
லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லி ராஜா, ராஜூ மகாலிங்கம் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் , கயல் ஆனந்தி, நடிப்பில் ,
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டான் இயக்கி இருக்கும் படம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு
ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தை தலைப்பாகக் கொண்டு வரும் இந்தப் படத்தில் ஆனந்த் என்ற புது வில்லன் அறிமுகம் ஆகிறார் .
வி டி வி கணேஷ் , சரவணன், நிரோஷா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் உண்டு . இசையும் ஜி வி பிரகாஷ்
பதினேழாம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .
ஒன்று…. எம் எஸ் விசுவநாதன் இசையில் நினைத்ததை முடிப்பவன் படத்தில் எம் ஜி ஆர் ஆடிப் பாடும் கண்ணை நம்பாதே பாடலின் ரீமிக்ஸ் .
இன்னொன்று சுப்பையா நாயுடு இசையில் மரகதம் படத்தில் சந்திரபாபு பாடி ஆடி நடித்த குங்குமப் பூவே கொஞ்சு புறவே படத்தின் மெட்டில் அமைந்த பாடல் .
முன்னோட்டத்தில் ஒரு பக்கம் வழக்கமான டீன் ஏஜ் பையனாக வந்து ஆனந்தியை லவ் பண்ணும் பிரகாஷ் குமார்,
இன்னொரு பக்கம் “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” என்று கழுத்தை வெட்டி வெட்டி சீரியசாக பேசுகிறார் .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சாம் அன்டன் ” டார்லிங் படத்தில் நானும் பிரகாஷ் குமாரும் இணைந்தோம் . அதன் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து இருக்கிறோம்.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளராக வந்தது பெரிய மகிழ்ச்சி . அதற்குக் காரணம் பிரகஷ்குமார்தான். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .
ராஜு மகாலிங்கம் தன் பேச்சில் ” ரஜினி நடிக்கும் 2.ஓ பட வேலைகளில் பிசியாக இருந்தபோது இந்தப் பட விசயமாக தகவல் வந்தது .
ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்தின் தயாரிப்புக்காக என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னார்கள் .
‘2.ஓ பட வேலைகளே நிறைய இருக்கும்போது இன்னொரு படம் இப்போது சாத்தியமா என்று நினைத்தேன் . வேண்டாம் என்று தவிர்த்தேன்.
‘என்ன இருந்தாலும் ஜி வி பிரகாஷ் பெரிய மியூசிக் டைரக்டர் . அந்த சந்திப்பைத் தவிர்க்க வேண்டாம்’ என்று சொன்னார்கள் . (வாய் பொத்தி சந்தோஷமாக சிரிக்கிறார் பிரகாஷ் ) சரி என்று சம்மதித்தேன்
சந்தித்த போது பிரகாஷ் குமார் அவுட்லைன் சொன்னார் . நன்றாக இருந்தது . மறுநாள் இயக்குனர் சாம் ஆண்டன் வந்தார் . அவரது உதவியாளர் முழு கதையையும் சொன்னார் .
என்னோடு வேறு சிலரும் கதை கேட்டார்கள். ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லோரும் சிரித்துக் கொண்டே இருந்தோம் .
உடனே ஆரம்பித்து முடித்து விட்டோம் ” என்றார் .
ஜி வி பிரகாஷ்குமார் பேசும்போது ” டார்லிங் பட ஷூட்டிங்கின் போதே இந்தப் படத்தின் கதையை எனக்கு சாம் ஆன்டன் சொல்லி இருந்தார்
பிறகு சாம் ஆண்டனை பார்த்தபோது நாலைந்து கதைகள் இருக்கு என்றார் .
பல இடங்களில் முயன்று கொண்டு இருந்தார் . ஓர் இடைவேளைக்குப் பிறகு பார்த்தபோது ‘ஒண்ணும் செட் ஆகல’ என்றார் . நான் இந்தக் கதையை ஞாபகப்படுத்தினேன் .
அடுத்த சந்திப்பில் கதையை மீண்டும் சொன்னார் . இதற்கு ஒரு பெரிய புரடக்ஷன் ஹவுஸ் தேவைப்பட்டது . லைகா கிடைத்தது .
ராஜு மகாலிங்கம் சார் சொன்னது போல 2.ஓ படத்தின் கேப்பில் ஆரம்பித்து படத்தை முடித்து விட்டோம் .
எனக்கு எம்ஜிஆரின் கண்ணை நம்பாதே பாடல் ரொம்பப் பிடிக்கும் . எனவே அந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்தேன் . சந்திரபாபு மீது உள்ள ஈர்ப்பால் குங்குமப் பூவை இந்தப் படத்தில் போட்டுக் கலக்கினேன் .
இது எல்லோரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய கிளீன் யூ சர்டிபிகேட் படம் ” என்றார் .
பின்குறிப்பு : இயக்குனர சேரனின் மகள் தாமினியை காதலித்து வாழ்ந்து விட்டு பின்னர் சேரன் வீட்டுக்கே அனுப்பி வைத்த சந்துரு, இந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிகிறார்