குட் நைட் @ விமர்சனம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்  மற்றும் எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் சார்பில் யுவராஜ் கணேசன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் நாசரேத் பசிலியன் ஆகியோர் தயாரிக்க, மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் , ரேச்சல் ரெபக்கா , பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் எழுதி இயக்கி இருக்கும் படம் குட் நைட் . 

அப்பா குடித்தே செத்துப் போக, அம்மா,  அக்கா ( ரேச்சல்) , அக்காவின் காதல் கணவர் ( ரமேஷ் திலக்) , ஒரு தங்கை ஆகியோருடன் வாழும் ஒரு ஐ டி கம்பெனி ஊழிய இளைஞனுக்கு ( மணிகண்டன்) அவன் எப்போதும் தூங்கும் போது விடும் அதீத குறட்டை பெரிய பிரச்னை . அதனாலேயே வீடு, அலுவலகம் எல்லா இடத்திலும் அவமானம் . கம்பெனியில் அவன் காதலிக்கும் பெண்ணும் காரில் பயணிக்கும்போது அவன் விட்ட குறட்டையை வைத்தே அவனை பிரேக்கப் செய்து விட்டுப் போக, நொந்து போகிறான் . 
 
நீர் சுத்திகரிப்பான் நிறுவனத்தில் பணியாற்றும் மாமாவுக்கு துணையாக,  ஒரு வயதான கணவன் ( பாலாஜி சக்திவேல்) – மனைவி வாழும் வீட்டுக்கு– தொழில்,நிமித்தம்அவன்  போக , அங்கே அந்த தம்பதி ஆதரவில் வாழும் – சிறுவயது முதலே பெற்றோர் மற்றும் உற்றார் இறப்பால் தன்னை துரதிர்ஷ்டசாலி என்று நம்பிக் கொண்டு தனக்குள் குறுகிக் குறுங்கி வாழும் –  ஆடிட்டிங்  நிறுவனத்தில் பணியாற்றும் – இளம்பெண் ஒருத்தி ( மீதா ரகுநாத்) மீது அவனுக்கு காதல்  வருகிறது. 
சில பல தடைகள் மற்றும் உதவிகளோடு அந்தக் காதலானது  கல்யாணம் வரை போக, அவனது குறட்டை மிகப் பெரிய பிரச்னையாகிறது. குறட்டை காரணமாக மனைவியால்  தூங்கவே முடியாமல் போக, அவளது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அதற்கு  தான்தான் காரணம் என்று என்னும் அவன் தனி அறையில் படுக்கிறான் . குறட்டையை நிறுத்த எடுக்கும் எந்த முயற்சியிலும் பலன் இல்லை . 
 
இந்நிலையில் கல்யாணம் ஆகிப் பல வருடங்கள் குழந்தை இல்லாமல்,  புகுந்த வீட்டாரிடம் பல அவமானங்களை சந்திக்கும் நாயகனின் அக்கா (ரேச்சல்) கர்ப்பிணியாக ,  நாயகனின் ஒரு போன் காரணமாக அந்த கர்ப்பிணி அக்கா விபத்துக்கு ஆளாகி குழந்தை வயிற்றிலே இறக்க, நாயகியின் கூச்சமும் பதட்டமுமான செயல்களால் அபசகுனமாக நடந்த சம்பவங்களே காரணம் என்று நாயகனின் அம்மா தூற்ற , தம்பதிகளுக்குள் விரிசல் பெரிதாகிறது. 
 
கடைசியில் நடந்தது என்ன ? குறட்டை பிரச்னை தீர்க்கப்பட்டதா என்பதே படம் . 
வித்தியாசமான கதை . அதை உறவுகளுக்கு இடையிலான  பாசம் , நெருக்கம் , உரிமை, கோபம், ஈகோ , அன்பு, நெகிழ்வு இவைகளை தூக்கிப் பிடிக்கும் திரைக்கதையோடு சொல்லி இயல்பான வசனங்கள் எழுதி யதார்த்தமான படமாக்கலோடு சிறப்பாக இயக்கி  பாராட்டுப் பெறுகிறார்  விநாயக் சந்திரசேகரன். கதாபாத்திரங்களின் பிரச்னைகள் சீரியசாக இருந்தாலும் பார்வையாளனுக்கு அதை நகைச்சுவையாக கொண்டு சேர்க்கும் உத்தியும் பலே. அதுவும் ஒரு  நாயை வைத்து விளையாடி இருக்கும் விதம் எல்லாம் கல கல. 
 
மணிகண்டன் அற்புதமாக நடித்து இருக்கிறார் . முக பாவனை, உடல் மொழிகள் , குரல் நடிப்பு யாவும் பிரம்மாதம். வார்த்தைகளையும் உணர்ச்சிகளையும் கலந்து கட்டி உருட்டிக் கொடுத்து அவர் பேசும் விதம் எல்லாம் அருமை . அற்புதமான நடிகர் மணிகண்டன் 
 
மணிகண்டன் சிறப்பாக நடித்து இருக்கிறார் என்றால் மீதா ரகுநாத் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் . தனது மன நிலை காரணமாக எப்போதும் தனிமைப்படுத்திக் கொள்வது, மெல்லிய குரலில் பேசுவது , மெதுவான மென்மையான நடை, தன் உடலை தனக்குள் இழுத்துப் பிடித்துக் கொள்ளும் உடல் மொழி, தன்னை தாழ்த்திக் கொள்வது, கிடைத்த உறவின் மனம் கோணக் கூடாது என்பதற்காக எந்த கஷ்டத்தையும் பொறுத்துக் கொள்வது, தனிமையில் மூழ்கி வாழ்ந்த காரணத்தால் கூட்டத்தில் இயங்க பதட்டப்படுவது, அதையும் மீறி அவச்சொல் வரும்போது உடைந்து போவது என்று சிகரம் தொடுகிறார்  மீதா ரகுநாத் 
ஜஸ்ட் லைக் தட் நன்றாக நடிப்பது என்பது ரமேஷ் திலக்குக்கு கைவந்த கலை . இதில் கேரக்டரும் அட்டகாசம் . விட்டு விடுவாரா? அசத்தி இருக்கிறார் . ரேச்சலும் அப்படியே. நடிப்பதே தெரியாத நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார் . 
 
பிள்ளை விபத்தில் இறந்த நிலையிலும் கவலைகளை மறந்து அன்னியோன்யமாக வாழும் வயதான தம்பதி பாத்திரங்களின் வடிவமைப்பும் அவர்கள் பார்க்கும் எல்லா மனிதர்களையும் நேசிக்கும் பாங்கும் இன்றைய சமுதாயத்துக்கு அவசியம் சொல்ல வேண்டிய விஷயம். 
 
பின்னணியில் முன்னணிக்கு வருகிறது. சான் ரோல்டனின் இசை. கதை நிகழ்விடங்களை மிக இயல்பாக உணர வைக்கிறது  ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு. சின்னச் சின்ன காட்சிகளை அழகாக இணைத்து சுருக்கி பிணைத்து இருக்கிறது பரத் விக்ரமனின் படத் தொகுப்பு. கலை இயக்கம் உடைகள் யாவும் சிறப்பு . 
குறட்டை விடுவது என்பது சம்மந்தமில்லாத  நபர் மற்றோருக்கு தொந்தரவான விஷயம்தான்.. ஆனால் குடும்பம்  என்று வரும்போது அது சின்னச் சின்ன சங்கடங்களோடு சீக்கிரமே  பழகி விடும் . ஒரு நிலையில் குறட்டை விடும் நபர் ஊருக்குப் போய் விட்டால் குடும்பத்தில் யாருக்கும் தூக்கம் வராது. (குறட்டை காரணமாக விவாகரத்து என்பது எல்லாம் மேற்கத்திய நாடுகளில்தான் நடக்கும்)  மூன்றாவது காட்சியிலேயே எல்லோருக்கும் புரிந்து விடும் இந்தக் காட்சியை படம் முடியும் வரை இழுத்து இருக்கிறார்கள். 
 
இவ்வளவு பாசமான குடும்பம் இருந்தும் “அவ ஆறுமாசம்  பாரின் போயிட்டா நீ வீணாப் போயிடுவ ” என்கிறார் அக்கறையான மாமா . 
 
மனைவிக்கு உடம்பு சரி இல்லாத நிலையில்  தன் குறட்டை பிரச்னையால் தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம் மாமாவிடம் சொல்லி   மொட்டை மாடியில் புலம்பும் ஒரு நிலையில் , ” ஆனா,  இவ எனக்காக எவ்வளவு பொறுத்துக்கிட்டு இருந்திருக்கா மாமா ” என்று சொல்வான் என்று பார்த்தால் தனது சோகக் கதையோடு சுயநலமாக முடித்துக் கொள்கிறான். அநியாயம். அக்கிரமம் . அராஜகம். 
 
எல்லாம் தெரிந்தும ஒரு நிலையில் மனைவி மீது அவன் எரிந்து விழுவது கேரக்டர் அசாஸினேஷன். 
 
கதாநாயகியின் பாத்திரப் படைப்புக்கு பொருத்தமில்லாமல் திடீரென்று அந்த புளியம்பூ , புயலாக மாறி நாத்தனாரின் காதல்  பிரச்னையில் பொங்குவது எல்லாம்  ஓவர் 
ஒரு நிலையில் திரைக்கதை இழுக்கிறது . இன்னும் ஷார்ப்பும் மெச்சூரிட்டியும் இருந்து இருந்தால் தியேட்டரில் படம் இன்னும்  பட்டையைக் கிளப்பி இருக்கும் .
 
எனினும் இப்போதும் அவ்வப்போது அல்லையில் கிச்சு கிச்சு மூட்டி ஆதுரமாய் இதயத்தை வருடும் மெல்லிய வெண்ணிற இறகாய் அசைகிறது    குட் நைட்.  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *