கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஆர் ராஜேஷ் தயாரிக்க, பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, நடிக்க ,
இதற்கு முன்பு கத சொல்லப் போறோம் என்ற அற்புதமான படத்தை இயக்கிய கல்யாண் இரண்டாவதாக எழுதி இயக்கி இருக்கும் படம் குலேபகாவலி .
மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தின் தலைப்பு இது . அந்த குலேபகாவலி சாதனை சரித்திரம் . இந்த குலேபகாவலி அறிவாளியா ? இல்லை பிக்காலியா ? பார்க்கலாம் .
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 1945 ஆம் ஆண்டு ஒரு வெள்ளைக்காரன் இந்தியாவில் இருந்து ஒரு பெரும் வைரக் குவியலை கவர்ந்து கொண்டு இங்கிலாந்து கிளம்ப , அவரது உதவியாளர் ஒருவர் அந்தப் பெட்டியை தனக்கென ஒதுக்கி விடுகிறார் .
அவர் அதை குலேபகாவலி கோவில் என்ற கிராமத்துக் கோவில் மதில் சுவர் அருகில் புதைத்து, ஒரு வேல் சொருகி அதை சின்னக் கோவில் ஆக்கி விடுகிறார் .
அவரது பேரன் (மது சூதன ராவ்) இப்போது அதை எடுக்க முயல்கிறார் . அவருக்கு நண்பர் ஒருவர் ( ஆனந்த் ராஜ்) உதவுகிறார் . ஒரு இன்ஸ்பெக்டரும் (சத்யன்) அவர்கள் அணி .
சிலை திருட்டுக் கும்பல் ஒன்றின் தலைவன் (மன்சூர் அலிகான்) மற்றும் முக்கிய தளபதி ( பிரபுதேவா) , ஒரு கார் திருடி (நடிகை ரேவதி) ஆகியோர் தங்களுக்குள் ‘சவால்’ காட்டிக் கொண்டு இருந்த நிலையில் ஒருவரோடு ஒருவர் மோதி , திறமை காட்ட..
ஒரு நிலையில் எப்படியாவது வைரப் புதையலை எடுக்க எல்லோரும் முயல்கிறார்கள் . ஒரு கிராமத்து தாதாவும் (மொட்டை ராஜேந்திரன்) உண்டு
கிராமத்து தெய்வ நம்பிக்கைகள் நிறைந்த ஊர் அது .
வைரம் எடுக்கப் பட்டதா ? பெட்டியில் வைரம்தான் இருந்ததா ? யாருக்கு வைரம் போனது என்பதே இந்தப் படம் .
ஆரம்பத்தில் வரும் பிரிட்டிஷ் இந்தியா காட்சி அசத்தல் .
பிறகு நிகழ் காலத்துக்கு வந்து இயல்பாக பயணிக்கிறது . ஆங்காங்கே காமெடி இருக்கிறது . ஒவ்வொரு சின்ன கேரக்டருக்கும் இறுதியில் டைரக்டர் கல்யாண் கொடுக்கும் பினிஷிங் டச் சிறப்பு .
ரேவதி அறிமுகக் காட்சி அபாரம் . எதிர்பாராத திருப்பம் .
பிரபு தேவா மேலும் பல புதிய நடன அசைவுகளுடன் அதே வேகத்தில் ஆடி அசத்துகிறார் . ஹன்சிகா , கவர்ச்சி பொம்மை .
கார் திருடி கேரக்டரில் அசத்தலாக நடிக்கிறார் ரேவதி .
ராஜேந்திரன் சிரிக்க வைக்கிறார் . மன்சூரும் ஒகே .
எல்லோரிடமும் ஏமாந்த சபதம் போட்டுக் கொண்டே இருக்கும் சத்யன் புன்னகைக்க வைக்கிறார்
கதிரின் கலை இயக்கம் அட்டகாசம் . குறிப்பாக பாடல் காட்சிகளின் பின்னணியில் கண்கவர் கலை இயக்கம் .
ஆர் எஸ் ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . சேசிங் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்
விவேக் மற்றும் மெர்வின் இருவரின் இசையும் துள்ளல் மூட் தருகிறது .
இன்னும் சிறப்பான கதை , திரைக்கதை இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும் .
எனினும் ஜஸ்ட் லைக் தட் இயல்பாக பயணிக்கும் வகையில் கலர்ஃபுல் கலாட்டாவாக கவனம் கவர்கிறது இந்த குலேபகாவலி .