சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு தயாரிக்க, விஜயபாஸ்கர், டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம் , வெற்றி நடிப்பில் விஜயபாஸ்கர் நாயகியாக (!) நடித்து – ஆமாம் நாயகிதான் – எழுதி இயக்கி இருக்கும் படம் ஃபில்டர் கோல்டு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக – உழைக்கும் வர்க்கத்துக்காகக் குரல் கொடுக்கும்- புரட்சி செய்யும் ஒரு நபர் அதற்காக வாள் எடுத்து போராடுவது போல,
அவமானத்துக்கு ஆளாக்கப்படும் பாலினமான திருநங்கையருக்காக அதே பாலினத்தைச் சேர்ந்த வீர தீர கம்பீர குணம் கொண்ட ஒருவர் போராடினால் எப்படி இருக்கும் ? அதுதான் ஃபில்டர் கோல்டு . .
மேலோங்கிய ஆண் தன்மை, தைரியம், வீரம் கொண்ட திருநங்கை விஜி (விஜயபாஸ்கர்). அவரோடு நெருங்கி பழகி ஒன்றாக இருக்கும் மற்ற இரு திருநங்கையர் டோரா ( திருநங்கை டோரா ஸ்ரீ ) மற்றும் சாந்தி (சுகுமார் சண்முகம்).
பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காமல் போனவர்களுக்காக(வும்?) கட்டை பஞ்சாயத்து செய்யும் ஆசாரி என்ற நபரின் அடியாட்களாக ,
பெண்களையும் அப்பாவிகளை பாதிக்கும் நபர்களை எல்லாம் வெட்டிக் கொல்லும் விஜி , டோரா, சாந்தி ஆகியோரோடு சேர்ந்து பல சேவைகளும் செய்கிறார் .
இன்னொரு பக்கம் சாந்திக்கு பாலியல் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தையும் வைத்து மது , சிகரெட் என்று ஜாலியாக வாழ்கிறார்கள் .
ஆசாரியின் மகனுக்கும் திருநங்கை டோராவுக்கும் ஏற்படும் காதல் ஆசாரிக்கு பிடிக்காமல் போக, தொழில் பிணைப்பு உடைகிறது .
வழக்கமாக போலீஸ் , மிருக வெறி பிடித்த காமுகர்கள் இவர்களால் திருநங்கையருக்கு ஏற்படும் பாதிப்புகள் போக,
சாந்திக்கு ஏற்படும் ஒரு பெரும் சம்பவத்தால் கவுன்சிலர் ஒருவரையும் அவரது மகனான கொடூர குணம் கொண்ட பள்ளி மாணவன் ஒருவனையும் விஜி அண்ட் கோ பகைத்துக் கொள்ள நேரிடுகிறது .
அதன் விளைவு என்ன ஆனது என்பதே இந்த ஃபில்டர் கோல்டு .
“ஃபில்டர்டு கோல்டு (filtered gold ..) அதாவது வடிகட்டப்பட்ட தங்கம் , அதாவது கசடுகள் இல்லாத சொக்கத் தங்கம் இந்த திருநங்கையர் அதனால் படத்துக்கு இந்தப் பெயர் “என்று, படத்துக்குப் பெயர்க் காரணம் சொல்கிறார் இயக்குனர். ம்ம்ம்ம்….
அழுத்தமான சற்றே கலங்கிய நீல நிறத்தில் கடலும் வானமும் இணையும் பின்புலத்தில் டைட்டில் போடும்போதே, இந்தப் படத்தில் ஏதோ இருக்கு என்ற உணர்வை ஏற்படுத்துகிறார் இயக்குனர் .
பொதுவாக திருநங்கைகள் என்றால் பணிந்து போவர்கள், சாபம் இடுவார்கள் , அழுவார்கள் அல்லது திருடுவார்கள், ஏமாற்றுவார்கள் என்ற ரீதியிலேயே சினிமாவில் காட்டப்பட்ட நிலையில்,
ஆக்ஷன் ஹீரோ கணக்காக இறங்கி அடிக்கும் விஜி கதாபாத்திரம் சட்டென்று மனசுக்கு நெருக்கமாகிப் பிடித்துப் போகிறது . விஜியாக நடித்து இருக்கும் இயக்குனர் விஜயபாஸ்கர் மிக மிக ஹீரோயிசம்…. அல்ல அல்ல ஹீரோயினிசமாக – சிறப்பாக நடித்து,
விஜியை , விஜயகாந்த் ரேஞ்சுக்கு கொண்டு போகிறார் .
இதுவரை சொல்லப்படாத கதைக்களம், சொல்லப்படாத திரைக்கதை , அற்புதமான படமாக்கல் , ஈர்க்கும் லொக்கேஷன்கள் …
பல திருநங்கைகளை ஒன்றிணைத்து நடிக்க வைத்தது , தன்னோடு சேர்த்து மேலும் ஆண்கள் சிலரை திருங்கையாக நடிக்க வைத்தது என்று…
ஓர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனராக ஜொலிக்கிறார் விஜயபாஸ்கர் . (வசனத்தில் மட்டும் போதாமை தெரிகிறது )
பெண்களாக மாறத் துவங்கும் ஆண்களுக்கு கோவிலில் செய்யப்படும் சடங்கை இவ்வளவு யதார்த்தமாக இதுவரை யாரும் காட்டியதில்லை . அதிரடி காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார் இயக்குனர் .
ஆசாரி, அவர் மகன் பாத்திரப் படைப்பு தோற்றம் , அவர்களுக்கான உடை எல்லாம் சிறப்பு.
சுண்டைக்காய் என்று நாம் நினைக்கும் சில பள்ளி மாணவர்களின் கோர குணத்தை ஒரு கதாபாத்திரம் மூலம் விதிர்விதிர்க்கும்படி காட்டி இருக்கிறார்கள்.
ஆசாரியின் முடிவை சொல்லும் ஷாட் கம்போசிங் மேட்டிமைத்தனமானது பாராட்டுகள் விஜயபாஸ்கர் .
தனக்குப் பிடித்த ஆணை நிஜமாக உண்மையாக ஆழமாக காதலிக்கும் திருநங்கை டோரா பாத்திரத்தில் திருநங்கை டோரா ஸ்ரீ மிக சிறப்பாக நடித்திருக்கிறார் . அவரது சில முகபாவனைகள் ரம்மியம் .
போலீசிடம் சிக்கி அல்லல்படுகிற – தன் தம்பியும் பெண்ணாக மாறத் துவங்கி விட்ட நிலையில் அவனையும் காப்பாற்ற பணத்துக்குப் போராடுகிற- பாசமுள்ள திருநங்கை சாந்தி கதாபாத்திரத்தில் சுகுமார் சண்முகம் நெகிழும்படி நடித்துள்ளார் .
கொடூர மாணவனாக நடித்து இருக்கும் வெற்றி மிரட்டுகிறார் . எல்லோரிடமும் இப்படி சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் .
அட்டகாசமான ட்ரோன் ஷாட்டுகள் உட்பட காட்சிக்கு பொருத்தமான ஒளிப்பதிவில் சிறக்கிறார் பரணிகுமார் .
சுப முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு நெகிழ வைக்கும் இசை தருவதோடு பின்னணி இசையிலும் பரபரப்பு, படபடப்பு சேர்க்கிறார் குமார் எழிலன் .
படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு போகிறது கிங் டேவிட்டின் படத் தொகுப்பு
முக்கியக் கதாபாத்திரங்களான மூன்று திரு நங்கையரின் வாழிடங்களை காட்டிய விதத்தில் கலை இயக்கமும் அருமை .
கிளைமாக்சில் இன்னும் கொஞ்சம் திரைக்கதை வசனத்தில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்
விஜியிடம் டிவி நிருபர் கேட்கும் அருமையான கேள்விக்கு விஜி சொல்லும் பதில் போங்கு ஆட்டம் . அதுவரை பாதிக்கப்படும் பெண்கள் சிறுமிகளுக்காகக் கூட சமூக அக்கறையோடு வாள் எடுத்தவர் அப்படியா சுய நல பதில் சொல்வார் ?
“நீங்கள் சொல்கிற சில திருநங்கைகள் முன்னேறி விட்டால் மொத்த சமூகமும் முன்னேறியதாக அர்த்தமா? எந்த விதத்தில் எங்களில் பெரும்பாலோரின் நிலைமை மாறி இருக்கிறது ?” என்றோ ,
“ஒரு நல்லவர் என்னால் பாதிக்கப்பட்டு இருந்தால் சொல்லுங்கள் ” என்றோ அல்லவா விஜி சொல்லி இருக்க வேண்டும் ?
யதார்த்தமாக காட்சிகளை அமைக்கிறேன் என்ற பெயரில், மியூட் செய்தால் கூட முகம் சுளிக்க வைக்கும் கெட்ட வார்த்தைகள் , கோரமாகக் காட்டப்படும் கொலைகள் இவற்றை —
படத்தில் ஒரு காட்சியைக் கூட நீக்காமல் – இலைமறைவு காயாக காட்டிச் சொல்லி,
இதை யூ சான்றிதழ்படமாகக் கொண்டு வந்திருக்க வேண்டும் . அது சர்வைவல் பிக்சர்ஸ் இன்னும் சர்வைவல் ஆவதற்கு உதவி இருக்கும் . ஏனெனில் இது வெகுஜன சமூகத்தை எல்லா வகையிலும் போய்ச் சேர வேண்டிய படம். அப்படி இல்லாத காரணத்தால் இந்தப் படம் இப்போது தனது எல்லைகளை தானே குறுக்கிக் கொண்டு விட்டது .
அதே போல இந்த அட்டகாசமான கதை திரைக்கு பொருத்தமாக படத்துக்கு ஈர்ப்பான ஒரு பெயரையும் வைத்து இருக்க வேண்டும்
இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும் சொன்ன கதை சொன்ன விதம், இரண்டிலும் ஜொலிக்கிறது ஃபில்டர் கோல்டு.
வாழ்த்துகள் விஜய பாஸ்கர் மற்றும் குழுவுக்கு !

