என்ன விலை @ விமர்சனம்

கலாமாயா பிலிம்ஸ் சார்பில் ஜிதேஷ் விஸ்வாம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரிக்க, நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், பூர்ணிமா பாக்கியராஜ், ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் சஜீவ் பழூர் எழுதி இயக்கி இருக்கும்  படம்.

ராமேஸ்வரத்தில் புனித நீராட வரும் பக்தர்கள்,  அங்கே பாவம் கழிக்க என்று போட்டு  விட்டுப் போகும் பொருட்கள், உடைகள் , நாணயங்கள் இவற்றையம் எடுத்துப் பிழைக்கும் மீனவர் தவசிமுத்து. (கருணாஸ்) . அவருக்கு  மனைவி பாலம்மா  (விஜயலக்ஷ்மி வீரமணி) மற்றும்  ஒரு தங்கை. 
 
தங்கைக்கும்  ஒரு நபருக்கும் காதல். அந்தக் காதலன் வேறு சாதி என்பது ஒரு பிரச்னை. அது பிடிக்காத சுயசாதி குடிகாரன் ஒருவன் தவசிமுத்துவிடம்  பெண் கேட்க , அதில் ஒரு பிரச்னை. 
 
ஒரு நாள் தவசி முத்துவுக்கு கடலுக்குள் இருந்து உள்ளங்கையளவு பதக்கம் ஒன்று கிடைக்கிறது. . விலை உயர்ந்த ஒரு பொருளாக இருக்கும் என்று  பயந்து அவர் அதை ஒரு போலீஸ்காரரிடம் (மோகன்ராம்)கொடுக்க, அவர் அதில் இருந்து ஒரு கல்லை மட்டுமே எடுத்துகே கொண்டு சாதாரண பித்தளைப்பதக்கம்தான் என்றார்  பதக்கத்தை தவசிமுத்துவிடமே கொடுத்து விடுகிறார். 
 
எடுத்துக் கொண்டு வந்த கல் மட்டுமே  பல லட்சம் மதிப்புள்ளது என்று  போலீஸ்காரருக்கு தெரியவர, 
 
அதற்குள் தவசி முத்துவுக்கும் உண்மை தெரியவர, அவர்  காவல் நிலையம் வர, 
 
தவசி முத்துவை  அடித்து உதைத்து   திருடனாக சித்தரிக்கிறார்கள்.
 
‘சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து வந்து , சில பொருட்களை பறிகொடுத்த நபரின் பதக்கம் இது; திருடியது தவசிமுத்து’ என்று கேஸ் போடுகிறார்கள். 
 
எளிய குடும்பம் உடைந்து நொறுங்க, தவசி முத்துவுக்காக வாதாட வருகிறார் , தவசிமுத்துவிடம் தினம் பூ வாங்கும் அட்வகேட் காஞ்சனா (நிமிஷா சஜயன்) 
 
தவசிமுத்துவை  காப்பாற்ற அவர் போராட, போலீசாரின் திருட்டை மறைக்க அரசு போராட, பீகார்காரரின் பொருள் அது இல்லை என்று பீகார் வரை ஆள் அனுப்பி  காஞ்சனா நிரூபித்தால் ,  கிணறு வெட்ட பூதங்கள் புறப்பட்ட கதையாக தொல்பொருள் சட்டம், , புதையல் சட்டம் என்று பல விஷயங்கள் அடுத்தடுத்து பூதாகரமாக வருகின்றன 
 
நடந்தது என்ன என்பதே படம். 
 
எவரையும் சந்தேகித்து அல்லது பொய்க் குற்றம் சுமத்தி, சட்டத்தால் தண்டிக்க முடிகிறது.
 
தவறே செய்யாதவன் கூட , தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க எல்லா முயற்சிகளையும் , அவன்தான் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.  அந்த போராட்டம் ,  அதனால் ஏற்படும் நிம்மதி இன்மை பண இழப்பு தவிர அவனுக்கு ஏற்படும் இன்னொரு இழப்பும் இருக்கிறது . விலை மதிக்க முடியாத அதற்கு என்ன விலை என்று கேட்கும் அர்த்தமுள்ள கதை திரைக்கதையோடு சிறப்பாக  இயக்கி இருக்கிறார் ராஜீவ் பாழூர். 
 
எளிமையான கடல்புற கிராமம் அல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவில் அருமையாக விரிகிறது. 
 
மிக அற்புதமான பின்னணி இசை கொடுத்து இருக்கிறார் சாம் சி எஸ். 
 
ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பும் நேர்த்தி  
 
மிக ஆழமான சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் கருணாஸ். 
 
அவருக்கு இணையாக நடித்துள்ளார் அவரது மனைவியாக நடித்துள்ளார் விஜயலக்ஷ்மி வீரமணி  
 
மலையாள வாடையோடு தமிழ் கோர்ட்டில் உற்சாகமாக வசனம் பேசி நடித்துள்ளார் நிமிஷா சஜயன். 
 
அந்தப் பதக்கத்தின்  வரலாறு குறித்த கதையும் அருமை  
 
அப்படி ஒரு பதக்கம் கிடைத்தவுடன் அதை தவசிமுத்து, தனது மனைவியிடம் கூட காட்டாமல் ஏன் போலீசிடம் தரவேண்டும்?
 
போலீசின் நோக்கம்   அந்த பதக்கத்தை களவாடுவதுதான் என்றால் தவசிமுத்துவை குற்றவாளியாக்கினால் எப்படி நோக்கம் நிறைவேறும்?
 
இப்படி சில கேள்விகள் வருகின்றன. 
 
ஒன்று அது சாதாரண பதக்கம் என்று  தவசிமுத்துவை நம்பவைத்து வாங்கி கொண்டு அவர்  நினைவில் இருந்தே அதை அகற்றுவது என்று கதை போக, ஒரு நிலையில் அதில் திருப்பம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்  
 
அது முடியாத பட்சத்தில்   தவசி முத்துவிடமும் அதன் விலை மதிப்பை சொல்லி விற்று பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று போலீஸ் சொல்ல , நேர்மை காரணமாக தவசிமுத்து அதை மறுக்க அதனால் கோபமுற்ற போலீஸ் அவரை  திருடனாக்க … 
 
என்று கதை போயிருக்க வேண்டும் . 
 
இப்படி சில கேள்விகள் வந்தாலும்  மனித மதிப்பீடுகள் குறித்த அந்த கடைசிக் காட்சிகள் அருமை 
 
மொத்தத்தில் என்ன விலை .. தரம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *