திரைப்படத் தொழில் நுட்பங்கள் மற்றும் நடிப்பைக் கற்றுக் கொடுக்க, பல திரைப்படக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அவற்றில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பலர் திரைத்துறையில் ஈடுபட்டு மக்கள் முன் ஜெயித்தவர்கள் அல்ல. யாரோ எங்கோ வகுத்த பாடத் திட்டங்களை அந்த நூல்களில் இருந்து மாணவர்களுக்கு சொல்லித் தரும் வேலையை மட்டுமே அந்தக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் செய்கிறார்கள் .
ஆனால் தயாரிப்பாளர் தனஞ்செயன் புதிதாகத் துவங்கி இருக்கும் ப்ளூ ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி என்ற திரைப்படக் கல்லூரி ( BOFTA- Blue Ocean Film and Television Academy)யில் திரைப்படக் கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகிற எல்லோருமே திரை உலகில் நேரடியாக ஈடுபட்டு வெற்றி பெற்று மக்களிடையே பிரபலமாபனவர்கள் . இவர்கள் இயல்பான திரைப்படக் கல்வியோடு தங்கள் வெற்றி பெற்ற அனுபவங்களையும் மாணவர்களுக்கு சொல்லித் தர இருக்கிறார்கள் .
இந்த BOFTA கல்லூரியில் இயக்கம் , திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைப்பட இதழியல், தொலைக்காட்சிக்கான தயாரிப்புகள், மற்றும் திரைப்படத் தயாரிப்பு ஆகிய எட்டு துறைகளில் மாணவர்கள் சேர்ந்து கற்க முடியும் .
இயக்குனர் படிப்புக்கான துறைத் தலைவராக மகேந்திரனும் திரைக்கதை படிப்புக்கான துறைத் தலைவராக கே. பாக்யராஜும் இருக்க, இவர்கள் இருவரின் தலைமையில் இயக்குனர்கள் ஆர், பார்த்திபன் , மனோபாலா , ஞானராஜ சேகரன், கே.ராஜேஷ்வர், சசி, வெங்கட் பிரபு , விஷ்ணுவர்த்தன் , விஜய், பாண்டிராஜ் , ராம் , கார்த்திக் சுப்புராஜ், ஆர்.எஸ். பிரசன்னா , மற்றும் எழுத்தாளர்கள் கருந்தேள் ராஜேஷ், அறந்தை மணியன் ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்.
ஒளிப்பதிவு துறைத் தலைவராக மது அம்பாட் இருக்க, அவரது தலைமையில் பி . கண்ணன் , மகேஷ் முத்து சாமி , சி.ஜே. ராஜ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவை கற்றுக் கொடுப்பார்கள் .
நடிப்புப் பயிற்சியின் துறைத் தலைவராக நடிகர் நாசாரும் அவரை அடுத்து நடிகர் சண்முக சுந்தரமும் இருக்க, நடிகர்கள் ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜீவா, ரோகினி ஆகியோர் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றுவார்கள் (அனுஷ்கா , ஹன்சிகா எல்லாம் இல்லியா தனஞ்செயன் சார்? பெருத்த ஏமாற்றம் !)
எடிட்டிங் துறைக்கு எடிட்டர் லெனின் துறைத் தலைவர் .
இதழியல் படிப்பின் துறைத் தலைவர் கார்ட்டூனிஸ்ட் மதன் உதவியாக ஸ்ரீதர் பிள்ளை , மோகன்ராம்
தொலைக்காட்சிக்கான தயாரிப்புப் படிப்புக்கு குட்டி பத்மினி
திரைப்படத் தயாரிப்புப் படிப்புக்கு துறைத் தலைவர் டி.சிவா , இவர்களுடன் தனஞ்செயன், ஜே எஸ் கே சதீஷ் குமார் , புரடக்ஷன் டிசைனர் வெங்கட் மற்றும் இயக்குனர் கேபிள் சங்கர் ஆகியோர் ஆசிரியர்கள்.
திரைப்படத் தயாரிப்பு , திரை இதழியல் இரண்டு ஆறு மாத காலப் பாடங்கள் , மற்றவை பனிரெண்டு மாத காலப் பாடங்கள்.
சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அருகே உள்ள கல்லூரி வளாகத்தில் அட்மிஷன நடந்து கொண்டிருக்கும் இந்தப் படிப்புகள் யாவும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் துவங்கப்பட உள்ளன.
நவீன வகுப்பறைகள் , பிரிவியூ தியேட்டர், டப்பிங் தியேட்டர், எடிட் சூட், படப்பிடிப்புத் தளங்கள் , புத்தகங்கள் மற்றும் டி வி டி க்கள் கொண்ட ஒரு நூலகம் , இரண்டு ஸ்கிரீனிங் அறைகள் ஆகியவை இந்தக் கல்லூரியில் இருக்கின்றன .
“திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இரண்டு உலகங்களிலும் ஜாம்பவான் வல்லுனர்களிடம் நேரிடயாக முழுமையான பயிற்சி பெற்று அந்தந்தத் துறையில் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்று யாரிடமும் உதவியாளராக வேலை செய்யத் தேவை இல்லாமல் சீஃப் டெக்னீசியன்களாக களம் இறங்கும் திறமையோடு எங்கள் மாணவர்கள் வெளிவருவார்கள் ” என்கிறார் கல்லூரியின் தலைவர் தனஞ்செயன்.
இந்தக் கல்லூரியின் அறிமுக விழாவில் மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு கல்லூரியின் பாடத்திட்டம் பற்றி விளக்கினார்கள்.
“தமிழ் சினிமாவை மேலும் தரம் உயர்த்தும் படைப்பாளிகளை உருவாக்குவோம் ” என்று சொன்ன இயக்குனர் மகேந்திரன்” நாங்கள் புதிய மாணவர்களுக்கு கற்றுத் தரும் அதே நேரம் அவர்கள் மூலம் நாங்களும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை இந்த கல்லூரி வழங்குகிறது ” என்றார் .
“படமெடுக்கப்பட்ட பின் கேமராவில் இருந்து கழட்டப்பட்ட நெகட்டிவ் ரோலை உடனடியாக பிரித்துப் பார்த்தால் நடிகர்கள் எப்படி நடித்துள்ளார்கள் என்பதை உடனே தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கும் அளவுக்குத்தான் உதவி இயக்குனராக ஆனபோது எனக்கு சினிமா அறிவு இருந்தது . அப்புறம் எல்லாமும் கற்றுக் கொண்டோம் . அப்படிக் கற்றுக் கொண்டபோது எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இங்கே கற்றுக் கொள்கிறவர்களுக்கு வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம் ” என்றார் பாக்யராஜ் .
சசி பேசும் போது ” பதினாறு வருடத்தில் ஐந்து படங்கள் கொடுத்து இருக்கிறேன். படங்கள் குறைவு என்றாலும் நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்று உள்ளேன் . அதை எப்படி பெற முடிந்தது என்பதை சொல்லித் தருவேன் ” என்றார் .
“இங்கிருந்து வெளியே வரும் ஒளிப்பதிவு மாணவர்களை நேரடியாக படப்பிடிக்கு கொண்டு செல்லலாம் என்ற அளவுக்கு அவர்களை தயார் செய்து அனுப்புவோம் ” என்றார் பி.கண்ணன் .
நாசரின் பேச்சு அற்புதம் ” எனக்கு நடிகனாக வேண்டும் என்று ஆசையே இல்லை . அது என் அப்பாவின் ஆசை . அவர் என்னை அடித்து உதைத்து கட்டாயப்படுத்தினார் . அவர் என்னை நடிப்புப் பயிற்சியில் சேர்த்தார் . திரைப்படத்துறையில் பணியாற்றும் எல்லாரும் தங்கள் கற்பனையை நடிப்பவர்கள் மூலம்தானே கொண்டு வருகிறார்கள் . எனில் எல்லாரையும் விட நடிகனின் பொறுப்புதானே அதிகம் என்று ஒரு நாள் யோசித்தேன் . அன்று முதல் நடிகன் ஆனேன் . என் அனுபவங்களை சொல்லித் தருவேன் ” என்றார் அவர்.
முறையான படிப்பு இல்லாததால் இங்கே பல எடிட்டர்கள் , இயக்குனர்களின் கடைசி அசிஸ்டன்ட் போலவே இருக்கும் அவலத்தை மிக அற்புதமான விசயங்களோடு உணர்வுப் பூர்வமாக விளக்கிய எடிட்டர் லெனின் ” அப்படி இல்லாமல், சுயம் மிக்க எடிட்டர்கள் இங்கு இருந்து வருவார்கள் ” என்றார் .
“பேனா இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதக் கூடாது . ஒரு படத்தை முறைப்படி பாராட்டுவதோ விமர்சனம் செய்வதோ எப்படி என்பதை சொல்லித் தருவோம் ” என்றார் மதன்
“தயாரிப்பாளர்களுடன் மற்ற துறையினரும் மற்ற துறையினரும் எப்படி இயைந்து பணியாற்ற வேண்டும் என்பது உட்பட சொல்லித் தர நிறையவே இருக்கிறது ” என்று, வெகு பிராக்டிக்கலாக பேசினார் வெங்கட் .
” ஆறு லட்ச ரூபாய்க்கு ஒரு படத்தின் விநியோக உரிமை வாங்கி பதி மூணு லட்ச ரூபாய் நஷ்டப்பட்டேன் . ஆறு லட்ச ரூபாய்க்கு வாங்கிய படம் ஒழுங்காக ஓடவில்லை என்றால் ஆறு லட்ச ரூபாய்தானே நஷ்டமாகும் ? அது பதி மூணு லட்ச ரூபாயாக ஆனது எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே படிக்க வாருங்கள் ” என்றார் கேபிள் ஷங்கர்
நடக்கட்டும் … நல்லது …… நல்லது நடக்கட்டும் !