கப்புள் கிரியேஷன்ஸ் சார்பில் சதா நாடார்- மோனிகா செலெனா என்ற தம்பதி கதாநாயகன் கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி இருக்கும் படம் ல்தகா சைஆ. (வேறு ஒன்றும் இல்லை, சொற்களின் எழுத்துகளை மாற்றிப் போட்டு படிக்கும் வகையில் பார்த்தால் இதன் பொருள் ‘காதல் ஆசை ‘என்பதே )
மனைவியுடன் (மோனிகா செலெனா ) ஒரு பெரிய பங்களாவில் தனியாக வசிப்பவன் அவன் ( சதா நாடார்) . தூரத்து உறவாக இருக்கும் ஒரு குடிகார மாமாவும் அவரை அண்டிப் பிழைக்கும் ஒரு நபரும் மட்டுமே இவர்களைப் பார்க்க வருபவர்கள் .
ஒரு நாள் அவனுக்கு தன் மனைவி கர்ப்பமாக இருப்பது போலவும் , நண்பன் ஒருவன் திடீரென்று அலுவலகத்துக்கு லீவ் சொல்லி விடும்படி சொல்லும்படியாகவும் , ஒரு நிலையில் கர்ப்பிணி மனைவியை, தானே கொன்று விடுவது போலவும் கனவு வருகிறது

மறுநாள் மனைவி, தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். நண்பனும் அதே போல லீவ் சொல்லச் சொல்லி போன் செய்கிறான். கனவில் வந்தது நனவில் அப்படியே நடப்பதால் அதிரும் அவன் , அதே போல மனைவியை நாமே கொன்று விடும் சூழல் வருமோ என்று அஞ்சுகிறான்.
மறுநாள் தூங்கும் போது அதே கனவு தொடர்கிறது .
அதில் அவன் ஒரு விலைமாதுவை அழைத்துச் செல்வது போலவும் அவள் எதிர்பாராத விதமாக இறப்பது போலவும் அதன் தொடர்ச்சியாக கர்ப்பிணி மனைவிக்கு தன்னால் ஆபத்து நடப்பது போலவும் … இப்படி தூங்கும் போது எல்லாம் ஒரே கனவு தொடர ,
ஒரு நிலையில் மனைவியை தானே கொன்று விடுவோமோ என்ற பயத்தில் அவனுக்கு மன நிலையே பாதிக்கிறது

அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
எழுதி ஜோடியாக நடித்து தயாரித்து இயக்கி இருக்கும் சதா நாடார்- மோனிகா செலெனா தம்பதியில் மோனிகா செலெனா சிறப்பாக நடித்து இருக்கிறார் . சதா நாடார் சாதிப் பெயரை பின்னால் போட்டுக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்திருக்கிறார் . டைரக்ஷனில் பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லை.
நடிக்க ஒப்பந்தமாகும்போது சந்தித்துக் கொள்ளும் ஜோடிகளே காதல் காட்சியில் கெமிஸ்ட்ரியில் அசத்துகிறார்கள் . எனில் நிஜ கணவன் மனைவி என்பது எப்படிப்பட்ட வாய்ப்பு !
காட்சிகளில் கெமிஸ்ட்ரியில் ஒரு லைஃப் இருக்க வேண்டாமா? என்னதான் மோனிகா செலெனா போராடினாலும் சதா நாடார் என்னவோ ஆடிஷனுக்கு வந்த பெண்ணைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

ஒருவேளை, ‘ கல்யாணம் ஆகி எல்லாம் முடிஞ்சு போச்சு. . அப்புறம் என்ன கெமிஸ்ட்ரி வெண்டைக்காய் ‘என்று அவர் நினைத்து இருக்கக் கூடும்.
மாமாவாக வருபவர் சற்றே சிரிக்க வைக்கிறார் . அவரது அல்லக்கையாக வருபவர் அசத்தல் தெய்வமே.
ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கு இந்தக் கதை அப்படி ஒன்றும் தப்பில்லை. ஆனால் திரைக்கதை வசனம்தான் மிகப் பெரிய பலவீனம் .
சுவாரஸ்யத்துக்கு முயன்றாலும் தெளிவும் அழுத்தமும் இல்லாத காட்சிகள் பின்னோக்கி இழுக்கின்றன
ஒளிப்பதிவு ஓகே என்றாலும் இசை சோதிக்கிறது .
கிளைமாக்சில் வரும் காமெடி டுவிஸ்ட் நிஜமாகவே ரகளை . திரைக்கதையின் ஒரே ஆறுதல் அதுவே.
மொத்தத்தில்
ல்தகா சைஆ….. சைஆ குக்ருஇ….. ள்ஆ லைல்இ