வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிக்க, யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பெராடி, கல்கி, வசந்தி, அருவி பாலா நடிப்பில் கதை திரைக்கதை வசனத்தை கே . பிரகாஷுடன் இணைந்து எழுதி, வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும படம் .
மேஜிக் நிபுணரான அப்பாவிடம் ஒரு சிறுவன் மேஜிக் கற்று வரும்போது, ஒரு ரிஸ்கான மேஜிக்கில் இறந்து போகிறார் அப்பா. ஆனாலும் அப்பாவின் ஆன்மாவின் வழிநடத்தல் படி மேஜிக் கற்றுக் கொண்டு மேஜிக் மேன் ஆகிறான் மகன் (யோகிபாபு)
எனினும் அவனுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அவனுக்கு ஒரு பெண் (சாந்தி ராவ்?) மேஜிக் வாய்ப்புகள் பெற உதவ வந்தும், அதனால் பலன் இல்லை.
இந்நிலையில் மலைக்காடு சூழ்ந்த இடத்தில் அவன் குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சில வெட்டிப் பயல்கள் அவனிடம் தொடர்ந்து வம்பிழுக்கின்றனர் அவனது புறாவை திருடிக் கொண்டு போய் விட , கோபப்பட்டு அவர்களில் ஒருவன் சட்டையை மேஜிக் மேன் பிடிக்க,
கோபப்படும் அந்த வெட்டிப்பயல் , ரவுடியை வைத்து மேஜிக் மேனின் கையை வெட்டி விடுகிறான். இது மேஜிக் மேனுக்கு மேலும் பின்னடைவாக ஆகி விட ,
அந்த வெட்டிப் பயல்களில் வெறும்பயலான ஒருவன் ஒரு ஏழைப் பெண்ணைக் கடத்தி ரவுடிகளோடு சேர்ந்து கற்பழித்துக் கொன்று விடுகிறான் .
குற்றவாளிகளை பழிவாங்க மேஜிக் மேன் விரும்ப , போலீஸ் குற்றவாளிகள் பக்கம் நிற்க , நடந்தது என்ன என்பதே படம் .
இப்படி கதைச் சுருக்கமாக எழுதிப் பார்த்தால் அப்படி ஒன்றும் மோசமான கதை இல்லையே என்பது புரிகிறது.
யோகி பாபு குடி இருக்கும் வீடு அந்த லொக்கேஷன் பிரமாதமாக இருக்கிறது . அதற்காக அந்த இடத்தை விட்டு கேமராவை நகர்த்தவே மாட்டேன் என்கிறார்கள்
ஒளிப்பதிவு மது அம்பாட்
– என்று டைட்டிலில் போடுகிறார்கள்.
யோகி பாபு சில இடங்களில் நடக்கக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறார் . அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் அவரை தூங்கக் கூட விடாமல் அவசர அடி அடித்து இருப்பார்களோ என்றும் தோன்றுகிறது
யோகிபாபு, மேஜிக் இது இரண்டும் சேர்ந்தால் அது யாருக்கான படமாக இருக்க வேண்டும் ? குழந்தைகளுக்கான படமாகத்தானே இருக்க வேண்டும் .
ஒரு சில காட்சிகள், ஓரிரு மேஜிக் தவிர குழந்தைகளைக் கவர ஒரு காட்சி கூட இல்லை என்பதுதான் பரிதாபம்
அது கூடப் பரவாயில்லை . சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற நபர் , சுடுகாட்டில் போய் அவள் பிணத்தைத் தோண்டி மறுபடியும் …….. முயன்றாரன் என்ற சீன் உள்ள படத்துக்கு யோகிபாபு எதற்கு? மேஜிக் எதுக்கு?
மேஜிக் பற்றிய கதையில் திரைக்கதை வசனத்தில் ஒரு மேஜிகே இருக்க வேண்டாமா?
அந்தக் காலங்களில் எம் ஜி ஆர் படங்களில் ..
“என்னப்பா ‘தேடி வந்த மாப்பிள்ளை’?”
அவரு சாதாரண வேலன் இல்ல… ‘ மாட்டுக்கார வேலன்’ ”
“ஏன்னா…. அதுதான் நான் ‘ குடியிருந்த கோயில்’
– என்று படத்தின் பெயர் ஒரு முறை.. ஒரு முறை மட்டும்தான் .. வசனம் வரும் .
ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை “ஜோரா கைய தட்டுங்க… ஜோரா கைய தட்டுங்க… ” சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் .
சொல்லாவிட்டால் கைதட்டல் கிடைக்கவே கிடைக்காது என்பது படக்குழுவுக்குத் தெரிந்தே இருக்கிறது . அந்த நேர்மை பிடிச்சிருக்கு.