
தாய்மண் புரடக்ஷன் சார்பில் நா.கிருபாகரன் தயாரிக்க, அறிமுக நாயகனாக இளங்கோவும் அறிமுக நாயகியாக அஞ்சனாவும் நடிக்க, ந.ராயன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் அழகிய பாண்டிபுரம்.
எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த சினிமாபுரம்? பார்க்கலாம் .
அழகிய பாண்டிபுரம் என்ற கிராமத்தில் ஒரு தெருவில் எதிர் எதிர் திசையில் உள்ள இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு காலம் காலமாக பகை . அதனால் ஊரிலேயே அவர்களுக்கு பாம்பு வீட்டுக்காரர், கீரிப் புள்ள வீட்டுக்காரர் என்றுதான் பெயர் .
இதில் கீரிப்புள்ள வீட்டின் குடும்பத் தலைவர் (மனோபாலா) அவரது மனைவி (பாத்திமா பாபு) இருவருக்கும் இரண்டு மகன்கள் . அரசியல்வாதியான மூததவனுக்கு (ஸ்ரீமன்)திருமணம் ஆகி வீட்டில் ஒரு மருமகள் (யுவராணி ) இருக்கிறாள். இரண்டாவது மகனுக்கு (அறிமுகம் இளங்கோ) திருமணம் ஆகவில்லை .
பாம்பு வீட்டின் குடும்பத்தலைவர் (எம் எஸ் பாஸ்கர்( அவரது மனைவி (மீரா கிருஷ்ணன்) இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள். எதிரிக் கட்சி அரசியல்வாதியான மகனுக்கு (சுப்பு பஞ்சு) திருமணம் ஆகி மனைவி இருக்க (தேவதர்ஷினி) மகளுக்கு (புதுமுகம் அஞ்சனா) திருமணம் ஆகவில்லை .
கீரிப்புள்ள வீட்டுக்காரனுக்கு பயந்தே தனது மகளை சிறுவயது முதலே ஊட்டியில் ரகசியமாக படிக்க வைக்கிறார் பாம்பு வீட்டுக்காரர். படிப்பு முடித்து ஊருக்கு வந்துவிடும் மகளை எதிர்வீட்டுக்காரர்கள் கண்ணில் படாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறார் .
அதே நேரம் பாம்பு வீட்டுப் பெண்ணுக்கு பார்க்கும் பையனை இந்த வீட்டுப் பயலும் கீரி வீட்டுப் பையனுக்கு பார்க்கும் பெண்ணை அந்த வீட்டுப் பெண்ணும் கலைத்து விட்டு ஒருவரை ஒருவர் பழி வாங்குகிறார்கள்.
ஒரு நிலையில் கீரி வீட்டுப் பையனின் நண்பனும் பாம்பு வீட்டுப் பெண்ணின் தோழியும் காதலிக்க, அது நிறைவேறாத என்ற நிலையில் காதலன் தற்கொலைக்கு முயல, கீரி வீட்டு பையனும் பாம்பு வீட்டுப் பெண்ணும் சேர்ந்து அந்தக் காதலை சேர்த்து வைக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இவர்கள் இருவருக்கும் காதல் வருகிறது .
பாம்பு வீடும் கீரி வீடும் அந்தக் காதலை ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதுதான் படம் .
கதை என்று பெரிதாக எதுவும் இல்லாத நிலையில் திரைக்கதையில் நிறைய கேரக்டர்களை வைத்து அதற்கேற்ப அனுபவம் வாய்ந்த நடிகர்களை போட்டு சமாளித்து இருக்கிறார் இயக்குனர் . எல்லா காட்சிகளிலும் ஹீரோ ஹீரோயினையே காட்டிக் கொண்டு இருக்காமல் இத்தனை கேரக்டர்களுக்கும் சமமாக காட்சிகளை கொடுத்து இருப்பது படம் பார்க்கும்போது ரிலாக்ஸ் செய்கிறது .
எம் எஸ் பாஸ்கர் மனோ பாலா பகையில் சில காமெடி வசனங்கள் சகஜமாக வந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. அண்ணிகளாக யுவராணியும் தேவதர்ஷினியும் ஸ்கோர் செய்கிறார்கள் . அரசியல்வாதி அண்ணன்களில் ஸ்ரீமன் பொறுமையை சோதிக்க, பஞ்சு சில அரசியல் ‘பஞ்ச்’கள் காரணமாக பாஸ் ஆகிறார் . அம்மாக்களில் பாத்திமா பாபுவை விட மீரா கிருஷ்ணன் இயல்பாக நடிக்கிறார்.
இளங்கோ தன்னை புரிந்து கொண்டு அடக்கி வாசித்து இருக்கிறார் . ஆரம்பக் காட்சிகளில் விநோதமாய் தோன்றும் கதாநாயகி அப்புறம் பழகிப் போக அவரையும் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம் .
பரத்வாஜின் இசை பரவாயில்லை ராகம். அகிலனின் ஒளிப்பதிவு வெளிப்புறக்காட்சிகளில் நன்றாக இருக்கிறது .
கீரி வீட்டுக்காரர்களை வயிறெரிய வைக்க வேண்டும என்பதற்காக பாம்பு வீட்டில் வீடு முழுக்க எல்லா ரூமுக்கும் ஏசி போட்டு அதிக பட்ச குளிர்ச்சியில் வைத்து விட்டு உள்ளே குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்து இருப்பது ரசிக்க வைக்கிறது
அதே போல தோழன் தோழியின் காதல் திருமணத்தை, ஜாதியைக் காட்டு தடுக்க வரும் அந்தப் பெண்ணின் தந்தையை, ஹீரோ தலையில் தட்டி புத்தி பேதலிக்க வைத்து(?) , ”ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் திருமணம் செய்யலாம்” என்று சொல்ல வைப்பதும் ரசிக்க வைக்கிறது .
இரண்டு குடும்பத்துக்குமான பகைக்கு கடைசியில் சொல்லப்படும் காமெடி காரணம்… இன்னும் சுவையாக இருந்திருக்கலாம் .