ஒரு நாள் கூத்து @ விமர்சனம்

ONK-2108

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரிக்க, 

தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, அறிமுகம் நிவேதா பெத்துராஜ் ,பால சரவணன், ரமேஷ் திலக்  நடிப்பில் 
சங்கரதாஸ்  என்பவரோடு சேர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி ,  அறிமுக இயக்குனர்நெ ல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம்  ஒரு நாள் கூத்து. 
இது பாவைக் கூத்தா? இல்லை கோமாளிக் கூத்தா ? பார்க்கலாம் 
சென்னையில்  ஐ டி நிறுவனத்தில் பணிபுரியும் ராஜ் (தினேஷ்) என்ற கிராமப்புற இளைஞனுக்கும் , உடன் பணிபுரியும் பணக்காரப் பெண்ணான காவ்யாவுக்கும் (அறிமுகம் நிவேதா பெத்துராஜ்)  காதல் . 
குடும்பக் கடமைகள் இருப்பதால் சம்பாதித்து செட்டில் ஆகித்தான் கல்யாணம் என்று ராஜ் சொல்ல , காவ்யாவின்  தந்தை ஜாதி மற்றும்அ ந்தஸ்தைக் காரணம் காட்டி ராஜுவிடம் இருந்து காவ்யாவைப் பிரிக்க நினைத்து, 
 இருவருக்குள்ளும் சண்டை மூட்டுகிறார் .
ONK-6966
”என்னை நீ புரிந்து கொள்ளவில்லை”  என்று காவ்யா ராஜ் இருவருமே சண்டையிட ,  அப்பாவின் ஆசைப்படி  வேறு மாப்பிள்ளைக்கு சம்மதிக்கிறாள்  காவ்யா . காவ்யாவின் கல்யாண  தினம் வருகிறது . 
அதே சென்னையில் சூரியன் பண்பலையில் பணியாற்றும் சுசீலா என்ற பெண் வர்ணனையாளருக்கு ( ரித்விகா), வசதி இன்மை அதனால் வரதட்சணை கொடுக்க முடியாமை இவற்றால்  திருமணம் தள்ளிப் போகிறது. 
உடன் பணியாற்றும் சதீஷ் (ரமேஷ் திலக்) அவளுக்கு நல்ல நண்பனாக இருக்கிறான். 
ஒரு வழியாக  சுசீலாவுக்கு    நிச்சயிக்கப்பட்ட ஒரு மாப்பிள்ளை , ‘கொஞ்சம் பொறுத்தால் இன்னும் சிவப்பான இன்னும் படித்த இன்னும் வசதியான பெண் கிடைக்கும்’ என்று எண்ணி,
பத்திரிக்கை அடித்த நிலையில்  சுசீலாவிடம் ‘;நமக்குள்ள திருமணாம் வேண்டாம்’ என்கிறான் .
சுசீலாவும் அவளது அண்ணனும் மாப்பிள்ளையிடம்  பார்த்து கெஞ்சுகிறார்கள் .ஒரு வழியாக சுசீலாவை திருமணம் செய்து கொள்ள  சம்மதிக்கிறான் அந்த மாப்பிள்ளை . 
 
ONK-2947
இன்னொரு பக்கம் அழகு அறிவு எந்த ஓர் ஆணையும் ஏறெடுத்தும் பார்க்காத தூய்மை  , அச்சம் , மடம், நாணம், பயிர்ப்பு  எல்லாம் கொண்ட லக்ஷ்மி என்ற ஒரு தென் மாவட்டத்துப் பெண்ணுக்கு (மியா ஜார்ஜ் ) , 
அவள் அப்பா (நாகி நீடு)   தங்கள் அந்தஸ்துக்கு ரொம்ப ரொம்ப தகுதியான மாப்பிள்ளை வேண்டும் என்று  பார்ப்பதாலேயே,  திருமணம் தாமதமாகிறது . 
ஒரு நிலையில் வயதான  மாப்பிள்ளைகள் , ரெண்டாம் தாரமாகக் கேட்கும் மாப்பிள்ளைகள் எல்லாம் பெண் கேட்கும் அளவுக்கு அவளது நிலைமை போகிறது . 
 ஒரு நிலையில் லக்ஷ்மிக்கு  ஒரு நல்ல மாப்பிளை வர , லக்ஷ்மி உட்பட அனைவருக்கும் அவனைப் பிடிக்க, அந்த மாப்பிள்ளையின் அம்மாவோ லக்ஷ்மியின் அப்பா பாணியில், 
தங்கள் தகுதிக்கு ரொம்ப ரொம்ப பொருத்தமான பொண்ணுக்கு ஆசைப்பட்டு லக்ஷ்மியை மறுதலிக்கிறாள். 
அந்த  மாப்பிள்ளை லக்ஷ்மியிடம் ‘ நீ  சென்னைக்கு வந்து விடு நாம் திருமணம்  செய்து கொள்ளலாம்’ என்று கூற அப்படியே  முடிவு செய்து சென்னைக்கு வந்து சேர்கிற லக்ஷ்மிக்கு  பின்னடைவு ஏற்படுகிறது 
ONK-0220
இந்த சமயத்தில் நடக்கும் ஒரு விபத்து  இதுவரை  சேர்க்கப்பட்ட  மணப் பெண்கள் மற்றும் மாப்பிள்ளைகள் என்னும் ரம்மி மற்றும்  ட்ரிப்லெட், ஃபோர் கார்டு  உள்பட எல்லா சீட்டுக்களையும்  கலைத்துப் போடுகிறது . 
சரி இவ்வளவு போராட்டத்துக்குப பிறகாவது நடக்கும் விசயங்கள்  ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறதா என்று பார்த்தால் … 
கூத்து குறில் ஆவதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை ! 
இதுதான் ஒரு நாள் கூத்து படம் 
ஓர் இயக்குனராக  அட்டகாசமாக ஜெயித்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் 
சொல்ல வந்த விசயத்தை  கேமரா மொழி மூலம் விவரிக்கும் விதம், காட்சி அமைப்பு , ஃபிரேமிங்ஸ், ஷாட்ஸ் , நடிக நடிகையர் தேர்வு , அவர்களிடம் வேலை வாங்கிய விதம் , 
ONK-9413
நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எப்போ வருவரோ பாடலைத் தேடிப் பிடித்துப் பயன்படுத்திய ஆவேச ஆர்வம்,
எடுத்துக் கொண்ட காட்சியில் சொல்ல வந்த விசயத்தை தெளிவாகச் சொல்லும் திறம்  எல்லாம் ஆசம் அட்டகாசம் !
 அவ்வளவு அழகான அந்த டைட்டிலின் போதே ஆரம்பித்து விடுகிறது நெல்சனின் ராஜாங்கம் ,
கதாபாத்திரங்களின் உணர்வை விஷுவலாக ரசிகனுக்குக் கொண்டு போவதில் அசத்துகிறார்  இயக்குனர் .உதாரணமாக   காவ்யா — ராஜ் வெடித்துச் சண்டையிட்டுப் பிரியும் காட்சியில் மழையைப் பயன்படுத்திய விதம் ! 
பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பா என்பதை வசனத்தில் சொல்லாமல் காட்சியாக எப்படி சொல்லலாம் ?
 மகாலட்சுமி போட்டோ முன்பு பெண்ணை நிற்கவைத்து பெண்ணின் உருவம் மகாலட்சுமி போட்டோவில் பிரதிபலிக்கும்படி  காட்டி விட்டால் போச்சு.  எப்படி டைரக்ஷன்? 
 ONK-8843
தவறான புரிதல் காரணமாக ஒரு தவறான அதிர்ச்சி தருகிற முடிவை எடுத்தாலும் கூட,  படத்தில் சுசீலாவின்  கதாபாத்திரம் மிகு முழுமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது . 
அதுபோல லக்ஷ்மியின் தோழியாக வரும் அந்தக் கதாபாத்திரம்…. மண்வாசனை படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஓர்  அர்த்தமுள்ள  கிராமத்துத்  தோழி  கதாபாத்திரம் அது.  . வெல்டன் !
 சுசீலாவின் மாப்பிள்ளையாக வரும் கதாபாத்திரததின் மன சலனங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிகிறது . காரணம் இன்றைய பேராசை கொண்ட பல, 
 அரேஞ்சுடு மேரேஜ் இளைஞர்களின் பிரதிபலிப்பாக  இருக்கிறது அந்த கேரக்டர் . கருணாகரன் கேரக்டர் வெகு யதார்த்தம் . சிறப்பு 
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்துள்ளது . காட்சியின் தன்மைக்கு ஏற்ப அவர் கையாண்டிருக்கும்  இருள் – ஒளிப் பயன்பாடுகள் அருமை . 
ONK-2301
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அடியே அழகே பாடலும் பாட்டைப் போடுங்க ஜி பாடலும் கேட்ட உடன் (மனதில் இடம்) பிடிக்கிறது . 
தில்லானா மோகனாம்பாள் படத்தில் கே வி மகாதேவன் இசையில், 
 மேற்கத்திய இசைக் குறிப்பை நாதஸ்வரம் தவில் மூலம் வாசித்து சரித்திரம் படைத்த அந்த இசைத் துணுக்கை எல்லாம் பின்னணி இசையில் எடுத்துப் போட்டு, 
தேடித் தேடி உழைத்து இருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன் (ம்ம்ம் . நடக்கட்டும் .. நடக்கட்டும் …!)
பல பின்னல்கள் கொண்ட திரைக்கதையை முடிந்தவரை குழப்பாமல் கொடுத்த வகையில் (சாபு ஜோசப் ) எடிட்டிங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது . 
கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் பொதுவில் நைஸ் .
(யதார்த்தம்தான் என்றாலும் ஐ டி கம்பெனியும் சூரியன் பண்பலை அலுவலகமும் ஓரே மாதிரி இருப்பதை தவிர்க்க, வெவ்வேறு  வண்ணங்களை மட்டுமாவது பயன்படுத்தி இருக்கலாம் )
ONK-1560
நடிப்பில் ரித்விகாவுக்கே முதல் இடம் . திருமணப் பத்திரிக்கையோடு வரும் காவ்யாவிடம் தன் தரப்பு நியாயத்தை விளக்கும் இடத்தில் தினேஷ்…. சூப்பர் . 
காவ்யாவாக வரும் அறிமுக நடிகை நிவேதா பெத்துராஜ் நவீன அழகு நல்ல நடிப்பு என்று காட்சிக்குக் காட்சி கவர்கிறார் .
குறிப்பாக கெமிஸ்ட்ரி விவகாரத்தில் ‘டைட்ரேஷன்’ வரை  எல்லாவற்றுக்கும் நன்றாக  ரியாக்ட் ஆகிறார் . 
நல்ல நேரமும், சுற்றி நல்லவர்களும் அமைந்தால்  மார்க்கெட் ராக்கெட்டில் ஏறுவார் .
ONK-6920
கருணாகரன் கேரக்டராக மாறி இருக்கிறார் . பாலசரவணன் சில இடங்களில் காமெடிக்கு கை கொடுக்கிறார். நடிப்பிலும் அடுத்த கட்டம் ! மியா ஜார்ஜ் , ரமேஷ் திலக் இருவரும் ஒகே . 
காமெடிகளில் கலகலப்பாகவும் சீரியஸ் காட்சிகளில் கவனமாகவும் எழுதப்பட்டிருக்கிறது வசனங்கள் .
“கல்யாணம் நடந்து கொஞ்ச நாள் வாழ்ந்து அப்புறம் பிரிஞ்சு கஷ்டப்படறத  விட , கல்யாணம் பண்ணிக்காமலே கஷ்டப்படுறது எவ்வளவோ மேல் ” போன்ற  வசனங்கள் 
இப்படி பாராட்ட பல விஷயங்கள் இருந்தாலும் , ஒரு நிலையில் திரைக்கதைதான் திரிந்து போன பாலாகி விட்டது . 
முதல் பாதி மிக சிறப்பாகவும் இரண்டாம் பாதியில் கூட பாதிவரை சரியாகவும் போகும் திரைக்கதை,  போகப் போக நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தையே ஆவேசமாய் வெட்டிச் சாய்த்து விடுகிறது . 
திரைக்கதை என்னும் சாலையில்  பயணிக்கும் கதாபாத்திரங்கள் எனும் கார்கள் பலவும் அலட்சியம் காரணமாகவே அநியாய விபத்துக்கு ஆளாகின்றன . 
ONK-7741காவ்யா ராஜ் இருவருக்கும் அவரவர் தரப்பு சரியாகப் படலாம் . ஆனால் அதை ஆக்கபூர்வமாக பேசிக்கொள்ளக் கூட முடியாது என்றால் அவர்களின் காதலில் உண்மை இல்லை என்றே தோன்ற வைக்கிறது ..
இன்னும் ரெண்டு வருடம் பொறுக்க முடியாது என்று சொல்வதற்கு காவ்யாவிடம் நியாயமான காரணங்கள் இல்லை . 
பத்திரிக்கையோடு வரும் காவ்யாவிடம் சொல்லும் விளக்கத்தை பிரச்னை வரும்போதே சொல்வதில் ராஜுக்கு என்ன கவுரவக் குறைச்சல் ? அப்படி நினைத்தால் அப்புறம் அது என்ன லவ் ?
அப்பா அம்மா தங்கை என்று குடும்பத்தைக் காப்பாற்றுபவனை ‘பல இலை சாப்பாட்டுக்கு ஆசைப்படுபவன்’ என்று சொல்வது — அந்த வசனத்தைப் பேசி இருப்பவன் படு அயோக்கியன் என்றாலும்  கூட ,
 ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று . 
ONK-3136
லக்ஷ்மியின் அப்பா தனது அந்தஸ்துக்கு ஏற்ப மாப்பிள்ளை வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தப்பில்லைதான் . ஆனால் யதார்த்தத்தில் எல்லா அப்பாக்களும் ஒரு சில வருடம் வரை மட்டுமே அப்படி தள்ளிப் போடுவார்கள் . 
ஒரு நிலையில் பெண்ணுக்கு  வயசு ஆகுதே என்ற பதட்டம் வந்து கொஞ்சம் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டோ அல்லது பொருத்தமான மாப்பிள்ளையை  தேடிப் பிடித்தோ, 
 மகளுக்கு நல்லபடியாக கல்யாணத்தை முடிக்கத்தான் பார்ப்பார்கள் .
ஆனால் இந்த அப்பா ஏழெட்டு வருஷமாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்வதும் ‘என் மகளுக்கு லட்சம் மாப்பிள்ளை வருவான்’ என்று சொல்வதும் 
‘சீரியஸ் மாதிரி காமெடி’யாக இருக்கிறது . 
நிஜத்தில் யாராவது ஒருவர் அப்படி இருக்கலாம் . ஆனால் இயல்பில் பொதுவில்  வெகு ஜன ரசனை அதை ஏற்குமா ?
ONK-7204
மகளின் விருப்பத்தை நயவஞ்சகமாக உடைத்து ஏற்பாடு செய்த திருமணம் பெண்ணுக்கே அவப் பெயர் தேடி நின்று போன பிறகும் , அவள் காதலித்தவனை அவளுக்கு திருமணம் செய்து தர , 
காவ்யாவின் அப்பா மறுப்பதற்குச், சொல்லப்படும்  காரணங்களில், திரைக்கதையின்  சந்தர்ப்பவாதம் தெரிகிறதே தவிர , நியாயமோ இயல்போ இல்லை . 
கடைசியில்  காவ்யா  சொல்லும் அந்த விளக்கம் கூட ‘ஆபரேஷன்  சக்சஸ் . ஆனால் பேஷன்ட்  அவுட்’ என்று ‘அய்யகோ’ விசயமாக இருக்கிறது  .
back up ஆ ? current data வா  என்பதா முக்கியம்? system ஒர்க் ஆவதுதானே காவ்யா வெற்றி ?  தவிர back up ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை . அது ஆபத்பாந்தவன் .  அனாத ரட்சகன் . கடவுளுக்கு சமமான ஒன்று .
நடந்த விபத்தின் டுவிஸ்ட்டில் ரசிகனுக்கு ஒரு பாசிட்டிவான ஃ பீல் குட் உணர்வை கொடுத்து விட்டு அப்புறம் எதுக்கு அந்த சேம் சைடு (ஷேம்  சைடும் கூட ) GOAL? 
ONK-8363
இது இப்படி என்றால் அவ்வளவு நம்பிக்கை கொடுத்து விட்டு வந்த —  அந்த  அளவுக்கு பாசிட்டிவ்  ஆக வடிவமைக்கபட்ட சதீஷ் கேரக்டரை, 
கடைசியில் இப்படி மரக் கட்யாடைக்கி இருப்பதும் பக்குவமில்லாத்தனம் 
படத்தில் ஏகப்பட்ட மாப்பிள்ளைகள் ஏகப்பட்ட பெண்கள்  இருக்கிறார்கள் என்பதற்காக  ஆட்களை சும்மா மாற்றி மாற்றி ஜோடி சேர்த்து சும்மா ஜோராக பிங்கி பிங்கி பாங்கி  ஆடுகிறார்கள் . 
கொஞ்சம் அசந்தால் திரைக்குள் இருந்து கையை நீட்டி படம் பார்த்துக் கொண்டு இருக்கும் ரசிகனையோ ரசிகையையோ உள்ளே இழுத்து,
 மணவறையில் உட்கார  வைத்து விடுவார்களோ என்ற நடுக்கமே வருகிறது (சம்மந்தப்பட்டவர்களின் குடும்பம்  குட்டி கதி ?)
எல்லாவற்றையும் விட முக்கியமாக ,  
ONK-6090
விரும்புகிற முகூர்த்த நாளில் விரும்புகிற மண்டபம், ,அந்த நாளுக்குப் பிறகு எந்த நாளும் அணியாத டிரஸ், பீரோவில் தூங்கியே மக்கிப் போகும் வீடியோ,  போட்டோ , 
மற்றவனின் காதை  செவிடாக்கும் ஒலிபெருக்கி , பட்டப்பகலில் எரிய வைக்கப்படும் விளக்குகள் , இவற்றுக்கான ஆடம்பரச் செலவுகள் 
மாப்பிள்ளை வீட்டு முறுக்கு , காபி விசயத்தில் கலவரம் , சாப்பாடு விசயத்தில் சச்சரவு , சரக்கடித்து விட்டு நடக்கும் சண்டை இவை போன்றவற்றால், 
கல்யாணம் என்ற நிகழ்வுதான் ஒரு நாள் கூத்து என்று பரிகசிக்கப்படுகிறதே தவிர , 
ONK-8006
காதல் , காதலில் புரிதலின்மை  மற்றும் ஈகோ , கார் , பங்களா, அந்தஸ்து,  ஜாதி , வஞ்சகம் , வரதட்சணை, கறுப்பு சிவப்பு சந்தேகம் , அளவுக்கு மீறிய பேராசை , இதை விட அது பெட்டர் என்று தேடும் சலனம் ,
இவற்றால்  வரும் விளைவுகள் … இவை அடங்கிய அல்லது இவற்றால் அடக்கப்படுகிற 
கல்யாணம் என்ற உறவு ஒன்றும் ஒ ரு நாள் கூத்து இல்லை . 
அந்த வகையில் படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை . இதற்கு பதில் சம்மந்தா சம்மந்தமே இல்லாத ஒரு டைட்டிலே வைத்து விட்டுப் போயிருக்கலாம் 
மொத்தத்தில் ஒரு நாள் கூத்து…..
முக்கால்வாசி முத்து … முக்கியமான சமயத்தில் பித்து !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →