ஜி ஸ்குவாட் சார்பில் லோகேஷ் கனகராஜ் வழங்க, ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜயகுமார் , மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் சசி எழுத அப்பாஸ் அஹமத் இயக்கி இருக்கும் படம்.
வடசென்னை மீனவர்புரம் .
அரசியல், இயல்பான மற்றும் சட்ட விரோத தொழில் ரீதியாக இரண்டு குழுக்கள்.
அங்கு உள்ள ஒரு சிறுவன் செல்வாவுக்கு கால்பந்தாட்ட வீரனாக ஆசை. குடிகார அப்பா மறுக்க, இரண்டு குழுக்களில் ஒரு குழுவின் முக்கிய நபரான பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) அவனுக்கு உதவ முன்வர , அவன் மீதி சிறுவனுக்கு நேசம் .

இந்த நிலையில் எதிர் குழுவைச் சேர்ந்த கிருபா ( சங்கர் தாஸ்) , ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்) ஆகியோரால் பெஞ்சமின் கொல்லப்படுகிறான் . கிருபா ஆலோசனைப்படி ஜோசப் மட்டும் ஜெயிலுக்குப் போக, அவனை அப்படியே கை விடுகிறான் கிருபா .
செல்வா வளர்ந்து இளைஞன் ( உறியடி விஜயகுமார் ) ஆகிறான் .
ஜெயிலில் இருந்து வரும் ஜோசப் தனக்கு துரோகம் செய்த கிருபாவைப் பழிவாங்க ஆள் தேடுகிறான் .
பெஞ்சமினைக் கொன்ற நபர் யார் என்று தெரிந்தால் பழிவாங்க செல்வா ஆசைப்படுகிறான்.
செல்வாவை வளைக்கும் ஜோசப் , பெஞ்சமினைக் கொன்றது கிருபா(மட்டும்)தான் என்று நம்ப வைக்க, செல்வா கிருபா மற்றும் அவன் கும்பல் மேல் ரவுத்திரமாக , விஷயம் கிருபாவுக்கு தெரிய வர , இதில் கட்சி அரசியலும் கலக்க அப்புறம் என்ன நடந்தது என்பதே படம்.

அட்டகாசமான படமாக்கல் !
கதை நடக்கும் களம், பின் புலம், சூழல் , அதன் இயல்பு, நகர்வு என்று அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் ரஹமத்.
லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவும் வண்ணக் குழைவும் இருள் ஒளிப் பயன்பாடும் தரம்.
ஏகப்பட்ட கேரக்டர்கள், சிறு சிறு சிறு சம்பவங்களை கோர்ப்பதில் முட்டி மோதி கரையேறுகிறது கிருபாகரனின் படத் தொகுப்பு.
சிம்பனி இசை , இளையராஜாவின் பாடல் மேட்டுக்கு புதிய இசைக் கோர்ப்பு இவற்றை பின்புலமாக பயன்படுத்துவதே போதும் என்று கோவிந்த் வசந்தா முடிவு செய்து விட்டார் . எனினும் படத்துக்கு அது பிளஸ்தான்.

ஒரு அட்டகாசமான ஹீரோவாக ஜொலிக்கிறார் விஜயகுமார் . (1999 ஆம் ஆண்டு டேவிட் ஃபின்ச்செர்ர் இயக்கத்தில் வந்த அமெரிக்கப் படமான ஃபைட் கிளப் படத்தின் நாயகன் ப்ராட் பிட் போலவே உடலைக் கொண்டு வந்து அசத்தி இருக்கிறார். தோற்றம் , குரல் நடிப்பு யாவும் அருமை.
பெரிசு முதல் சிறுசு வரை எல்லா கேரக்டர்களிலும் நடித்த அனைவரும் அட்டகாசமாக சிறப்பாக நடித்துள்ளனர், சற்றும் ஒட்டாத நாயகி மோனிஷா மோகன் மேனனைத் தவிர . ஆரம்பக் காட்சிகளில் எதற்கு அவ்வளவு மேக்கப் மேனன் ? எனினும் படத்தின் ஒரு சில காமெடி சீன்களில் அவரின் பங்கும் இருக்கின்றன .
நடிகர்களின் நல்ல நடிப்புக்கான அவிற்பாகம் இயக்குனருக்கு போய்ச் சேரட்டும் . அதுவும் ஜோசப் ஆக வரும் அவினாஷ் ரகுதேவன் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்

இப்படி எல்லாம் சம்பவம் செய்தவர்கள் எழுத்தில்தான் ஏகத்துக்கும் கோட்டை விட்டு விட்டார்கள். கதை என்று ஒருவரிடம் வாங்கி எடுக்கும் அளவுக்கு இதில் என்ன கதை இருக்கு ? பல படங்களில் பார்த்து சலித்த விசயம்தானே என்ற கேள்வியே எழுகிறது.
அதேபோல திரைக்கதையிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இது யார் கதை ? யாரை பின்பற்றி எல்லாம் கேரக்டர்களையும் ஒரு ரசிகன் டீல் செய்வது என்ற கேள்வியும் வருகிறது.
எல்லோரும் அறிந்த பல படங்கள் அவ்வப்போது அடுத்தடுத்து நினைவுக்கு வரும் அளவுக்கான காட்சிகள்.. ஒரு நிலையில் கொஞ்சம் இழுப்பதற்காக சொருகப்படும் நத்திங்நெஸ் காட்சிகள்… பேருந்திலும் , விஜயகுமார் நடந்து வரும் இடத்திலும் முன்பே போட்ட அதே ஷாட்டின் மிச்சத்தை வேறு கால கட்டத்துக்கு ரிப்பீட் செய்வது என்று பல அச்சச்சோ மொமன்ட்கள்.

தவிர போதுமான நிறுவல்கள் இல்லாத காரணத்தால் வெகுஜன ரசிகனுக்கு படம் புரிவதில் சிரமம் இருக்கும் .
வட சென்னை என்றாலே அடிதடி, சண்டை, கொலை, ரத்தம், சதைச் சிதறல் போதைப் பொருள், பள்ளிப் பிள்ளைகளின் பாடப் புத்தகப் பையில் கஞ்சா பொட்டலங்கள் என்ற பார்வைக்கு இந்தப் படமும் பலம் சேர்ப்பது வருத்தமே
கடைசி காட்சிகளில் ரத்த சேதாரம்.. ஏராளம்… தாராளம்.
இப்படி எல்லாம் இருந்தாலும்…. லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்.