ஹாய் @ விமர்சனம்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், ரவுடி பிக்சர்ஸ், இஸட் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார், நயன்தாரா, விக்னேஷ் சிவன், உமேஷ்குமார் பன்சால் ஆகியோர் தயாரிக்க, 

நயன்தாரா, கவின், பாக்கியராஜ், பிரபு, ராதிகா, நடிப்பில் முத்துச்செல்வனின் கூடுதல் திரைக்கதை வசனத்தில் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி இருக்கும் படம்  ஹாய். 
 
காதலித்த சொந்தக்காரப் பெண்ணும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்த, வேறு யாரும் காதலிக்காத நிலையில், கோபக்கார அப்பா( பாக்கியராஜ்) மற்றும்  குடும்பத்தினரின்  கல்யாணக்  கட்டயங்களில் இருந்து  தப்பிக்க   சென்னைக்கு ஓடி  வரும் மயில்சாமியும் ( கவின்)….
 
தான் ராசி இல்லாதவள் என்று நினைத்து அம்மா எங்கோ போய்விட, குடிகார அப்பாவை (பிரபு) சுமந்தபடி  வாழ்ந்த நிலையில்,  மோசமான உறவினர் ஒருவர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த , அப்பாவும் அதற்கு சம்மதிக்கும் நிலையில்,  தப்பிப்பதற்காக சென்னைக்கு ஓடிவரும் தேவயானியும் (நயன்தாரா)… 
 
ஒரே வீட்டில் ஒன்றாக தங்க வேண்டிய சூழல் . மயிலுக்கு தேவயானி மேல் காதல் வருகிறது. ஆனால் வாங்க போங்க என்று பேசி பழகும் நிலையில் சொல்ல பயம்.
 
இருவரும் வேலைக்குப் போக, தேவயானிக்கு ஒரு வயதான பெண்மணியை பராமரிக்கும் வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்கிறது. காதலை சொல்ல மயில்சாமி எடுக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. 
 
தேவயானிக்கு மேற்படி வயதான பெண்மணி  குடும்பம் மூலம்,   வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது. அங்கே போய் சம்பாதித்து வந்து அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவயானியின்  லட்சியம்.
 
இதற்கிடையில் இருவரும் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் மூலம் , இருவரும் சென்னையில் இருப்பது அவரவர் குடும்பங்களுக்கு தெரிய வருகிறது 
 
இரு குடும்பமும்  வருகிறது, மயில்சாமியின் அப்பா அவனை அடிக்க,  தேவயானியின் உறவினர் அவளை இழுத்துக் கொண்டு போக, 
 
தான் காதலிக்கும் தேவயானியின் வெளிநாட்டு லட்சியம் நிறைவேற , தானும் தேவயானியும் காதலிப்பதாகவும்  மூன்று மாத கர்ப்பம் என்றும் அவன் கூறுகிறான். 
 
தன்னை காப்பாற்ற மயில்சாமி போடும் திட்டம் இது என்பதை உணர்ந்து அவளும் சம்மதிக்கிறாள். 
 
வருங்கால மருமகள் என்று நம்பி  போலி கர்ப்பிணி தேவயானியை தன் வீட்டுக்கு கொண்டு வந்து பராமரிக்கிறது மயில்சாமியின் குடும்பம்.
 
விசா வரும் வரை நாட்களைக் கடத்த  பல பொய்களை சொல்லி   இருவரும் கல்யாணத்தை தள்ளிப் போட , 
 
மயில்சாமியின் குடும்பம் காட்டும் அன்பில் தேவயானி ”நான் கர்ப்பமும் இல்லை; எங்களுக்குள் காதலும் இல்லை ” என்ற தனது தரப்பு உண்மையை சொல்ல,  மயில்சாமியின் குடும்பம் அவனை வெளுக்கிறது. 
 
தேவயானியிடம் மயில்சாமி காதலை சொன்னால் அவள் ஏற்றுக் கொள்வாள் என்று நண்பர்கள் சொல்ல, ‘ செய்த உதவிகளை சொல்லி காதலிக்க வற்புறுத்தக் கூடாது’ என்று மயில்சாமி சொல்ல .. நடந்தது என்ன என்பதே இந்த ஹாய்.
 
கவினின் ஆரம்ப கதை வழக்கமான ஒன்று என்றாலும்,  சென்னை  பஸ் ஸ்டாண்டில் கையில் அருவாளோடு காத்திருக்கும் நயன்தாரா கவர்கிறார்.
இளமைக் குறைபாடு தெரிந்தாலும் கண்களின் கத்தி வீச்சும்,  முத்தம் கொடுக்க யத்தனிப்பது போல அந்த குவிந்த உதடுகளும் இன்னும் வீரியம் குறையவில்லை . வழக்கம் போல நன்றாக நடிக்கிறார் . 
 
உற்சாகமாக நடிக்கிறார் கவின். மெல்லிய காமெடி இழையோடச் செய்ய முயலும் அவரது நடிப்பு சில இடங்களில் பலன் தருகிறது சில இடங்களில் பலன் தரவில்லை. 
 
வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. 
 
பின்னணிக்குரல் சேர்ப்பின்  போது  சேர்க்கப்பட்டிருக்கும் சில காமெடிகள்  சிரிக்க வைக்கின்றன. 
 
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன ஜென் மார்ட்டின் இசை செண்டிமெண்ட் காட்சிகளில் கனம் சேர்க்கிறது. 
 
இருக்கிற திரைக்கதையை சிறப்பாக தொகுக்கிறது பிலோமின்ராஜின் படத் தொகுப்பு. 
 
சாதாரண ஆரம்பம், அப்புறம் கொஞ்சம் சுவாரசியம், அப்புறம் கொஞ்சம் தொங்கல் , அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸ் என்று  பலவீனமாகவே திரைக்கதை நகர்கிறது. தவிர பல விசயங்கள் தலையை சுத்தி மூக்கை தொடுவது போலவே இருக்கின்றன 
 
பாத்ரூம் போக வசதியான திணிக்கப்பட்ட பாடல்களும் வருகின்றன 
 
மறைந்த பாக்கியராஜை , அவர் படங்களில் அந்தக் காலங்களில் இலைமறைவு காய் மறைவாக பேசியதை விட,  பச்சையாக பேச வைத்திருக்கிறார்கள். 
 
ராதிகா கேரக்டருக்கு தேவையான காட்சிகள் இல்லை  பிரபு மட்டும் தப்பிக்கிறார் 
 
தேவயானியின் அம்மாவை தேடி மயிலசாமி போவது எல்லாம் டெம்ப்லேட் . அதையாவது ஒழுங்காக செய்தர்களா என்றால் அதுவும் இல்லை. 
 
”இன்னும்  ஒன்றரை மணி நேரத்துல மயில்சாமி வந்தாகணும்” என்று அம்மா  பரபரக்கும் காட்சிக்கு அப்புறம் ,மூன்று நாள் கழித்து மயிலசாமி வருகிறான் . ஒரு கேள்வியில்லை. கூடவே இருக்கும் தேவயானியிடமும் எங்கே மயிசாமி என்று யாரும் கேட்கவில்லை. 
 
லாஜிக்கை விடுங்கள் . முக்கியமான  திரைக்கதை வளர்ச்சி நேரத்தில் இவ்வளவு அலட்சியமாகவா  கையாள்வது?
 
அதுவும் அந்த முக்கியக் கேரக்டரில்  ரொம்ப சீரியசாக சென்டிமென்டாக சுஹாசினி வந்து நிற்கும்போது தியேட்டரே குபீர் என்று சிரிக்கிறது. முடியலைடா சாமி. 
 
படம் முழுக்கவே யதார்த்தத்துக்கு நெருக்கமில்லாத ஒரு பிளாஸ்டிக் தன்மை  இருக்கிறது. 
 
வயலில்  காளையைக் கட்டி உழவு செய்யலாம். யானையைக் கட்டி செய்தால் என்ன ஆகும்? வயலே நாசமாகும். 
 
அது போல் நயன்தாரா என்ற யானையை இந்தப் படம் என்னும் உழவு வயலில் இறக்கி விட்டு இருக்கிறார்கள். இது அவருக்கான கதையே இல்லை
 
சரியான திசையில் இதன் திரைக்கதை பயணித்து இருந்தால் இந்த இரண்டு மணி நேர 24 நிமிட படத்தில் பதினைந்து நிமிடத்தைக் குறைத்து இருக்கலாம். 
 
எனினும் இந்தப் படம் உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் ஒரே வாய்ப்புதான் இருக்கிறது.நீங்கள் டாக்சிக் படத்தை பார்த்த கையோடு இந்தப் படத்துக்குப் போனால் இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *