கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம் தயாரிப்பில் விக்ரம் , தமன்னா , சூரி , ஆர் கே சுரேஷ் , அருள்தாஸ் , நடிப்பில் சந்தர் vijaya சந்தர்இ யக்கி இருக்கும் படம் ஸ்கெட்ச். ரசனையின் ஸ்கெட்ச் என்ன ? பார்க்கலாம் .
வட சென்னையில் கார் வியாபாரம் மற்றும் தவணை கட்டாத கார்களை தூக்கி வரும் சேட்டு (மலையாள நடிகர் ஹரீஷ்) . அவனது முக்கிய கையாள் துரை ( அருள்தாஸ்) அடுத்த கையாள் ரவி ( ஆர் கே சுரேஷ்) . துரையின் சகோதரி மகன் ஸ்கெட்ச் (விக்ரம்).
தொழில் எதிரி ஒருவன் துரையின் கையை வெட்டி விட , துரையின் இடத்துக்கு ஆசைப் படுகிறான் ரவி . ஆனால் அந்த இடத்தை ஸ்கெட்ச்சுக்கு தருகிறான் துரை .
எனவே ரவி வேறு அணிக்குப் போகிறான் .
ஸ்கெட்ச்சின் நண்பர்கள் மாரி (சூரி) , பாஸ்கர் (ஸ்ரீமன்) குணா ( விஸ்வநாத்)
பிரபல தாதா குமாரும் ( பாபு ராஜா) தொகுதி எம் எல் ஏவும் (தேனப்பன்) தொழில் நண்பர்கள் .
ஸ்கெட்ச்சுக்கும் அய்யர் ஆத்துப் பெண் அம்முவுக்கும் (காதல்) . அம்முவின் தோழி பிரியா (பிரியங்கா) . அம்முவுக்கு ஸ்கெட்ச் மீது தீவிர காதல் . அவளை திருமணம் செய்து கொண்டு வாழ ஸ்கெட்ச் விரும்புகிறான் .ஆனால் அவளது பெற்றோர் மறுக்கின்றனர்
அதே நேரம் ரவிக்கும் ஸ்கெட்ச்சுக்கும் பகை வளர்கிறது .
தாதாவின் கடத்த பொருள் ஒன்றை , சேட்டுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் வகையில், ஸ்கெட்ச் போலீசிடம் ஒப்படைக்க , தாதா ஸ்கெட்ச்சுக்கு குறி வைக்கிறான் .
ஸ்கெட்ச்சின் நண்பர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப் பட , திட்டமிட்டு தாதாவை கொல்கிறான் ஸ்கெட்ச் .
இனி பிரச்னை இல்லை காதலித்த அம்முவோடு எங்காவது போய் வாழலாம் என்று ஸ்கெட்ச் நினைக்கும் போது எதிர்பாராத கதையைச் சொல்லி அசத்துகிறார் இயக்குனர் விஜய் சந்தர் .
அந்த எதிர்பாராத கதை .. அது சொல்லும் சமூக அக்கறை விஷயம்… அதுதான் படத்தின் பலம் . கதை வசன இயக்கத்தில் விஜய் சந்தர் முத்திரை பதிக்கும் அற்புத இடமும் அதுதான் .
தாதா , கடத்தல், அதில் சம்மந்தப்பட்ட ஹீரோ, அவனுக்கு நண்பர்கள் , அவனது காதல் என்று படம் போனாலும் விவரணையாக அழுத்தமாக சொல்லும் வகையிலும் விஜய் சந்தர் கவனம் கவர்கிறார்.
ஸ்கெட்ச் கேரக்டரை மிக அழகாக எதிர் கொள்கிறார் விக்ரம் . அவர் நடிப்பால் அந்த கேரக்டரே அவ்வளவு ஸ்பெஷலாக இருக்கிறது .
தமன்னா அழகாக ஜொலிப்பது மட்டுமல்லாது சில வித்தியாசமான முக பாவனைகளும் காட்டி கவர்கிறார் . பிரியங்கா சில காட்சிகளே எனினும் அழகாக செய்கிறார் . குறிப்பாக ஸ்கெட்ச் தன்னை தங்கச்சி என்று அழைக்கும் இடம் !
அருள்தாஸ், ஆர் கே சுரேஷ் , , பாபு ராஜா , உட்பட பலரும் கேரக்டருக்கு பொருத்தமாக நடித்துள்ளனர் . சிறப்பு .
சுகுமாரின் ஒளிப்பதிவு ஏரியல் ஷாட்கள் உட்பட எல்லா வகையிலும் அசத்துகின்றன .
எஸ் எஸ் தமன் இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசை பரவாயில்லை .
ரூபனின் படத் தொகுப்பு இவ்வளவு கதாபாத்திரங்களையும் கொண்ட திரைக் கதையை தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது .
ஸ்கெட்ச்சின் நண்பர்கள் ஒவ்வொருவராக சாகும் நிலையில் தாதாவும் எம் எல் ஏவும் சந்தித்துப் பேசிக் கொள்வதாக காட்டுவது போங்கு ஆட்டம் ஆடும் திரைக்கதை .
தாதா ஸ்கெட்ச் மற்றும் நண்பர்களுக்கு குறி வைத்தான் …. . ஒவ்வொருவராக சாகிறார்கள்… . ஸ்கெட்ச் தாதாவை கொல்கிறான் என்று சொல்லி தாதாவை வெளியே வைத்து,
இந்தக் கதைக்கு வருவதுதான் சரியான திரைக்கதையாக இருக்க முடியும் . தாதாவும் எம் எல் ஏவும் சந்தித்துப் பேசிக் கொள்வதாக காட்டும் அந்தக் காட்சி வரக் கூடாது .எனினும் , குழந்தைத் தொழிலாளர் நிலை தடுக்கப் படவேண்டும் என்பது தாதாக்கள் உலகத்துக்கும் பொருந்தும் . ஏனென்றால் மற்ற இடங்களை விட இங்கே விளைவுகள் அதிகம் என்று குத்திக்வ குத்திச் சொல்லும் வகையில் ஜொலிக்கிறது படம் .
அதற்கு விஜய் சந்தர் முன் வைக்கும் விளக்கம் , விவரணை , செய்தி உதாரணங்கள் அருமை .
எனவே ஸ்கெட்ச் .. (B)போல்டு அண்ட் (B)பிரைட் !