும் அது நடந்தது .
ஒரு வெள்ளைக்காரன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று உலகை நம்ப வைக்க அவர்கள் விரும்பினார்கள். அதற்கான பல விளையாட்டுகளைச் செய்தார்கள்.
தோல்
மூளைச் சலவையிலிருந்து
வெளியே வர வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நான் கண்டுபிடித்ததை நான் போராடி நிரூபித்தேன். . அதன் மூலம் தமிழனுக்கான அடையாளத்தை இந்தியனுக்கான அடையாளத்தை நான் நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம் இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று!
ஜாதியை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். ..
எனது சொந்த ஊர் ராஜபாளையம், மும்பையில் வளர்ந்தேன். ஏழு வயதில் அமெரிக்கா போனேன்.. பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர் , பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர் , கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு. என் குடும்பம் போன இடம் ஏழைகளின் நகரமான பேட்டர்சன்.
நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து பின்னர் , வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம். படிப்பில் கணிதம் மற்றும் மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்
1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான்.
அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்
அப்போதே 14,15 செமினார் கூட நடத்தி இருக்கிறேன் .
எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும் சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து அதன் மூலம் 3 கல்லூரிகளையும் இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.
இதுமாதிரி புதுமாதிரி கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது. தகுதியுள்ளது. என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக ‘ரேட்டியான்’ என்கிற கும்பல் ஒன்று சேர்ந்து மோசடிகள் மற்றும் போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். ஈமெயில் கண்டு பிடித்தது சிவா அய்யாதுரைதான் என்று நிரூபித்து வெற்றி பெற்றேன்.
அதுவரை ‘ஈமெயில்’ என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக்ஷனரியிலும் வந்தது.
இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல் அங்கு வந்தது.
இப்போது தினமும் 20 ஆயிரம் கோடி ஈமெயில் போக்குவரத்துகள் நடக்கின்றன.. 4.2 பில்லியன் ஈமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு தமிழனின் இந்தியனின் கண்டுபிடிப்பின் விளைவு அல்லவா?
1993ல் அதிபர் கிளிண்டன் கூட ஈமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார்.எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.
நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான். ஆனால் ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்சினை என்று கண்டு பிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.
மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உடம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம் மருந்துகள், ஆயிரம் டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு. எதையும் அவர்கள் வியாபாரமாகப் பார்ப்பார்கள்
‘சைட்டோ சால்வ்’ என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம்.
நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது. நம் வீட்டு கறி மசாலாவில் மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும்.
நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் நான் இப்போது மென்பொருள் செய்து வருகிறேன் .
நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை.
இறுதியாகச் சொல்வது இதுதான் அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால் இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம். “என்று முடித்த போது செய்தியாளர்களே விசிறிகளாக மாறி கரவொலி எழுப்பினர்.
சிவா அய்யாத்துரையும் நானும்
ஈ மெயில் குறித்த காப்புரிமைக்காக சிவா அய்யாத்துரை போராடிக் கொண்டு இருந்த நேரம் அது . சிவா அய்யாதுரை பற்றி ஆங்கில இதழ் ஒன்றில் வந்த கட்டுரையை ஒரு நண்பர் நமக்கு அனுப்பி வைக்க , அதைத் தொடர்ந்து சிவா அய்யாதுரையை தொடர்பு கொண்டு அவரது பேட்டியை எடுத்து பிரசுரித்த முதல் பத்திரிக்கையாளன் நான்தான்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்சொன்ன பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவா அய்யாதுரையை பார்த்த போது , என்னை பெயர் சொல்லி சு.செந்தில் குமரன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள , சில நொடிகளின் நினைவு கூர்ந்து ” மறக்க முடியுமா உங்களை ? என் தாய் நாட்டில் என் தாய் மொழியில் இருந்து எனக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல் உங்களுடையதுதான் ” என்றார் .
அதை பணிவோடு மறுத்த நான் “இல்லை எனக்கு உங்களைப்பற்றிய ஒரு கட்டுரை கிடைத்தது . ஆக, எனக்கு முன்னே பலர் எழுதி இருக்கக் கூடும் ” என்றேன் . ” இருக்கலாம் . ஆனால் அந்த சமயத்தில் நீங்கள் என்ன நேரடியாக தொடர்பு கொண்டது உற்சாகமாக இருந்தது ” என்றார் .
நான் சிவாவிடம் “ஈமெயில் வந்ததால் காகிதங்களின் பயன்பாடு குறைந்தது . அதனால் கல்வி மற்றும் அலுவலுக்கான காகிதத்துக்காக மரங்களை வெட்டுவது தவறே இல்லை என்ற வாதம் மாறியது .
தவிர அச்சுக்களில் உள்ள காரீய உலோகத்தை மனிதன் நேரிடயாக கையாள்வதும் , போட்டோக்களில் உள்ள நிறமிகள் உள்ளிட்ட ரசாயனப் பொருட்களை மனிதன் கையாள்வதும் குறைந்தது. இது ஆரோக்கியத்தை நோக்கிய முன்னேற்றமாக அமைந்தது . இது நீங்கள் சுற்றுச் சூழலுக்கு செய்த உதவி” என்றேன் .
கட்டிப் பிடித்துக் கொண்டார்.
உடனே தனது உதவியாளரை அழைத்து ஈமெயில் வந்த காலம் தொட்டு எவ்வளவு மரங்கள் வெட்டாமல் தடுக்கப்பட்டு இருக்கும்? அதனால் எவ்வளவுக்கு மழை அளவு குறையாமல் இருந்திருக்கும்?. காரீயம் மட்டும் நிறமிகள் கையாள்வு குறைவதால் எவ்வளவு புற்றுநோய் அபாயம் எவ்வளவு குறைந்திருக்கும்? என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கச் சொன்னார் .
பிறகு மற்றவர்கள் அறிவதற்காக இதே விஷயத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் சொன்னேன்
“ஈமெயிலில் வேறென்ன மாற்றங்கள் வேண்டும் ?” என்று கேட்டார் . அதற்கு நான் “தொழில் நுட்ப ரீதியாக எனக்கு விவரங்கள் தெரியாது. நான் ஒரு பாமரன் . ஆனால் பாஸ் வேர்டுக்குப் பதிலாக கைரேகை , கண் கருவிழிப் பயன்பாடுகள் வந்தால் பாஸ்வேர்டு ஹேக்கிங் குறையும்” என்றேன் .
“குட் பாய்ன்ட் . செய்யலாம் ” என்றார்.
சீக்கிரம் செய்ங்க சிவா . எங்க பார்த்தாலும் அயோக்கியனுங்க தொல்லை தாங்கல.








