சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கலவரத்தில் ஒரு மாணவனை உயர் நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே போட்டு உயிராபத்து வரை பலர் அடித்துத் துவைக்க அதை போலீஸ் வேடிக்கை பார்த்த சம்பவம் ஞாபகம் இருக்கா? அதை மனதில் வைத்துக் கொண்டு , ‘அந்த மாணவன் மரணம் அடைந்தான் ; அப்படி அடித்துக் கொலை செய்வதற்கு காரணமே போலீஸ்தான்’ என்றிருந்தால் எப்படி இருக்கும் ? அதுதான் படத்தின் முதல் பொறி .
ஒரு இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொல்ல திட்டமிட்டு கூலிப் படை காத்திருக்க, சம்மந்தப்பட்ட நபர் யாரென்று சரியாகத் தெரியாததால் அந்தப் பக்கம் வந்தே வேறொரு இன்ஸ்பெக்டரை அந்த கூலிப் படையினர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நினைவுக்கு வருதா ? அது படத்தின் இரண்டாவது பொறி.
கதை ?
சிதம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மாற்றலாகி போகும் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்க வேலின் (பானு சந்தர்) மகனான நடேசன் என்கிற நட்டிக்கு (சத்யா), அங்கு லோக்கல் டி வி சேனலான வசந்தம் டி வி யின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளரான சாரா (ஸ்ரீ முகி) மீது காதல் வருகிறது.
சிறுவயதில் சிதம்பரத்தில் பள்ளித் தோழனாக இருந்து இறந்து போன நண்பன் பிரபாவின் (லகுபரன்) அண்ணனான தமிழ் (இயக்குனர் தங்க சாமி) திருநெல்வேலியில் இருப்பதை அறிந்த நடேசன் மிக்க மகிழ்ச்சி அடைகிறான் . தன் அப்பா அம்மாவிடமும் அதை அவன் சொல்ல, அவர்களை தமிழ் சந்திக்க , பிரபா இறந்த கொடுமை கனமாக மீண்டும் உணரப்படுகிறது.
இந்நிலையில் ஒரு ரகிசய மர்ம கும்பலால் நடேசனின் தந்தையான பொன் மாணிக்கவேல் அநியாயமாகக் கொல்லப்பட. அவரை கொன்றது யார் என்பதில் ஒரு அதிரடி திருப்பம். தந்தையின் மரணத்தை அடுத்து நடேசனுக்கு காவல் துறையில் வேலை கிடைக்கிறது . அவன் தன் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களைப் பழிவாங்கத் தேடுகிறான். அடுத்து பிரபா கொல்லப்படும் விதமும் காட்சிகளாக விரிகிறது .
நண்பன் பிரபாவையும் தந்தையையும் கொன்றவனை நடேசன் பழி வாங்குகிறானா? இல்லையா ?
இல்லை எனில் என்ன நடந்தது ?
ஆம் எனில் அதற்குள் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதே இந்த எட்டுத் திக்கும் மதயானை .
படம் முழுக்க வரும் சத்யாவை விட, சில சீன்களே வரும் லகுபரன் சிறப்பாக செய்து இருக்கிறார் . இயக்குனர் தங்க சாமி இறுக்கமான கேரக்டரில் பொருந்துகிறார் .
கதாநாயகி ஸ்ரீமுகி லாங் ஷாட்களிலும் மிட் லாங் ஷாட்களிலும் மிக அழகாக இருக்கிறார் .
மொத்த படத்தையும் இன்னும் விறுவிறுப்பாக வேகமாக அழுத்தமாக சொல்லிஇருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
எட்டுத்திக்கும் மதயானை … எளிய பவனி !