லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, வடிவேலு , ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஷிவானி நடிப்பில் சுராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் .
பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு பல ஆண்டுகளாகவே குழந்தை இல்லாமல் இருந்த ஒரு குடும்பத்துக்கு பைரவர் கோவில் சாமியார் ஒரு நாயக் குட்டியைக் கொடுத்து, ”இந்த நாயும் அதன் வம்சமும் வளர வளர , உங்கள் வம்சம் தழைக்கும்” என்று கூற , அவ்வாறே நடந்து அந்தக் குடும்பத்தில் பிள்ளையாகப் பிறக்கிறார் சேகர் (வடிவேலு) .
குடும்பம் செல்வத்திலும் கொழிக்க, காரணம் நாய் என்பதை அறிந்த வீட்டு வேலைக்காரன் நாயைத் தூக்கிக் கொண்டு ஆந்திரா போய் பெரும் பணக்காரன் ஆகி விடுகிறான்.
சேகரோ பணக்காரர்களின் நாய்களைக் கடத்தி பணயத்தொகை கேட்டு நாய்களை கொடுத்து .. அப்படி வாழ்கிறான்.
அந்த நிலையில் ஒரு தாதாவின் (ஆனந்த ராஜ்) நாயைக் கடத்த , தாதாவுக்கும் சேகருக்குமான சண்டையில் தாதாவை சேகர் சுட்டு விட , மருத்துவமனை சென்று உயிர் பிழைக்கும் தாதா பழி வாங்க சேகரைத் தேடுகிறான்.
தனது பாட்டி மூலம் குடும்ப வரலாற்றை அறியும் சேகர், தங்கள் குடும்ப நாயைத் தூக்க ஹைதராபாத் போகிறான். . என்ன நடந்தது என்பதே படம்.
சுராஜும் வடிவேலுவும் தாங்கள் முன்பு செய்த நல்ல காமெடிகளை சாணியில் முக்கி சாக்கடையில் ஊறவைத்து உதறுகிறார்கள்.
அதுவும் முதல் பாதியில் பார்க்க சகிக்க முடியாத உருவங்கள் . இரண்டாம் பகுதியில் ரெடின் கிங்ஸ்லியோடு மாறன் வந்த பிறகுதான் திரையைப் பார்க்கவாவது முடிகிறது.
இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தும் ஆனந்தராஜ் தான் ரெண்டு மூணு இடங்களில் மருந்துக்கு சிரிக்க வைக்கிறார் .
லைகா நிறுவனம் கதைத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது.