எஸ்.தணிகை வேல் வழங்க பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிப்பில் அங்காடித்தெரு மகேஷ், அனன்யா இணை நடிப்பில் பாலா ஸ்ரீராம் இயக்கி இருக்கும் படம் இரவும் பகலும் வரும் . விடியல் வருமா ? பார்க்கலாம் !
அம்மா இறந்த நிலையில் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள, சித்தியின் பாராமுகத்தோடு வளர்ந்த இளைஞனுக்கு (அங்காடித் தெரு மகேஷ் ), குழந்தைத்தனமான மனதுடன் இருக்கும் கள்ளங்கபடு இல்லாத ஓர் இளம்பெண் மீது ( அனன்யா) காதல் வருகிறது.
அதே நேரம் பணத்துக்காக பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடும் பழக்கமும் அவனுக்கு இருக்கிறது .
நடுத்தர மக்கள் வாழும் குடியிருப்புகளில் மேஜிக் ஷோ நடத்தி மக்கள் மேஜிக் பார்க்கும் நேரத்தில் தனது ஆட்களை வைத்து வீடுகளில் கொள்ளையடிக்கும் வேலையை செய்கிறான் ஒரு சமூக விரோதி . அந்த சமூக விரோதிக்கு ஓர் அராஜக இன்ஸ்பெக்டரின் அதரவு இருக்கிறது .
நடுத்தர மக்கள் பெரிதாக போலீசுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் . போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்து விட்டு கண்ணீர் வடித்து விட்டு மறந்து விடுவார்கள் என்பதால் இப்படி நடுத்தர மக்களிடமே கொள்ளை அடிக்கிறார்கள் . சொல்லப் போனால் இந்த திட்டத்துக்கு சூத்திரதாரியே அந்த இன்ஸ்பெக்டர்தான் .
ஒரு நாள் அந்தத் திருட்டுக் கும்பல் திருடும் அதே இடத்தில் திருடும் நாயகன், அவர்களிடம் மாட்டிக் கொள்ள… நாயகனையும் குழுவில் சேர்த்துக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர் .
இந்த நிலையில் நாயகனோடு நட்புப் பாராட்டும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியிடம் (யுவராணி), நாயகனின் திருட்டு சகாக்கள் பைக்கில் வந்து செயினை அறுக்க, அந்தப் போராட்டத்தில் இறந்து விடுகிறார் அந்தப் பெண்மணி .
தான் காதலிக்கும் பெண்ணின் அண்ணிதான் அந்தப் பெண்மணி என்பது தெரிந்ததும் நாயகன் மனம் நொறுங்கி விடுகிறான் . அதன் விளைவாக திருட்டுக் கூட்டத்தில் இருந்தபடியே, திருட்டுக்கு எதிராக கதாநாயகி நடத்தும் சமூக விழிப்புணர்வுக் குழுவில் சேர்கிறான் .
இன்ஸ்பெக்டர் தங்களை என்று எந்த ஏரியாவில் கொள்ளையடிக்க அனுப்புகிறார் என்பதை முன்கூட்டியே இவன் தகவலாக கொடுக்க, ஒவ்வொரு இடத்திலும் இன்ஸ்பெக்டர் அனுப்பும் திருடர்களுக்கு மக்கள் தர்ம அடி கொடுக்கின்றனர் .
இதற்கெல்லாம் காரணமான கதாநாயகியை போட்டுத் தள்ள இன்ஸ்பெக்டர் திட்ட மிட , அவளுக்கு உதவுவதும் தனது கூட்டத்திலேயே இருக்கும் நாயகன்தான் என்பதுவும் இன்ஸ்பெக்டருக்கு தெரியவர … அடுத்து என்ன வந்தது என்பதே இரவும் பகலும் வரும் .
நடுத்தர வர்க்கத்து மக்களின் இயலாமை காரணமாகவே அவர்களை குறிவைத்து திருடும் கூட்டங்கள் இருக்கிறது என்ற இயக்குனரின் அப்சர்வேஷன் பிரம்மாதம் .
நாயகன், அவனது அப்பா , சித்தி தொடர்பான காட்சிகள் அருமை .
மகேஷின் நண்பராக வருகிறார் நண்டு ஜெகன் .
கேரக்டருக்கும் குடும்பப் பின்னணிக்கும் பொருத்தமாக இருக்கிறார் மகேஷ் . ஆனால் காட்சியின் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு பொருத்தமான முக பாவங்களுடன் கூடிய நடிப்பை வழங்க முயல வேண்டும் .
அனன்யா சிறப்பு . ஆரமபத்தில் அவருக்கு ரசனைக்குரிய ஒரு வெள்ளந்தியான குணாதிசயம் சொல்கிறார் இயக்குனர். அதை படம் முழுக்க தொடர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
யார் அந்த சித்தி ? நடிகை என்பதையே மறந்து விடும் அளவுக்கு அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார் .
வில்லனாக நடித்து இருக்கும் வெங்கடேஷ் டெர்ரர் காட்டுகிறார் . கடைசியில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஆடுவதை மட்டும் குறைத்து இருக்கலாம் .
உங்கள் வீட்டு நகை இப்படியும் திருடு போகலாம் என்று ஒரு விஷயத்தை சொன்ன வகையில் இந்தப் படத்தை பாராட்டலாம் .