தமிழின் முதல் வியூ பாயின்ட் படமான ஓர் இரவு, முதல் தமிழ் 3 D படமான அம்புலி , முதல் ஹாரர் அந்தாலாஜி படமான ஆ இவற்றை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள்….. இன்னும் எத்தனை ‘முதல்’ விசயங்களை செய்யக் காத்து இருக்கிறார்களோ தெரியவில்லை .
ஜப்பானில் உள்ள டோக்கியோ தமிழ்ச் சங்கத் தலைவரான ஜி.ஹரி, ஜப்பானியரான ஒக்கிடா இருவரும் ஜப்பான் இந்தியா கூட்டுத் தயாரிப்பாக தயாரிக்க , அம்புலி மற்றும் ஆ புகழ் கோகுல்நாத் , மற்றும் அஞ்சனா இவர்களுடன் யோக் ஜேப்பி, ஈரோடு மகேஷ், ஜீவா, கும்கி அஷ்வின் , ஜி.ஹரியின் மகளான பேபி ஹம்சிகா ஆகியோர் நடிக்க, மேற்படி ஹரி ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் அடுத்து இயக்கும் படமான ஜம்போ….
தமிழின் முதல் மைம் 3 D படம் என்ற பெருமையைப் பெறுகிறது !
வார்த்தைகள் அல்லாது உடல் மொழிகளால் சொல்ல வருவதையும் சூழலையும் புரிய வைக்கும் அற்புதக்கலை மைம். இதை முக்கிய விஷயமாகக் கொண்டு உருவாகும் படம் இது.
வெளிநாடுகளுக்கு சென்று மேஜிக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவைச் சேர்ந்த ஜம்போ என்றே சுருக்கப் பெயர் கொண்ட ஜம்புலிங்கமும் அவனது ஜோடியும் ஒரு குழந்தையும் ஜப்பானில் தொலைந்து போகிறார்கள் .
உலகின் எந்த மொழியில் கத்தினாலும் திரும்பிப் பார்க்கும் பழக்கம் உள்ள பிரான்ஸ்காரர்கள் ஆங்கிலத்தில் கத்தினால் மட்டும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்பார்கள் . ஜப்பான் நாட்டிலும் ஆங்கிலம் வேலைக்காகாது. இந்த நிலையில் ஜப்பானிய மொழி தெரியாத மூவரும் எப்படி இந்தியா வந்து சேர்ந்தார்கள் என்பதுதான் இந்தப் படமாம்.
.
உலகின் எந்த நாட்டவர் பார்த்தாலும் அவர்களுக்கு புரியும்படி இந்தப் படம் உருவாகிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம் . மைமிங் கலையில் நிஜமாகவே தேர்ச்சி பெற்ற கோகுல்நாத் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
படம் 90 சதவீதம் ஜப்பானிலும் 10 சதவீதம் இந்தியாவின் ஒரு மலை கிராமத்திலும் நடக்கிறது. ஜப்பானியப் பகுதிகளை படமாக்கி முடித்த நிலையில் மலைக் கிராமப் பகுதிகளுக்காக விரைவில் மூனாறு கிளம்புகிறது இந்த படக்குழு.
தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது பல ஜப்பானிய நடிக நடிகையரும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் ஜப்பானியரை மணந்து கொண்ட தமிழ்ப் பெண்ணாக, ஒரு இடைவெளிக்கு பிறகு , முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார் சுகன்யா .
ஈரோடு மகேஷ் ஒரு முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்க, இவர் மட்டுமல்லாது ஸ்டேஜ் ஷோவில் எந்திரன் படத்து ரோபோவை வைத்து ஒரு காமெடி ஏரியாவில் பின்னி எடுத்திருக்கிறாராம் , கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டவரும் இப்போது மாப்பிள்ளை விநாயகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருபவருமான நடிகர் ஜீவா.
இது போதாது என்று சில காட்சிகளில் உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கிறார் கோகுல்நாத்
.
ஹரி – ஹரீஷ் இயக்கும் படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவாளராக பணியாற்றும் சதீஷ்தான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர். தவிர படத்தில் ஸ்டீரியோகிராபரும் அவரே .
ஆ படத்தில் பாடலுக்கு இசை அமைத்த வெங்கட் பிரபு ஷங்கர் இந்தப் படத்துக்கு பின்னணி இசை அமைக்க , படத்தின் மூன்று பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் இசையில் பட்டங்கள் பெற்ற பெண் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யா.
.
அம்புலி 3 டி படத்தைப் போலவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது ஜம்போ 3 டி
படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் முதல் சந்திப்பில் படத்தில் ஸ்டில்களை மட்டுமே காட்டி பிரம்மிக்க வைத்தார்கள் ஹரி ஹரீஷ் இருவரும் .
அட்டகாசமான மேஜிக் காட்சிகளைக் காட்டும்படியாக, ஜப்பானிய பின்னணியில் ஜப்பானிய முகங்களுடன் சேர்ந்து கண்ணைப் பறிக்கும் கண் கவர் வண்ணங்களில் ஸ்டில்களே ஒரு மேஜிக் ஷோ பார்த்த திருப்தியை தருகிறது .
தனக்கு பொருத்தமான ஒரு கேரக்டரில் கோகுல் அசத்தி இருப்பது ஸ்டில்களிலேயே புரிகிறது . இதுவரை தனது முகத்துக்கு சம்மந்தமில்லாத கேரக்டர்களில் நடித்து வந்த அஞ்சனாவுக்கு இந்தப் படம் பெரிய சான்ஸ் ஆக இருக்கும் .
படம் பற்றி பேசிய இயக்குனர் ஹரீஷ் “ஆ படத்தில் கோகுல் கதைக்கு ஹீரோவாக இருந்தார் . இந்தப் படம் கோகுலின் மைம் திறமையை முழுக்க பயன்படுத்தும் படம். இங்கே பல ஸ்டில்களில் நீங்கள் மேஜிக் ஷாட்களை பார்க்கலாம். அதில் எதுவுமே கயிறு கட்டி எடுக்கப்படவோ கிராபிக்சில் உருவக்கப்படவோ இல்லை . எல்லா ஷாட்களும் கோகுல் உண்மையாக நடித்தவை . அதுபோல அஞ்சனாவும் நன்றாக நடித்தார் . சூது கவ்வும் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த யோக் ஜேப்பி மேஜிக் நிபுணராக பிரம்மாதமாக நடித்துள்ளார் . ஜப்பானிய தயாரிப்பாளர் ஒக்கிடா ஒரு கேரக்டரில் மிரட்டலாக நடித்துள்ளார் . ஈரோடு மகேஷும் ஜீவாவும் சொல்லவே தேவை இல்லை . சுகன்யாவும் அப்படியே . பேபி ஹம்சிகாவின் நடிப்பு உங்கள் எல்லோரையும் கவரும் இவர்கள் மட்டுமல்ல எல்லோருமே சிறப்பாக நடித்தார்கள் ” என்றார் .
இயக்குனர் ஹரி “ஜப்பானில் இந்தப் படத்துக்காக ஷூட்டிங் போனது உண்மையிலேயே மறக்க முடியாத விஷயம். அங்கே நம் இஷ்டத்துக்கு எல்லாம் படம் எடுக்க முடியாது. அவர்கள் சொல்கிற நேரத்துக்கு ஆரம்பித்து சொல்கிற நேரத்துக்குள் முடிக்க வேண்டும் . எத்தனை பேர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்கள் . யார் எந்த வண்டியில் வரவேண்டும் என்பதெல்லாம் முன்பே முடிவு செய்து சொல்ல வேண்டும் . அப்படி பணியாற்றியதே சிறப்பாக இருந்தது. இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் ” என்றார் .
.
தயாரிப்பாளர் ஜி.ஹரி ” ஜப்பானிய அரசு தனது நாட்டின் சுற்றுலாவை வளர்க்க அவர்கள் நாட்டின் பகுதிகள் இந்தியப் படங்களில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்ற விஷயம் , டோக்கியோ தமிழ்ச் சங்க தலைவர் என்ற முறையில் , இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஒக்கிடா மூலம் எனக்கு தெரிய வந்தது . சந்தோஷமாக அந்தப் பணியை நான் எடுத்துக் கொண்டேன் . அதன் விளைவாக கமல் நடித்த ஜப்பானில் கல்யாண ராமன் படத்துக்கு பிறகு சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் இரண்டு பாடல்களை ஜப்பானில் பல்லாண்டுகளுக்கு பிறகு எடுக்க வைத்தேன் . அதன் பின்னர் பல படங்கள் .
ஜப்பானில் கலை நிகழ்ச்சி நடத்த பல முறை கோகுல்நாத் வந்துள்ளார் . ஒரு முறை செய்த பர்பார்மன்ஸை மறுமுறை செய்ய மாட்டார் . அவ்வளவு கிரியேட்டிவான ஆள். ஜப்பானில் ரஜினி மீனாவுக்கு பிறகு தெரிந்த நடிகர் கோகுல்தான் . அவர் வந்து ஸ்டேஜ் ஷோ செய்கிறார் என்றால் டோக்கியோ வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது ஜப்பானியர்களே பார்க்க வருவார்கள் . இந்த நிலையில் தமிழ்ப் படம் தயாரிக்க ஒக்கிடாவும் விரும்ப , ஹரி ஹரீஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய் படத்தை எடுத்து விட்டோம்” என்கிறார் .
“ஜப்பானில் முத்து படம் ரொம்ப ஃபேமஸ் . இந்த படம் வந்த பிறகு இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரும் அங்கே புகழ் பெறுவார்கள் .இது கண்டிப்பா நடக்கும் ” என்று ஆங்கிலத்தில் சொன்ன ஒக்கிடா ‘கண்டிப்பா’ என்ற வார்த்தையை மட்டும் தமிழில் சொன்னார்.
அமைதியாக பேசிய கோகுல்நாத் ” படத்தில் மிகவும் நடித்து ரசித்தேன் . எனக்கு மைம் முன்பே பழகிய விஷயம் என்பதால் நிறைய விஷயங்களை கிரியேட்டிவாக சேர்த்து செய்திருக்கிறேன் . இதற்கு நான் ஹரி ஹரீஷ் மற்றும் தயாரிப்பாளர் ஹரி , ஒக்கிடா ஆகியோருக்கு நன்றி ” என்றார் .
“இந்தப் படம் கிடைத்து நான் செய்த அதிர்ஷ்டம் ” என்றார் அஞ்சனா.
“இதுவரை ஜப்பானியப் படங்களுக்கே அனுமதி தரப்படாத இடங்களை இந்தப் படத்துக்காக ஜப்பானிய அரசு அனுமதி கொடுத்தது பெருமையான விஷயம் ” என்றார் ஒளிப்பதிவாளர் சதீஷ் .
“படத்துல பார்த்தீங்கன்னா எல்லோருக்கும் கோட்டு சூட்டு போட்டு இருக்கும் . ஆனா ஜப்பான்ல பனி கொட்டுற காலத்துல எனக்கு மட்டும் நம்ம ஊரு டிரெஸ் கொடுத்து நடுங்க விட்டுட்டாங்க ” என்று ஈரோடு மகேஷ் சொல்ல , “நீங்களே இப்படி சொன்னா அப்போ கதாநாயகி நிலைமை “என்று இயக்குனர் ஹரி கேட்க , “அதானே என்பது போல ஒரு லுக் கொடுத்தார் அஞ்சனா ( ஏய் .. அந்த புள்ளைக்கு தமிழ் புரியுதுப்போவ்!)
“படத்தில் இன்னும சுவையான சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு . இப்போ கொஞ்சம்தான் சொல்லி இருக்கோம் . போகப் போக நிறைய விஷயங்கள் வரும் ” என்று ஹரீஷ் சொன்னது … சும்மா சொல்லக் கூடாது, உண்மையிலேயே மிரட்டலாக இருந்தது .
எப்படியோ .. எல்லா படத்துலயும் ஏதாவது ஒரு வகையில ரசிகர்களை மிரட்டணும் .. அதானே உங்க திட்டம் ?
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462