ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆயிஷா அகமல் தயாரிக்க, ராட்சசன் சரவணன், தீபாலி, தாட்சாயணி, சிவா, ஹனிபா, நேரு, லால், அகமல், ஷர்விகா நடிப்பில் என் பி இஸ்மாயில் எழுதி இயக்கி இருக்கும் படம் .
கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய எளிய வீட்டில் தனியாக வாழ்ந்தபடி பால் வியாபாரம் செய்யும் நபர் ஒருவர் (சரவணன்) விடியற்காலை நேரத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கு இருக்கும் பெண்ணின் கழுத்தை தாலிக் கையிற்றால் இறுக்கியே கொல்கிறார்.
அந்தப் பெண்ணின் கணவன் வெளி நாட்டில் உழைக்கிறார் . அந்த ஊரில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து பல பேரை சித்திரவதை செய்யும் நபரோடு அந்தப் பெண்ணுக்கு கள்ளக் காதல் இருந்ததே கொலைக்குக் காரணம்
நினைத்தது போல போலீசின் சந்தேகம் கள்ளக் காதலன் மேல் விழ , அவன் ஓடி ஒளிய அவனையும் தேடிப் பிடித்துக் கொலை செய்கிறார் பால்காரர்
இன்னொரு பக்கம் பால்காரரின் மனைவி ஒரு நபரோடு கள்ளத் தொடர்பு கொண்டிருக்க, பால்காரர் அதைத் தட்டிக் கேட்க, அவள் கள்ளக் காதலனோடு சேர்ந்து கொள்வதோடு , பால்காரர் மீது பாசமுள்ள அவரது மகளையும் தன்னோடு கொண்டு போய் விடுகிறாள்.
மகளோடு மனைவி கள்ளக்காதலனுடன் வாழ , கள்ளக்காதலன் மகளைப் புறக்கணிக்க அதைப் பொறுக்க முடியாமல்தான் தனது மனைவி அவளது கள்ளக்காதலன் இருவரையும் கொல்கிறார் பால்காரர்.
கொலையாளி யார் என்பது தெரிந்த பிறகு என்ன நடந்தது என்பதே படம் .
ராட்சஷன் படத்தில் முகம் காட்டாமல் நடித்த சரவணனுக்கு இதில் நாயகன் வேடம் . கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் .
இயக்குனரின் நிதானமான படமாக்கல் கூட பரவாயில்லைதான்
ஆனால் காட்சிகள் கதாபாத்திர வடிவமைப்பு , துணைக் கதாபாத்திரங்களின் நடிப்பு இவைதான் பலவீனம் .
மகள் கள்ளக் காதலனோடு இருக்கிறாள், பேத்திக்கு சோறு போடக் கூட அவன் மகளை விடுவதில்லை. அப்படிப்பட்ட இருவரையும் மருமகன் கொல்ல, அந்தக் கிராமத்துப் பாட்டியோ , மருமகனை யாரோ போலப் பார்த்து என்னமோ பணத்துக்குக் கொலை செய்தவனை டீல் செய்வது போல , “அடப் பாவி என் மவளை அநியாயமா கொன்னுட்டியே ” என்று வசனம் பேசுகிறார் . இந்தக் காட்சி ஒரு சோறு பதம்.
துரோகத்துக்கு எதிராக ஒரு கதையை எடுக்க நினைத்து இருக்கிறார்கள் . ஆனால் எழுத்தும் படமாக்கலும் படத்துக்கே துரோகம் செய்கிறது