TOXIC (டாக்சிக்) @ விமர்சனம்

கே வி என் புரடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட்  கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா மற்றும் யாஷ்  தயாரிக்க,

யாஷ், கியாரா அத்வானி , நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் நடிப்பில் யாஷ் உடன் சேர்ந்து எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கி இருக்கும் படம் . 
 
இந்த கீது மோகன்தாஸ் தமிழில் வந்த சத்யராஜ் நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மலையாளப்படங்களில் ஹீரோயின் ஆகி, இரண்டு மலையாளப்படங்களை இயக்கி , சில பல அவார்டுகளுக்கு எல்லாம் அனுப்பி வைத்தவர். 

 
டாக்சிக் என்றால் ‘நச்சுத்தன்மை வாய்ந்த….” என்று பொருள்.
 
சுதந்திரத்துக்கு முந்தைய கோவாவில், பாலியல் தொழிலில்  ஈடுபட வற்புறுத்தப்படும் அக்கா கங்காவைக்  காக்க, தம்பி ராயா கத்தி எடுக்க, ஒரு நிலையில் தம்பிக்கு சோறு போட அக்காவே பாலியல் தொழிலில் ஈடுபட, இருவரும் வளர்ந்து பெரிய ஆளாகி , சுதந்திர இந்திய கோவாவில், ராயா  பெரிய டான் (யாஷ்) ஆக மாற, கங்கா (நயன்தாரா) அவனது மந்திரியாக இருக்கிறார்.
 
பல்வேறு  தாதாக்களுடன் அடிதடி, துப்பாக்கி, கத்தி குத்து வெடிகுண்டு சண்டைகள் போட்டு, பார்க்கிற பெண்களை எல்லாம் வளைத்து அனுபவித்து,  ஏரியாவையே கலக்கும் ராயா , 
 
ஒரு நாள் சர்க்கஸ் கூடாரம் ஒன்றில் சண்டை போடப் போக, அங்கே பார் விளையாடும் நாடியா மீது காதல். அது கங்காவுக்கு  சரியாகப்படவில்லை .
 
எனினும் காதல் , குழந்தை வரை  போகிறது. ராயாவின் எதிரிகள் நாடியாவையும் கங்காவையும் பிடித்து வைத்துக் கொண்டு  , கங்காவை நாடியா சுட்டுக் கொல்லாவிட்டால் , நாடியாவின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாயும் என்று மிரட்ட, வேறுவழியின்றி தன் குழந்தையைக்  கங்காவை சுட்டுக் கொல்கிறாள் நாடியா. 
 
அக்காவைக் கொன்ற நாடியாவையும் அவளுக்குப் பிறந்த தன் மகனையும் ராயா வெறுக்கிறான். 
 
ஒரு நிலையில் பையனைப் பார்க்க ராயா வரும்போது , வெடிகுண்டு வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள் நாடியா. 
 
பின்னர் மெலிசா என்ற பெண்ணோடு (ருக்மிணி வசந்த்)  வாழும் ராயா,  அவளுக்கும் ஒரு குழந்தை கொடுக்க, அந்த மகனை கொல்ல முதல் மகன் வருவதாக உணரும் ராயா, முதல் மகனோடு போராட, அந்த இடத்தில் ஒரு டுவிஸ்ட் எல்லாம் வர, 
 
இடையே தொழில் எதிரிகள் எல்லாம் சேர  என்னதான் நடந்தது என்பதே இந்த டாக்சிக். 
 
பிரம்மாண்டமான பொருட்செலவு, அபாரமான செட்கள் மற்றும் சிஜி வேலை , ஏகப்பட்ட நடிகர்கள் நடிகைகள், அருமையான கலை இயக்கம் , உடைகள் ராஜீவ் ரவியின் பிரம்மதமான் ஒளிப்பதிவு, அருமையான ஒலி வடிவமைப்பு ஆகியவை படத்தின் பலம்.
ஆங்காங்கே சில டைரக்ட்டோரியல் ஷாட்களில்  பிரேமிங்கில் கவனம் கவர்கிறார் கீது மோகன்தாஸ் 
 
கியாரா அத்வானியும் , ருக்மிணி வசந்தும்   நடிப்பில் கவர்கிறார்கள். நயன்தாரா நடிப்பு மாதிரி என்னவோ செய்து இருக்கிறார்.
 
யஷ் சுடுகிறார், .குத்துகிறார், சொருவுகிறார் , திணிக்கிறார், அறுக்கிறார் வெட்டுகிறார், அடிக்கிறார், ஒடிக்கிறார், உடைக்கிறார், கிழிக்கிறார் , சிதைக்கிறார் , மேலே சொன்ன ஒவ்வொரு விஷயமும் கிலோ மீட்டர் கணக்கில் மைல்  கணக்கில் நீள்கிறது. அப்புறம் சல்லாபிக்கிறார். எப்பவாவது வசனம் பேசுகிறார். 
 
அவர் செய்வது போதாது என்று அவ்வப்போது நயன்தாராவும் அவற்றையே செய்கிறார், சல்லாபிப்பது தவிர 
 
யார் யாரோ வருகிறார்கள். ஹீரோ ஹீரோயின்  மாதிரி பில்டப் பெறுகிறார்கள். கொஞ்ச நேரத்தைக் கொன்று விட்டு தானும் சாகிறார்கள். ஹூமா குரேஷி, கேரக்டர் எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. 
 
சுமார் மூன்று லட்சம் துப்பாக்கி குண்டுகள், ரெண்டு லட்சம் கத்திகள், ஒரு லட்சம் வெடிகுண்டுகள் இவற்றுக்கு இடையே ஒன்றரை லட்சம் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் குறுக்கே மருக்கே ஓடிக் கொண்டும் அலறிக் கொண்டும் இருக்கிறார்கள். 
 
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் மட்டும் ஒப்பேற்றுகிறார் 
 
மொக்கையான கதை, லிட்டில் டீடைல்களில் இருக்கும் சிரத்தை, திரைக்கதையில் காட்சி அமைப்பில் இல்லை 
 
ஆரம்பத்தில் சற்றே அட போட வைக்கும் வசனமும் போகப்போக ஜல்லி அடிக்கிறது. இரண்டாம் பாதியில் தேவைக்கு மேல் கத்திக் கதறி காதுகளை செவிடாக்கி BP ஏற்றுகிறார்கள். 
 
படத்தின்  மிகப்பெரிய வில்லன் படத் தொகுப்பு. தொகுப்பாளர் உஜ்வால் குல்கர்னியை சொல்வதா ? இயக்குனர் கீது மோகன்தாஸை சொல்வதா என்று தெரியவில்லை.  
 
இரண்டரை  மணி நேரத்துக்கு கூட  வக்கத்த திரைக்கதையை கதையை மூன்று மணி நேரம் பதினாலு நிமிஷம் ரீல் அந்து தேய்ந்து தொங்க தொங்க ஓட்டுகிறார்கள். 
 
பொதுவாக பெண் இயக்குனர்கள் அதிகம் சினிமாவுக்கு வந்தால் பெண்களின் உலகம் இன்னும் சிறப்பாக சினிமாவில் வெளிப்படும். நல்ல கதைகள்  என்ற ஒரு நம்பிக்கையான கருத்து உண்டு. 
 
“போங்கடா .. அதெல்லாம் ஒரு சூஸ்பரியும்   இல்லை ” என்று சொல்லாமல் சொல்கிறார் கீது மோகன்தாஸ் . படத்தில் இவர் காட்டி இருக்கும் எக்ஸெண்ட்ரிக் , வன்முறை மற்றும் பாலியல்  காட்சிகளை வைக்க பல ஆண் இயக்குனர்கள் கூட தயங்குவார்கள்.   அந்த வகையில் கீது மோகன்தாஸ்.. பெரிய கெத்து மோகன்தாஸ். 
 
படத்தின் பெயர் டாக்சிக்.. பட் அந்த நேர்மை பிடிச்சு இருக்கு. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *