ட்டி.டி ராஜா , டி ஆர் சஞ்சய் குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி , ரியா சுமன், கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ்,ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் நடிப்பில் தனா இயக்கி இருக்கும் படம்.
தேனி மலைப்பகுதியில் குமணன் தொழு என்ற மலைக்காட்டுப் பகுதியில் , தங்கள் கிராமத்துக்கு, ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டு இருக்கும் கயிற்றைப் பிடித்து, நடந்து நீந்திக் கடந்து தான் போக முடியும் என்ற நிலையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தால் நீரில் மூழ்கி இறக்கின்றனர்
சென்னையில் மாநில முதல்வர், அவரது பால்யகால நண்பரும் சக அரசியல்வாதியுமான ஒருவரின் ( சரண்ராஜ்) ஊழ்கல்களுக்காக அவரைக் கண்டித்து விட்டு, ” வரும் தேர்தலில் நீ ஜெயித்தால் எனக்கு அப்புறம் நீதான் முதல்வர் . தோற்றால் உன் அரசியலே முடிந்து விடும்” என்கிறார் .
பால்யகால நண்பரின் அரசியல் இடத்துக்கு இன்னொரு அரசியல்வாதியும் (ஆடுகளம் நரேன்) ஆசைப்படுகிறார் .
மதுரைப் பக்கம் இருந்து சென்னைக்கு வரும் ஒரு நபர் ( விஜய் ஆண்டனி) , இன்னொரு நபரின் (ரெடின் கிங்ஸ்லி )ரூமுக்குள் புகுந்து , ஸ்கூல் பிரண்ட் என்று நம்ப வைத்து உடன் தங்கி, செகண்ட் ஹேன்ட் லேப்டாப் சேல்ஸ் செய்கிறார் .
ரொட்டிக்கடை நடத்தும் அத்தையுடன் வசிக்கும் – நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம்பெண்ணை (ரியா சுமன்) அவன் நேசிக்கிறான் . அவள் ஏற்கவில்லை
தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க எண்ணி மக்களுக்கும் பணம் கொடுத்து ஓட்டு வாங்க, பல நூறு கோடி ரூபாய் பணத்தை அந்த பால்யகால அரசியல்வாதி, பகுதி பகுதியாக மின்சார ரயில் மூலம் கொண்டு போக, அந்தப் பணம் ஒவ்வொரு முறையும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப் படுகிறது . அடுத்த முறை பணம் போகும்போது கொள்ளையடிப்பவர்களை கண்டுபிடிக்க டெபுடி கமிஷனரும் ( கௌதம் வாசுதேவ் மேனன்) உடன் போக, அதே ரயிலில் லேப்டாப் இளைஞனின் காதலை அந்தப் பெண் ஏற்கும் சூழல் வர, கமிஷனரை நோக்கி வந்த குண்டு காதலன் மீது பாய்கிறது .
அடுத்து என்ன என்பதே படம் .
மக்கள் நீரில் மூழ்கி சாகும் அந்த ஆரம்பக் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது .
விஜய் ஆண்டனி ரொம்ப ஃபிரஷ் ஆக அழகாக ஸ்டைலாக படம் முழுக்க வருகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மைம் பாணியில் ஆடும் பாடலில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் .
கிளப்பில் வரும் நடனப் பாடலை சிறப்பாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் நவீன் குமார்.
அவுட் டேட்டட் கதாநாயகி கேரக்டரில் படுத்தி எடுக்கிறார் ரியா சுமன், அதே நேரம் அழகிலும் படுத்தி எடுக்கிறார். எனவே அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு.
படத்தில் வசனம் பேசுவது படம் பார்க்கும் ரசிகர்களுக்காக என்பதைப் பற்றிக் கவலையே படாமல் தனக்குள் பேசி மென்று கொள்கிறார் கவுதம் மேனன்
உதயகுமாரின் கலை இயக்கம் , அனுஷாவின் உடைகள் ( குறிப்பாக ரியாவுக்கு ) அருமை .
ஆரம்பக் காட்சியைப் பார்த்து விட்டு அடுத்து அரசியல்வாதி பொதுப்பணித்துறை அமைச்சர் என்று எல்லாம் வசனம் வரும்போதே, அடுத்து ரெண்டு மணி நேரம் நாலு நிமிடத்துக்குப் பார்க்கப் போகிற மொத்தக் கதையும் புரிந்து விடும். இன்டர்வெல் என்ன என்பது புரிந்து விடும் .
கொஞ்சம் கவனித்தால் அடுத்த அடுத்த பத்து நிமிடத்தில் வரும் காட்சியை இப்போதே சொல்லலாம் .
அதுதான் பெரும் சுமை.
மழை பிடிக்காத மனிதன் படப் பாணியில் இப்படி எடுத்த உடன் படத்தின் கதையை சொல்லிப் புரிய வைத்து விட்டு அப்புறம் அதையே பார்க்க வைப்பதற்குப் பதில் .
ஜென்டில்மேன் படத்தின் கதை என்று வந்த பிறகு, அந்த காட்டாறு காட்சியை ஜென்டில்மேன் படப் பாணியில் இடைவேளைக்குப் பிறகு நிறுத்தி நிதானமாக சொல்லி இருந்தால் படம் பார்க்க வருபவர்களுக்கு கொஞ்சமாச்சும் உதவியாக இருந்திருக்குமே .
வனப் பகுதியில் அரசுக்கே .. அதுவும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கே தெரியாமல் அவ்வளவு பெரிய இரட்டைப் பாலம் கட்டுவது எல்லாம் வேற லெவல் .
மொத்தத்தில் ஹிட்லர் …. முசோலினி , இடி அமீன் .
எனினும் விஜய் ஆண்டனிக்காகப் பார்க்கலாம்.