பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் மற்றும் ஐவி என்டர்டைன்மெண்ட் சார்பில் இஷான் சக்சேனா தயாரிக்க,
கார்த்தி, எஸ் ஜே சூர்யா,மாளவிகா மோகனன் , ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கி இருக்கும் படம்.
இதே தயாரிப்பாளர், ஹீரோ , இயக்குனர் உருவாக்கிய சர்தார் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வந்தது . அது ஒரு வெற்றிப்படம்.
முதல் பாகத்தில் நாட்டுக்காக உழைத்த ‘ரா’ அதிகாரி ‘சர்தார்’ சந்திர போஸ் (கார்த்தி)’தேச விரோதி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பார்.
இதில் அவரது மகனான விஜய் பிரகாஷ் (கார்த்தி), அப்பா உள்ளிட்ட சீனியர் அதிகாரிகள் விட்டு வைத்துப் போன குறிப்புகளில் இருந்து , நாட்டையே அழிக்க எண்ணும் ஒரு மோசமான திட்டத்தை முறியடிக்க செயல்படுவார்.
தனது தந்தை சர்தாரும் , அவரோடு இணைந்து செயல்பட்ட இன்னொரு ரா அதிகாரி சாரா (மாளவிகா மோகனன்) இருவரும் சேர்ந்து மறைத்து வைத்த விஷயத்தை கண்டுபிடிக்க செயல்படுவார் . ஸாராவின் மகளான ஃபைஸா (ஆஷிகா ரங்கநாத்) விடம் உள்ள ஒரு மெக்கனிக்கல் சாவி, மற்ற இரண்டு பேரிடம் இருந்த சாவிகளை இணைத்து, ஒரு லாக்கரை திறந்து பார்க்கும்போது, சாரா பேசி வைத்திருக்கும் ஒரு வீடியோ கிடைக்கிறது. .
சாராவின் பேச்சில் இருந்து ஓர் உண்மை தெரியவருகிறது
டோக்கு என்ற உயிரியல் கிருமி ஆயுதம் மூலம் ஓர் அந்நிய நாடு, தமிழகத்தின் ஒரு கிராமத்தில் நூற்றுக்கணக்கான பேருக்கு ஒரு உயிராபத்து தொற்று நோயை உருவாக்கி இருக்கும் . எனவே அந்த மக்களை அரசு தனிமைப்படுத்தி வைத்திருக்கும்.
அதில் ஒரு பெண்ணுக்கு நோயின் பாதிப்பு தெரிய ஆரம்பிக்க, பாதிப்பு (வெளியே)தெரியாத தனது மகன்களான சிறுவர்களை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து வெளியே அழைத்துப் போகச் சொல்லி, அந்தப் பெண் கதறுவார். ஆனால் அவர்களுக்கு நோய் தொற்று இருப்பதால் அவர்களை வெளியே விட்டால் மற்றவர்களுக்கும் பரவும் என்று சாராவும் சர்தாரும் மறுப்பார்கள்.
அந்தப் பையனிடம் , சீக்கிரம் நோய் தீர்க்கும் கோலிஸ்டன் என்ற மருந்தோடு வந்து எல்லோரையும் காப்பாற்றுவதாக வாக்கு கொடுப்பார் சர்தார்.
அந்த மருந்தை ஜப்பானில் இருந்து அவரும் சாராவும் விமானத்தில் கடத்தி வரும் வேளையில், ஒரு ஜப்பான்காரருக்கு சர்தார் உதவ, அவர் தனது நாட்டுக்காக செயல்பட்டதால் அந்த கோலிஸ்டன் மருந்தில் பாதி வீணாகி விடும் .
மீதிப் பாதியை பணக்காரர்களுக்கு மட்டும் கொடுக்க இந்திய பெண் பிரதமர், முடிவு செய்ய, சர்தார் சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போக , அவன் அம்மா மற்றும் உறவுகள் இறந்து விடுவார்கள்.
சர்தார் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு இவற்றின் மீது கோபம் கொள்ளும் யோகி என்ற அந்த சிறுவன், வளர்ந்து பெரியவனாகி (எஸ் ஜே சூர்யா) ,நோய் பரப்பும் டோக்கு உயிரியல் ஆயுதத்தை இந்திய மக்களிடம் பரப்பி கோடிக்கணக்கானவர்களை கொல்ல முயல,
அவனை வீழ்த்த சர்தார், அவரது மகன் விஜய், சாராவின் மகள் ஃபைஸா ஆகியோர் போராட நடந்தது என்ன என்பதே சர்தார் 2
தயாரிப்புத் தரம் அருமையாக இருக்கிறது.
மேக்கிங்கில் அசத்துகிறார் இயக்குனர் பி எஸ் மித்ரன். நோயால் பாதிக்கப்பட்ட பெண் தனது மகனை காப்பாற்ற கெஞ்சும் காட்சி மித்ரனின் அழுத்தமான இயக்கத்துக்கு உதாரணம் என்றால், கோலிஸ்டனை ஜப்பானில் இருந்து கொண்டு வரும்போது வானில் நடக்கும் சண்டை அவரது அட்டகாசமான ஆக்ஷன் மேக்கிங்குக்கு உதாரணம்
மனித உடம்பில் மாத்திரைகள் மூலம் ஏறும் கெமிக்கல்கள் குறித்த விழிப்புணர்வுக்கு காட்சிகள் அருமை
சர்தார், அவரது மகன் விஜய் என்ற இரட்டை வேடத்தில் கார்த்திக் கச்சிதம்.
சாராவாக வரும் மாளவிகா மோகனன் பிரம்மாதாக ஸ்கோர் செய்கிறார்
தீவிர வில்லன் கதாப்பாத்திரத்தை தனது டிரேட் மார்க் நடிப்பால் நிரப்புகிறார் எஸ் ஜே சூர்யா.
அட்டகாசமான பின்னணி இசையால் படத்தை தூக்கி நிறுத்த பெரும் போராட்டம் நடத்துகிறார் சாம் சி எஸ்.
ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் படத்துக்கு பிளஸ்.
மேக்கிங் நன்றாக இருக்கிறது.நல்ல விஷயங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் ஆடியன்ஸுக்கு புரியுமா இல்லையா என்பது பற்றிய அக்கறை இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன.
ஒரே மாதிரியாக மீண்டும் மீண்டும் வரும் காட்சிகள்,நீளமான நீளமான சண்டைகள் , ஈர்க்கும்படி சொல்லாமல் சும்மா விளக்கினால் போதும் என்ற அளவில் போகும் காட்சிகள், அதீத நீளம் , எந்த பாதிப்பும் இல்லாமல் வந்து போகும் பல கேரக்டர்கள், மெயின் கதைக்கு எந்தப் பயனும் இல்லாத– அந்த கேரக்டர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் …… இவை எல்லாம் படத்தை பின்னுக்கு இழுக்கின்றன.
திடீரென்று படத்துக்குள் பாலாஜி சக்திவேல், ரஜிஷா விஜயன், சின்னி ஜெயந்த் ஆகியோரின் அதே உருவத் தோற்றத்தில் சில பேர் வந்து போகின்றனர். அதுவும் பாலாஜி சக்திவேல்,ரஜிஷா விஜயன் தோற்றத்தில் இருப்பவர்கள் அவர்களை போலவே சில வார்த்தைகள் பேசவும் செய்கிறார்கள். ஆனால் அது அவர்கள்தானா என்று உறுதியாக தெரியவில்லை. மேற்படி நபர்களிடம் தீவிர விசாரணை செய்தால்தான் தெரியவரும் .