எண்பதுகளில் ஆடியோ கேசட்டில் வந்து அனைவரின் உள்ளங்களையும் ஆட்டிப் படைத்து விட்டு திரைப்படத்தில் வராமல் போன ஒரு தித்திப்புப் பாடலை இப்போது வரும் படத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு அற்புத அனுபவத்தை தர இருக்கிற படம்தான், ஜி பி ஸ்டுடியோ ஆல்பர்ட் ஜேம்ஸ் , செல்வகுமார் மற்றும் ஜே எஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் இணைந்து வழங்க அஷ்வின் , சிருஷ்டி டாங்கே இணை நடிப்பில் கார்த்திக் ரிஷி இயக்கி இருக்கும் மேகா படம் .
சரி அந்த பாட்டு ?
நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ராதா இருவரும் ஜோடியாக அறிமுகமாக இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் வந்த ”புத்தம் புதுக் காலை.. பொன்னிற வேளை ” பாடல்தான்.
அந்தப் படத்துக்கு இசையமைத்தது இசைஞானி இளையராஜா என்பது சொல்லித் தெரிய வேண்டிய விசயமில்லை .
இந்த மேகா படத்தின் இசையும் அவரே .
இளையராஜாவின் தீவிர ரசிகரான தயாரிப்பாளர் ஆல்பர்ட் ஜேம்ஸ் , இசைஞானி மீது கொண்ட தீவிர அபிமானம் காரணமாகவே சினிமா தயாரிக்க வந்தவராம்.
தவிர படத்தில் புத்தம் புதுக் காலை பாடலை இணைக்க விரும்ப , ‘மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ‘ அலைகள் ஓய்வதில்லை படத்தின் தயாரிப்பாளரான ‘பாவலர் கிரியேஷன்ஸ் ‘ நிறுவனத்திடம் இருந்து விலைக்கு உரிமையை வாங்கி அதே இளையராஜா மூலம் சற்றே இசைக்கருவிப் பயன்பாட்டில் மாற்றம் செய்து படத்தில் வண்ணமயமாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். படத்தின் பாடல்களை ஹங்கேரியில் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் நடிப்பது நாங்கள் செய்த பாக்கியம் என்கிறார்கள் அஷ்வினும் சிருஷ்டி டாங்கேவும்
படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளையராஜாவும் கலந்து கொண்டார் .
விழாவில் பேசியவர்கள் “உண்மையிலேயே அந்த புத்தம் புதுக் காலை பாட்டு அருமையான பாட்டு . அதை எப்படி அலைகள் ஓய்வதில்லை படத்தில் காட்சிப் படுத்தி பயன்படுத்தாமல் பாரதிராஜா மிஸ் பண்ணினாரோ என்று ஆச்சர்யபட்டார்கள்.
(படத்தின் நீளம் அதிகமாகக் கூடாது . எங்கேயும் எந்த நிமிடமும் படம் போரடிக்கக் கூடாது என்ற உணர்வுதான் காரணம் . தவிர இது ஒரு அழகியல் பாடலாகவே அமைய மற்ற பாடல்கள் எல்லாம் திரைக்கதையில் அப்படி செட் ஆகி உட்கார்ந்து விட்டதும்தான் காரணம் )
“இளையராஜாவின் இசையில் வரும் படத்தை வெளியிடுவது பெருமையாக இருக்கிறது” என்றார் சதீஷ் குமார் .
இளையராஜாவின் பேச்சு ‘ சிரி ; சிந்தி ‘ கணக்காக இருந்தது.
“நாங்க எங்க வேலையை செஞ்சு இருக்கோம். எப்படி இருக்குன்னு நீங்க பார்த்துட்டு சொல்லுங்க . இது ரொம்ப நல்ல படம்
ஆனா பொதுவா நீங்க ஒரு தடவை பார்த்துட்டு ”அட தூ …” இதெல்லாம் ஒரு படமா?”ன்னு துப்பிட்டு போற பல படங்களை நான் இசை அமைக்கும் முன்னே ஒரு தடவை , இசை அமைக்கும்போது ஒரு தடவை , மியூசிக் கண்டக்டருக்கு விளக்கும்போது ஒரு தடவை , அப்புறம் டேக் எடுக்கும் போது ஒரு தடவைன்னு நாலு தடவை பாக்குறேன் தெரியுமா ? இப்போ சொல்லுங்க .. என்னை விட பொறுமைசாலி இந்த உலகத்தில் உண்டா ?
இதுவரை வெளியே சொல்லாத உண்மை ஒண்ணை இப்போ சொல்லுறேன் .
எனக்கு முதல் மரியாதை படம் புடிக்கல . அது இசையமைப்புக்கு வந்த போது படத்தை பார்த்துட்டு பாரதிராஜகிட்ட நான் புடிக்கலைன்னு சொல்லிட்டேன். அடுத்த நாள் இசையமைக்கற வேலையை ஆரம்பிச்சேன் .
கிளைமாக்ஸ் சீனுக்கு இசை அமைச்சு முடிச்சபோது பாரதிராஜா என் கைகளை புடிச்சு அழுதுகிட்டே “புடிக்காத படத்துக்கே இப்படி அற்புதமா இசை அமைச்சு இருக்கியே . அப்போ புடிச்சு இருந்தா இன்னும் எப்படி எல்லாம் நல்லா பண்ணி இருப்ப?”ன்னு கேட்டாரு .
புடிச்சு இருந்தாலும் அப்படிதான் பண்ணி இருப்பேன் . படம் எனக்கு புடிக்கல என்பது பர்சனல். ஆனா இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன் . நான் கூப்பிட்டதும் ஓடி வருதே ஏழு ஸ்வரங்கள் அதுக்கு துரோகம் பண்ண மாட்டேன் ” என்றார் .
கிளைமாக்ஸ் உட்பட படம் முடியும்வரை எந்த படைப்பாளியும் அதே மாதிரி துரோகம் பண்ணாம் இருந்தா, இந்தப் படமும் நல்லா ஓடும் .