ஃபர்ஸ்ட் காப்பி புரடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரிக்க, சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நாயகமாக நடிக்க, கீதா கைலாசம், மஷாந்த், கஜராஜ் போன்றோரின் உடன் நடிப்பில் ஸ்டீவ் பெஞ்சமினின் இசை, ஒளிப்பதிவு , எடிட்டிங்கில் வந்திருக்கும் படம்.
ஆணாகப் பிறந்து ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஹார்மோன்கள் மாறுபாட்டால் பெண்ணாக மாறும் ஒரு நபரின், அக மற்றும் புறப் போராட்டங்களை சொல்லும் இந்தப் படத்தின் படைப்பாளியான சம்யுக்தா விஜயனும் அப்படி சந்தோஷ என்ற பெயரில் ஆணாக இருந்து பிறகு சம்யுக்தா என்ற பெயரோடு பெண்ணாக மாறியவர் என்பது இந்தப் படத்தின் ஒரு முக்கிய அம்சம் .
பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் அரவிந்த் என்ற ஆண் (சம்யுக்தா விஜயன்) சிறு வயது முதலே தனக்குள் பெண் தன்மை இருப்பதை உணர்கிறார் . தான் பெண்ணாகவே மாற வேண்டிய சூழல் விரைவில் வரும் என்பதும் அவருக்குப் புரிகிறது .
அவரது தந்தை (கஜராஜ்), வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து பணம் வாங்க பைனான்சியர் வீட்டுக்குப் போனால், அந்த பைனான்சியர் , “பத்திரம் எல்லாம் வேணாம் .உங்க பையன் அரவிந்துக்கு என் பொண்ணை கட்டி வைக்கிறேன் . நீங்க கேட்கும் பணத்தை சீதனமா தர்றேன் ” என்கிறார்
சந்தோஷமாக வீட்டுக்கு வந்தால் அரவிந்த், தான் பெண்ணாக மாறிக் கொண்டு இருப்பதை சொல்கிறார் . அப்பாவும் அம்மாவும் சித்தப்பாவும் வீட்டை விட்டுத் துரத்த முயல்கின்றனர் . அம்மாவுக்கு ( கீதா கைலாசம்) பிள்ளையின் மாற்றங்கள் பிடிக்கவில்லை என்றாலும் பிள்ளையை இழக்கவும் மனமில்லை.

வீடு இப்படியாக , பணிபுரியும் பள்ளியின் முதல்வரும் துணை முதல்வரும் இதை ‘பள்ளிக்கு அசிங்கம் ; எல்லோரும் கெட்டுப் போவார்கள்’ என்றே பார்க்கிறார்கள் . வேலையை விட்டுத் துரத்த முயல்கின்றனர்.
பள்ளியின் தாளாளர், அரவிந்தை தொடர்ந்து பணிபுரிய அனுமதிப்பதன் மூலம் தங்கள் பள்ளியின் ‘பெருந்தன்மை மற்றும் முற்போக்கு குணத்தை’ வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தி அதன் மூலம் பிரபலம் தேடி அதை பள்ளிக்கு ஆதாயமாக்கவே பார்க்கிறார்.
எனினும் பள்ளி முதல்வர் மற்றும் சக ஆசிரியர்களால் அவமானமும் துன்ப துயரங்களும் தொடர்கிறது .
தனது பெண்மனதுக்குப் பிடித்த – மலையாளியான – சக ஆசிரியர் ஒருவனின் அணுகல் கண்டு மகிழ்ந்து காதலோடு சந்திக்கப் போனால் , அவன் கேவலமான நபராக இருக்கிறான்.
இப்படியாக, அவன் என்ற அரவிந்தாக இருந்து, அவள் என்ற பானுவாக மாறிய, அவர் என்ற அந்த நீல நிறச் சூரியன் கற்றது என்ன பெற்றது என்ன உற்றது என்ன ? விட்டது என்ன என்பதே இந்தப் படம் .
வாழ்த்துக்கள் சம்யுக்தா விஜயன் .
ஒரு குறிப்பிட்ட சக மனித உயிர்களின் வலி அறியாமல் , அவர்களைக் கண்டு கொள்ளாமல் போகிற — அல்லது அவர்களை ஒதுக்குவதும் கிண்டல் செய்வதும் குறைந்த பட்சம் முகம் சுளிப்பதும்தான் சமூக ஒழுக்கம் அல்லது கலாச்சாரக் காப்பு என்ற எண்ணத்தில் கெட்டிப்பட்டு கிட்டித்துப் போய் இருந்த, பொதுப் புத்தியின் மண்டையை சம்மட்டியால் அடித்து உடைக்காமல் (அதற்கான நியாயம் இருந்தும் கூட)….
கண்ணீர் துளிகளை சொட்டு சொட்டாக விட்டு அந்தப் பொதுப் புத்தியின் களங்கங்களை கழுவ முயன்று இருக்கிறீர்கள். மகிழ்வும் நெகிழ்வும் .
ஒரு தலை சிறந்த படைப்பாளி இந்தக் கதையை எழுதி இருந்தால் கூட யோசித்திருக்க முடியாது என்று எண்ணும் அளவுக்கு சில காட்சிகள், உணர்வுகள் பிரம்மிக்க வைக்கிறது . திருநங்கையரின் பிரச்சனைகளாகப் படம் சொல்லும் உண்மைகள், கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றன. உதாரணமாக இவர்களுக்கு மன நல ஆலோசனை தரும் மனநல மருத்துவர்கள் சிலரே இவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற விஷயம்! சம்யுக்தா விஜயன் போன்றவர்களின் அனுபவங்களே அப்படிப்பட்ட விசயங்களை இந்தப் படத்துக்குக் கொடுக்க முடியும்.
குறிப்பாக ஆசீர்வாதம் பண்ணச் சொல்லிக் கேட்பது கூட எப்படி அவர்களைக் காயப்படுத்தும் என்ற காட்சி
அற்புதம்
பெண்ணாக மாறும் அரவிந்தும் ஒன்றுவிட்ட சகோதரியான அன்னமும் பேசும் காட்சிதான் இந்தப் படத்தின் ஆன்மா . “ஆம்பளையா இருக்கறதுதான்டா வசதி. பொம்பளையா இருக்கறது அவ்வளவு சுலபம் இல்லடா .. ரொம்ப கஷ்டம் .” என்று அவர் சொல்லும் அந்தக் காட்சி இதயத்தை நொறுக்கி உருக்குகிறது . ஓர் ஆணுக்கே இப்படி இருந்தால் பெண்களுக்கு எப்படி இருக்கும் ?
திருநங்கையை பெண்களே நெருக்கமாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற செய்தியை சொல்வதோடு , பெண்களாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற அன்புக் கட்டளையை , பானுவாக மாறும் அரவிந்துக்கு உதவும் பெண் ஆசிரியை கதாபாத்திரம் மூலம் ஒரு பூ மலர்வதைக் காட்டுவது போல இடுகிறது படம்.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்ச்சி அதிகமாகிக் கொண்டு இருக்கிறது . திரு நம்பிகள் பற்றிக் கூட ஓரளவுக்குத் தெரிகிறது . ஆனால் நாமே இதுவரை அறியாத…. சில சமயங்களில் ஆணாகவும் சில சமயங்களில் பெண்ணாகவும் உணரும் நபர்கள் பற்றி.. படம் சொல்லும் விஷயங்கள் விதிர்விதிர்க்க வைக்கிறது . அந்த வகையிலும் அது முக்கியமான படம்.
கோவையைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ மலையாளிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார் சம்யுக்தா விஜயன். ஆண் , பெண் இரண்டு தோற்றத்திலும் அற்புதமாக நடித்திருக்கிறார் . அருமை
மகன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடி வளர்த்து , அவனது கல்யாண சமயத்தில் அவன் பெண்ணாக மாறினால் , அந்தத் தாயின் மன நிலையில் போராடும், கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார் .
படமாக்கல் அபாரமாக இருக்கிறது ஒளிப்பதிவு , இசை , படத் தொகுப்பு கவனிக்க வைக்கிறது .
எனினும் சில முக்கியமான விசயங்களில் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் அல்லது தவறான அணியில் போராடும்படி இருக்கிறது படம்.
பெண்ணாக மாறும் அரவிந்தும் ஒன்றுவிட்ட சகோதரியான அன்னமும் பேசும் அதே காட்சி . “உனக்குக் குழந்தை பிறக்காது இல்ல ?” என்று சகோதரி கேட்க, சோகத்தோடு “ஆமாம் ” என்பது போல, தலையைக் குனிந்து கொள்கிறார் பானுவாக மாறிக் கொண்டு இருக்கும் அரவிந்த்.
திருநங்கையரைக் கழிவிரக்கத்துக்கு ஆளாக்கும் தவறான காட்சி அது .

திருநங்கைகள் பற்றிய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போதும் எழுதும்போதும் நான் ஒரு விஷயத்தை கட்டாயம் குறிப்பிடுவேன் .
” நண்பனை, தோழியை, காதலனை, காதலியை, கணவனை, மனைவியை எல்லாம் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிள்ளைகளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது . அப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள முயன்று கருவைக் கலைத்தால் அது சட்டப்படி குற்றம். எனவே நம் தேர்வுக்கும் அப்பாற்பட்டு அதுவாகப் பிறப்பதுதான் நமது குழந்தை
ஆனால் ஆனால் குழந்தை பெற முடியாதவரோ , ஒரு திருநங்கையோ நினைத்தால் தனது குழந்தையை .. ஆணோ ., பெண்ணோ… அல்லது இன்னொரு திருநங்கையையோ .. தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் . ஆம் உங்களுக்குப் பிடித்தமான ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள முடியும் .
தவிர புதிதாக ஒரு உயிரை உருவாகுவதை விட , உறவு தேடும் ஒரு உயிரை வாழ வைப்பது உன்னதமான செயல் . எனவே திருநங்கைகளும் குழந்தை பெற முடியாதவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்”
– என்று . சொல்வேன்
ஆனால் ஒரு திருநங்கையே எடுத்திருக்கும் படத்தில் அந்த நம்பிக்கையூட்டும் குறிப்பு இல்லையே என்பது பலத்த வருத்தம் .

அதே போல ..
ஒரு திருநங்கையிடம் பெண் தன்மை அதிகம் இருக்கலாம். அவர்கள் தங்களை பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பலாம் . அவர்கள் கோணத்தில் அது நியாயம் என்று கூட தோன்றலாம். இருக்கலாம்.
ஆனால் சட்டப்படி அவர்களை பெண்களாக ஏற்க முடியாது. அது மற்ற பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல். எல்லாப் பெண்களாலும் திருநங்கைகளை பெண்களாக ஏற்றுக் கொள்ள முடியாது . ஏற்க வேண்டும் என்று கட்டாயமும் இல்லை. காரணம் உடல் உறுப்புகள் உட்பட அதற்குப் பல காரணங்கள் உண்டு
அதை விட முக்கியம்… எல்லா திருநங்கைகளின் பெண் தன்மையின் அளவும் உடலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, எனவே பெண் தன்மை அதிகம் உள்ள — பெண் போன்ற தோற்றம் அதிகம் உள்ள திருநங்கைகளுக்கு மட்டும் பெண் என்ற அங்கீகாரம் கொடுத்தால் ,
பெண் தன்மை குறைவாக உள்ள – பார்வைக்கு பெண் போன்ற தோற்றம் இல்லாத – ஆனால் தங்களையும் பெண்ணாக உணர்கிற திருநங்கைகளுக்கு அது ஏமாற்றத்தை தரும் . அது பாவம் இல்லையா? திருநங்கையர்க்குள் பேதம் பார்க்கும் செயல் அது.
எனவே திருநங்கை என்பவர் பெண்ணாக அடையாளப்படுத்தப்படுவதுதான் பெருமை என்ற எண்ணம் உடைக்கப்பட வேண்டும் .
திருநங்கை என்ற அடையாளமே இயல்பான ஒன்றுதான் என்ற மனநிலைதான் சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் .

மாறாக படத்தின் நாயகி “எனக்கு பெண் என்று போட்டு ஆதார் கார்டு கொடுங்க” என்று கெஞ்சுகிறார் . அடம் பிடிக்கிறார் . “அது ஒரு நோட்டிபிகேஷன் தானே அதைப் போட்டுக் கொடுத்தா என்ன/” என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் பேசுகிறார்
இது கூடப் பரவாயில்லை.
படத்தில் வரும் அம்மா, அப்பா , சித்தப்பா, பணியிட ஆட்கள் அனைவரும் பானுவாக மாறும் அரவிந்த் கதாபாத்திரத்துக்கு எதிராக இருக்கிறார்கள் .
ஆனால் ஆனால் சந்தோஷாக இருந்து சம்யுக்தாவாக மாறிய சம்யுக்தா விஜயன் பேசும்போது, ” எனக்கு நிஜத்தில் அந்தப் பிரச்னை இல்லை, என் அப்பா அம்மா உட்படப் பலரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருந்தனர் ” என்றார்
அதைக் கேட்டபோது , “அடக் கடவுளே! இதுதானே இப்போது எடுக்கப்பட வேண்டிய படம் “என்று தோன்றியது .
ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ஒரு திருநங்கையை அவரது குடும்பம், நட்பு மற்றும் அவர் இருக்கும் பண்பட்ட சூழல் எப்படி ஆதரவாக வைத்துக் கொண்டது என்பதை நேரடியாகச் சொல்வதன் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதுதானே டிஜி சமூகத்துக்கான இப்போதைய தேவை .
உண்மையில் சம்யுக்தாவின் மனதில் அந்த உணர்வுதான் இருக்கிறது . அந்த உணர்வுக்குதான் இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைல் கதாபாத்திங்களின் தன்மைகள் பொருத்தமாக இருந்திருக்கும் .

ஆனால் அப்படி ஒரு திருநங்கையை பெற்றோர், நட்பு, பணியிடம், சமூகம் எப்படி காயப்படுத்தியது என்ற கதையை எடுத்துக் கொண்டு, இப்படி ஒரு DUSTLESS மேக்கிங் கொடுத்து இருப்பதால் ,
படத்தில் ஒரு லக்சுரி , சோஃபிஸ்டிகேஷனே மேலோங்கி நிற்கிறது.சற்றே மேனாமினுக்கித்தனம் கூட தெரிகிறது.
சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படித்தீர்களா சம்யுக்தா ?
அதைப் படித்து இருந்தால் இந்தக் கதையை எப்படி வியர்வையும் கண்ணீரும் இரத்தமுமாய் சொல்லித் தெறிக்க விட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும்
BETTER LATE THAN NEVER
எனினும் இந்தப் படமும் மிக மிக மிக முக்கியமான ஆதரிக்க வேண்டிய பாராட்டப்பட வேண்டிய ஒன்றே .
நீல நிறச் சூரியன் … இன்றியமையா வெளிச்சம்
மகுடம் சூடும் கலைஞர்கள்
**************************************
சம்யுக்தா விஜயன் , ஸ்டீவ் பெஞ்சமின் , மாலா மணியன்