ஆர் கே செல்லுலாய்ட்ஸ் சார்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்க, அவரது குருநாதரான இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக, சரத் குமார், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், சித்தாரா, அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, ராமச்சந்திர ராஜு நடிப்பில் தேவராஜ் என்பவரின் கதைக்கு சூரிய கதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் என்ற இரட்டை இயக்குனர்கள் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்
பிரபல ரவுடி காளி என்பவன் (ராமச்சந்திர ராஜு) அமைச்சரின் ஆதரவோடு அசிஸ்டன்ட் கமிஷனர் ( சரத்குமார்) முன்னிலையிலேயே தொழில் அதிபர் ஒருவரிடம் , செய்த சட்ட விரோத செயலுக்கு வழக்கத்தை விட அதிக சதவீதம் பணம் கேட்க, மறுக்கும் தொழில் அதிபரை அமைச்சர், போலீஸ் எல்லோரின் கட்டளையையும் மீறி, அவன் கொலை செய்கிறான்
அசிஸ்டன்ட் கமிஷனரின் மனைவி நடத்தும் உயிர்க் கொல்லாமை – சைவ உணவு வலியுறுத்தும் அமைப்பு மற்றும் அதற்கான செயலியில் முக்கியப் பொறுப்பு வகிக்கிறான் இளைஞன் ஒருவன் ( விஜய் கனிஷ்கா)

அப்பா இல்லாத அவனது அம்மாவையும் (சித்தாரா) தங்கையையும் (அபி நட்சத்திரா) கடத்தும் ஒரு முகமூடி மனிதன் , செல்போன் மற்றும் சில தொழில் நுட்பங்கள் மூலம் ,அந்த இளைஞனிடம் தாதா காளியை கொல்லச் சொல்கிறான் . கொல்லாவிட்டால் அம்மா தங்கையின் உயிர் தங்காது என்கிறான்
சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காத அந்த இளைஞனுக்கு கோழியைக் கொல்ல பயிற்சி கொடுத்து தாதாவைக் கொல்ல அனுப்புகிறான். தாதா செத்தால் தாதாவின் அயோக்கியத் தம்பி கொல்லப்படுவான் . இளைஞன் செத்தால் அவன் அம்மா தங்கை கொல்லப்படுவார்கள் என்பதுதான் நிபந்தனை
அம்மா தங்கையை காப்பாற்றும் நோக்கில் இளைஞன் முற்றிலும் வேறு ஆளாக மாறி தாதவைக் கொல்ல, அத்தோடு முடியாமல் அடுத்த டாஸ்க் தருகிறான் முகமூடி மனிதன்
மருத்துவமனை ஒன்றின் டீனை (கவுதம் வாசுதேவ் மேனன்) கொல்ல வேண்டும் . டீன் செத்தால் அவன் மகன் கொல்லப்படுவான் . நாயகன் செத்தால் அவன் அம்மா தங்கை கொல்லப்படுவார்கள்.

இப்படியே தொடர்ந்தால் என்ன நடக்கும்? என்ன நடந்தது? இப்படி நடக்க என்ன காரணம்? மாஸ்க் மேன் யார்? ஏன் இந்த இளைஞனை மாஸ்க் மேன் அப்படி பயன்படுத்துகிறான் ? முன்கதை பின்கதை பக்கவாட்டுக் கதை என்ன? அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த ஹிட் லிஸ்ட்
தமிழுக்கு வாழ்வியல் பேசிய பல கண்ணியமான நல்ல படங்களைக் கொடுத்தவர் விக்ரமன் . அவரது மகன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் . அவருக்கு மனப் பூர்வமான வாழ்த்துகள் . அதற்கேற்ப விஜய் கனிஷ்காவும் உற்சாகமாக ஈடுபாட்டோடு நன்றாக நடித்தும் இருக்கிறார் .
தான் தயாரிக்கும் படத்தில் தனது குருநாதரின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தியதோடு தனது உதவி இயக்குனர்களை இயக்குனர்களாக்கி இருக்கிறார் கே எஸ் ரவிகுமார். அவருக்கு வாழ்த்துகள்
கம்பீரமான் போலீஸ் அதிகாரி வேடத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகளோடு கர்ஜித்து நடித்திருக்கிறார் சரத்குமார்

ஆனால் எல்லோரையும் விட நடிப்பில் அசத்தியிருக்கிறார் பெண் டாக்டராக வரும் ஸ்மிருதி வெங்கட் . சபாஷ் . அடுத்து அபி நக்ஷத்ரா . பலே.
“அது ஒண்ணும் தலை போற விசயம் இல்ல; நாளைக்கு பாத்துக்கலாம் விடு” என்பது போலவே
“உன் அம்மாவையும் தங்கச்சியையும் கடத்தறதுக்கு முன்னாடி என் மகனையும் கடத்திட்டான் அந்த ராஸ்கல் ” என்பதையும்
ஒரே மாடுலேஷனில் ஒரே எக்ஸ்பிரஷனில் ஒரு நடிகரால் பேசி நடிக்க முடியும் என்றால் … அவர் பெயர் கவுதம் வாசுதேவ் மேனன் என்றறிக .

அதிர வைக்கும் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள் சண்டை இயக்குனர்கள் விக்கியும் ஃ பீனிக்ஸ் பிரபுவும் . சம்பவம்! அருண் சங்கரின் கலை இயக்கமும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது .
சி சத்யாவின் பின்னணி இசையும் ராம்சரணின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கா பலம்.
நாயகனின் அலுவல் பின்னணி என்று காட்டப்படும் சில காட்சிகள் எல்லாம் இந்தப் படத்துக்கு எதுக்கு என்ற கேள்விகள் துவக்கத்தில் வந்தாலும் கூட,
ஒரு நிலைவரை காட்சிகளை விறுவிறுப்பாகக் கொண்டு போவதில் பாராட்டுப் பெறுகிறார்கள் இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் இருவரும் . குறிப்பாக முகமூடி மனிதன் சொல்லாமலே நாயகனும் மருத்துவமனை டீனும் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கும் காட்சி , டைரக்டர்கள் டச்.!
ஆனால் மிக முக்கியமான நேரம் மற்றும் விசயத்தில் படம் பலவீனம் அடைகிறது .
இவர்கள் சொல்லும் ஆக்சிஜன் கதை தமிழ்நாட்டுக்கு சம்மந்தம் இல்லாதது என்பதே பொதுவான விஷயம். . வட இந்தியாவுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் .
இளைஞனை அப்படிப் பயன்படுத்த மாஸ்க் மேன் சொல்லும் காரணமே அபத்தம் . கோழி திருடியவனுக்கு கொலைக் குற்றத்துக்கான தண்டனை கொடுக்கக் கூடாது .

சரி அதுதான் கதை என்று ஃபிக்ஸ் ஆகி அதிரடியாக ஒரு கிளைமாக்ஸ் கொடுத்து இருந்தால் கூட அது விவாதத்துக்கு உரியது என்றாலும் ஒரு கோணத்தில் சரி என்று சொல்லும் தரப்பின் ஆதரவு கிடைத்து இருக்கும் .
ஆனால் கடைசியில் டுவிஸ்ட் என்ற ஒன்று சொல்கிறார்கள் பாருங்கள் . சற்றும் லாஜிக் இல்லாத மேஜிக் உணர்வும் தராத ஒரு கிளைமாக்ஸ் .
விக்ரமனுக்கு இன்றும் இருக்கும் இமேஜுக்கு , தன் மகனுக்கு தனது பாணியிலேயே ஒரு படத்தைக் கொடுத்து இருந்தால் கூட , அது விஜய் கனிஷ்காவுக்கு இன்னும் நல்ல துவக்கமாக இருந்திருக்கும்
முக்கியமாக படம் பழைய பாணியில் கொஞ்சம் கூட லைவ் ஆக இயல்பாக இல்லாமல் முழுக்க சினிமாத்தனமான சினிமாவாக இருக்கிறது . எங்கேயும் கனெக்ட் ஆக முடியாத அளவுக்கு அப்படி ஒரு சினிமா.
அம்மியில் அரைத்த மசாலாவை கிண்ணத்தில் வழித்துப் போட்டு தாளிக்கக் கூடச் செய்யாமல் , அம்மியில் இருந்து வழித்து அப்படியே பச்சையாக வாயில் திணித்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறது படம்
மொத்தத்தில் … லிஸ்ட் டில் இருக்கு . ஹிட் கிடைக்குமா?