எஸ் ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ் ஆர் ராஜன் தயாரித்து இயக்க, ராகினி த்விவேதி, அசோக், பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ, ஆதவ் பாலாஜி, மனோபாலா நடிப்பில் தமிழ் கன்னடம் இரண்டு மொழிகளில் வந்திருக்கும் படம்.
ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபடி தோழிகளுடன் ஒன்றாக வசிக்கும் ஒரு பெண்ணுக்கு ( ராகினி த்விவேதி) , அதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் வழிசல் பெண்களால் பாதிக்கப்பட்டு , நிறுவன ஓனரால் ( மனோபாலா) வேளையில் இருந்து நீக்கப்படுகிறாள் . வறுமை, அதனால் தோழிகளின் கோபம் இவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது, அவளது போனுக்கு ஒரு வீடியோ கேம் விளையாட வைக்கும் ஈமெயில் வருகிறது.
அந்த விளையாட்டில் மூன்று பேரைகாட்டி ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொல்கிறது . அது தொடர்பான ஒரு போட்டி நடக்கிறது . தேர்ந்தெடுத்தவர் சரி என்றால் பணம் கிடைக்கும் என்கிறது . ஜஸ்ட் ஒரு கிளிக் செய்ய மறுநாள் ஒரு லட்ச ரூபாய் கொரியரில் வருகிறது . அதோடு அவள் விரும்பும் ஒருவனின் (அசோக்) காதலும் கிடைத்து கணவன் மனைவியாகின்றனர்
தொடர்ந்து விளையாட சில முறை பணம் வர , அப்புறம் வில்லங்கம் வருகிறது . அவள் ஒருவனை கொலை செய்வது போன்ற புகைப்படங்கள் வருகின்றன .
ஒரு பெரிய தாத்தாவிடம் இருக்கும் ஒரு ஹார்ட் டிஸ்கை எடுத்துத் தரச் சொல்லி , சொன்னதைச் செய்யாவிட்டால் போலீசில் மாட்டி விடுவோம் என்கிறது தகவல் .
வீட்டுக்குள் நுழையும் ஒரு கொலைகாரன் , அவளையும் அவளது கணவனையும் கொல்ல முயல்கிறான் .
கணவன் மனைவி அங்கிருந்து கிளம்பு வேறொரு இடத்துக்கு வந்து விட , அங்கும் கொரியர் வருகிறது .
புதிய அட்ரஸ் எப்படித் தெரியும் என்று அவள் குழம்ப அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
வித்தியாசமான கதை எழுதி அழகான படமாக்கலையும் கொடுத்து இருக்கிறார் தயாரித்து இயக்கி இருக்கும் எஸ் ஆர் ராஜன் . பாராட்டுகள் .
படம் முழுக்க அழகு கொஞ்சும் பெண்கள், கவர்ச்சிப் பெண்கள் , பல கெட்டப்கள் பல்வேறு குணாதிசயங்களில் வந்து கொண்டே இருக்கிறார்கள்
தோற்றம் ஒத்துழைக்கவில்லை என்றாலும் நடிப்பால் படத்தைத் தாங்கி, உற்சாகமாக நடித்தும் அடித்தும் இருக்கிறார் ராகினி . அசோக் வழக்கம் போல கச்சிதம்.
மனோபாலா காமடிகள் புன்னகைக்க வைக்கின்றன.
செல்வத்தின் ஒளிப்பதிவு அழகு . கவாஸ்கர் அவினாசின் பாடல் இசை பெரிதாகப் பலனளிக்கவில்லை என்றாலும் ஜுபின் மேத்தாவின் பின்னணி இசை சிறப்பு
இரண்டாம் பகுதியில் சின்னச் சின்னதாக அடுத்ததடுத்து வரும் காட்சிகளை சிரத்தையாக தொகுத்து இருக்கிறார். ராஜேஷ்குமார் .
மாஸ் மாதா , பயஸ்கான், பீர் மாஸ்டர் ஆகியோரின் சண்டைக் காட்சிகளும் அவை எடுக்கப்பட்ட விதமும் சிறப்பு.
கோபி ஆனந்தின் கலை இயக்கமும் பாராட்டும்படி இருக்கிறது .
படத்தின் முதல் பாதி அட்டகாசம். வித்தியாசமான கதை , நல்ல மேக்கிங் என்று பாராட்டும்படி செய்திருக்கும் எஸ் ஆர் ராஜன் திரைக்கதை வசனத்தில் இன்னும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கலாம் .
சித்தி கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண், திடீரென கன்பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டா, லேடி ஜேம்ஸ்பாண்ட் , இன்ஸ்டன்ட் விஜயசாந்தியாக மாறி சண்டை போடும்போது, சினிமாத்தனம் வந்து விடுகிறது .
அதே போல வீடியோ கேம் சமூக விரோதிகளின் பொதுவான செயல் என்று விவரிக்கப்பட்டு இருந்தால் படத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்து இருக்கும் . ஒரு தனிப்பட்ட நபருக்கான வலை என்னும்போது, உப்பு சப்பின்றிப் போய்விடுகிறது . தவிர இரண்டாம் பகுதியில் பழைய மசாலாப் படங்களின் நெடி
எனினும் படமாக்கலில் கவர்கிறது ஈமெயில். எதிர்பாராத நல்ல ஆச்சர்ய அனுபவம் வேண்டுமா? திரையரங்கில் போய்ப் பார்க்கலாம் இந்தப் படத்தை .