ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சாய் சரவணன் , சிவ சைலபதி தயாரிக்க நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஜார்ஜ் மரியான், மனோபாலா, அஸ்மிதா, சஞ்சனா சிங் நடிப்பில் தனசேகர் இயக்கி இருக்கும் படம். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.எஸ். என். பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார்.
தனது சின்ன வீட்டுக்கு ஒரு பெரிய வீடு வாங்கித் தர, ஐந்து கோடி ரூபாய் வரி கட்டாத பணத்தை எடுத்துக் கொண்டு காரில் பயணிக்கும் தொழில் அதிபரிடம் (ராம்கி) இருந்து பணப்பெட்டியை ஒருவன் திருடுகிறான்.
நேர்மையான காவல் துறை அதிகாரியிடம் ( நட்டி) புகார் தருகிறார் தொழில் அதிபர் .
காதல் மிக்க கர்ப்பிணி மனைவியின் (பூனம் பஜ்வா) ஆசைப்படி பிரசவ நேரத்துக்குக் கூட போக முடியாமல் பணத்தைத் தேடுகிறார் அதிகாரி .
பணப்பெட்டி ஊதாரி நண்பர்கள், சக போலீஸ் அதிகாரியின் ( ரவி மரியா) கையாள் ,, ஒரு விலை மாது (சஞ்சனா) , அவளது தோழி (அஸ்மிதா) , எஸ்டேட் காவலாளி (மொட்டை ராஜேந்திரன்) என்று பலரின் கை மாறி காவல் துறைக்குள்ளேயே வருகிறது .

அதை சாதாரணப் பெட்டி எண்ணும்போது சாதரணமாக டீல் செய்யும் மனிதர்கள் உள்ளே இருப்பது ஐந்து கூடி ரூபாய் என்று தெரிந்த பிறகு என்ன செய்கிறார்கள்? கடைசியில் பணம் என்ன ஆனது என்பதே படம்.
காமெடி, கிளுகிளுப்பு, பரபரப்பு எல்லாம் கலந்து ஒரு படத்தைக் கொடுக்க உழைத்து இயக்கி இருக்கிறார், பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கும் தன சேகர். இயக்குனராக முதல் படம் அவருக்கு.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அவர், பெரும்பாலும் ஜீப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது வீட்டுடன் தொடர்பு கொண்டு செல்போனில் பேசுகிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதற்கு அவரது உயரம் கை கொடுக்கிறது. தன்னால் முடிந்த வகையில் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து மேலும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வரலாம். அவரது குணசித்திரம் மேலும் சித்தரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பூனம் பஜ்வா கிளாமர் செண்டிமெண்ட் இரண்டும் கலந்து செய்த கலவை. பழைய செழுமையும் மலர்ச்சியும் முகத்தில் காணவில்லை.தோற்றத்தில் சற்று மாற்றம் தெரிந்தாலும் நடிப்பு ஓகே.

ராம்கி இயல்பு
போலீஸ் டிரைவராக ரவிமரியா வருகிறார் .உடன் பயணிக்கும் ஹெட் கான்ஸ்டபிள் ஆக மனோபாலா வருகிறார். இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் வழியாகச் சிரிப்பு முயற்சி செய்கிறார்கள். முயற்சி மட்டுமே.
அதுவும் அந்த யானை லத்தி காமெடி சகிக்க முடியாத கற்பனை. மனோ பாலாவை உருவக்கேலி செய்யும் காமெடியை சினிமாவில் எப்போது நிறுத்த போகிறார்கள்?
.அஸ்மிதா , சஞ்சனா கவர்ச்சிக் கச்சைக்கு.
லொக்கேஷன்கள் சிறப்பு .
அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படக் கூடாது வரி ஏய்ப்பு செய்யக் கூடாது என்று நல்ல விசயங்களைச் சொல்வதைப் பாராட்டலாம்