கன்ட்ரி சைட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜிதன் தவசி முத்து , கே ஜி விஷ்ணு, செல்லப்பன், அபர்ணா, மெர்சின், ஜெனிஸ் நடிப்பில் சாது ஃபெர்லிங்டன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
முழுக்க முழுக்க நாஞ்சில் நாட்டுத் தமிழில் அதாவது குமரி மாவட்டத் தமிழில் வந்திருக்கும் படம் என்பது இதன் சிறப்பு. இதை சரியாகக் கூட சொல்லத் தெரியாமல் முதல் கன்யாகுமரி திரைப்படம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது வேதனை .
அதே நேரம் படத்தின் டைட்டிலில் சாமுவேல் என்ற பெயரில் வேல் என்ற வார்த்தையில் வரும் ல் என்ற ஒற்றெழுத்தில் மேற் புள்ளிக்குப் பதில் முருகனின் வேலை பயன்படுத்தி இருந்தது அழகு
நாஞ்சில் நாட்டின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் வாழும் சிறுவன் சாமுவேலுக்கு (அஜிதன் தவசிமுத்து) கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் என்பது ஆசை. ஆனால் பொழுது போகாமல் ஆடும் ஆட்கள், பள்ளியின் விளையாட்டு அணி இவற்றில் அவன் தனது ஆசையை சொன்னாலே அவன் தோற்றத்தைப் பார்த்து எல்லாரும் சிரிப்பார்கள்.
எப்போதும் அவனுக்கு தோளோடு தோள் கொடுக்கும் நண்பன் ராஜேஷ் ( கே ஜி விஷ்ணு) . அவமானங்கள், முயற்சிகள், எதிர்ப்புகள், தோல்விகள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத நண்பன்.
நண்பர்கள் இருவரும் சாதாரண கட்டையால் கிரிக்கெட் பேட் செய்து கொண்டு விளையாடப் போக, வெளிநாட்டில் பணியாற்றும் நபர் ஒருவரின் வசதியான மகன் ஒரிஜினல் கிரிக்கெட் பேட்டுடன் வருகிறான். அவன், சாமுவேல் மற்றும் ராஜேஷை அவமானப்படுத்துகிறான் .
கிரிக்கெட் வீரர்களின் படம் போட்ட அட்டைகளை கடைகளில் வாங்கி சேகரித்து மொத்தமாகக் கொடுத்தால் ஒரிஜினல் கிரிக்கெட் பேட் கிடைக்கும் என்று பள்ளி வேனின் டிரைவர் சொல்ல, வீட்டில் முட்டை திருடி கடையில் போட்டு காசு சேர்த்து எல்லாம் அட்டை வாங்குகிறான் சாமுவேல்.
இந்த நிலையில் வெளிநாட்டுகாரர் மகனின் வீடியோ கேம் கருவி காணமல் போக, அதை ராஜேஷ் திருடியதாக எல்லோரும் சொல்ல , அவன் அப்பா அவனை அடித்து உதைத்து பள்ளியில் இருந்தே நிறுத்தி விட, அவன் குழந்தைத் தொழிலாளி ஆகிறான் .
பசங்களுக்கு பாசத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு அக்கா (அபர்ணா) , கல்யாணம் முடிந்து கணவன் வீட்டுக்குப் போன நிலையில் திரும்ப வந்து ராஜேஷை பள்ளியில் சேர்க்க முயல , வீடியோ கேம் திருடப்பட்ட விசயத்தில் வரும் ஒரு திடீர் திருப்பமும் அதை அடுத்து நடக்கும் சம்பவங்களும் இந்தப் படத்தை ஒரு சிறப்பான உயரத்துக்கு இட்டுச் செல்கின்றன.
நாஞ்சில் நாட்டுப் பகுதியில் முழுக்க முழுக்க நாஞ்சில் தமிழில் அச்சு அசல் நாஞ்சில் மண்ணின் முகங்களையே கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது இதன் முதல் சிறப்பு .
பிரச்னையும் அதுதான் . பல வசனங்கள் மற்ற பகுதியினருக்குப் புரியாது . ஒரு நிலையில் அதை உணர்ந்தோ என்னவோ கடைசிக் காட்சிகளை வசனமே இல்லாமல் அமைத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் . எனினும் பொதுவான ஒருவரை படம் பார்க்க வைத்து அவருக்கு புரியாத இடங்களில் மட்டுமாவது சப் டைட்டில் போட்டு இருக்கலாம் .
படத்தின் இன்னொரு பெரும்பலம் எளிமையும் பூச்சு இல்லாத நிஜ வெளிப்பாடும் . அழகு. இயக்குனருக்குப் பாராட்டுகள். கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளில் சாமுவேல் அடுத்தடுத்து ஓட வேண்டிய ஷாட்களில் கூட ஓடிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் ஓட வைத்து எடுத்தது உட்பட சில தொழில் நுட்பக் குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் நெகிழ்வான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.
சில இடங்களில் வசதிக் குறைபாடு காரணமாக போதாமை இருந்தாலும் அந்த மண்ணை, நிலத்தை, தாவரங்களை, நீரை நாமும் தொட்டு உணரும் அளவுக்கு சிறப்பான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் சிவானந்த் காந்தி.
அறிமுகக் காட்சியிலேயே அசத்துகிறான் அஜிதன் தவசி முத்து . ஆரம்பத்தில் சாதரணமாகத் தோன்றி போகப்போக நடிப்பில் உயரம் தொடுகிறான் கே ஜி விஷ்ணு . அவனது குரல் அவனது யானை பலம்.
ஜெபாவாக வரும் அபர்ணா, ஒரு நடிகை மனத்தைக் கொள்ளை கொள்ள உடம்பைக் காட்டத் தேவை இல்லை என்பதை நிரூபிக்கிறார் . படத்தில் வரும் சிறுவர் சிறுமியர் குழந்தைகள் எல்லோரும் அந்த மண்ணின் நிஜ அழகோடு விகசிக்கிரர்கள். அவர்களை தேர்வு செய்த வகையில் சிகரம் தொடுகிறார் இயக்குனர்.
நாஞ்சில் நாட்டுத் தமிழ் என்பது தமிழின் ஒரு வழக்கு . (கொங்குத் தமிழ் , கோவைத் தமிழ் போல ) . ஆனால் அது மலையாளத்தின் நீட்சி என்பது போல ஒரு தவறான கருத்து பின்னால் உருவாக்கப்பட்டது . (மலையாளம் என்பதே தமிழின் நீட்சிதானே ?) இந்தப் படமும் அதற்கு துணை போவது வருத்தம்.
பக்காவான தமிழ்க் குடும்பம் என்றாலும அவர்கள் மோகன்லால் படம்தான் பார்க்கிறார்கள் ( ஏன் அங்கே யாருக்கும் சிவாஜி, எம் ஜி ஆர், கமல் ரஜினி, விஜய் காந்த் , சத்யராஜ், கார்த்திக் , பிரபு, விக்ரம் , விஜய் , அஜித் , சிம்பு , தனுஷ், எல்லாம் தெரியாதா?)
“ஏன்டா இங்கிலீஷில் பேர் வைக்கறீங்க? தமிழில் வைக்க மாட்டீங்களா?” என்று கேட்கும் பெண்ணை கொடுமைக்காரியாக சித்தரிக்கிறார்கள்.
கேவலமான ஒரு தமிழ்ப் பாட்டை போட்டு விட்டு ”ஏன்டா இப்படி போடுறீங்க . இயேசுவின் கீதங்கள் போடுங்க” என்று மாற்றச் செய்கிறார் ஒருவர். கல்யாண வீடுகளுக்கு என்றே பாசமலர் உட்பட எத்தனையோ படங்களில் காலத்தை வென்ற பாடல்கள் இருக்கின்றன தெரியுமா?
இப்படி சில விஷயங்கள் அறியாமல் வந்ததா ? இல்லை திட்ட மிட்ட விஷமமா என்ற கேள்வி எழுகிறது .
அவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால், சிறுவன் சாமுவேல் நல்ல படம் என்றே சொல்லலாம் .