மாமன் @ விமர்சனம்

இன்றும் உலகமே வியக்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்… போரில் அவனது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்த நிலையில் அவன் தாய்மாமன் (அம்மா முதிய வேண்மாளின் அண்ணன் ) இரும்பிடர்த் தலையார் என்பவரால் வளர்க்கப்பட்டவன்தான் . ஆக, கல்லணைக்கு உள்ளேயும் ஒரு தாய்மாமனின் பாசம் இருக்கு .

லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்க, சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத். மற்றும் பலர் நடிப்பில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் . 

 கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காமல்,  புகுந்த வீட்டில் அவமானப்படும் அக்காவுக்கு ( ஸ்வாசிகா) ஆறுதலாக இருந்து , 
 
ஒரு நிலையில் அவள்  சூல் கொண்ட போது, பெரும் பேருவகை அடைந்து , அக்காவின் வயிற்றில் இருக்கும் குழந்தையோடு பேசி ,
 
அந்தக் குழந்தை பிறந்தபோது முதன் முதலில் தூக்கி மகிழ்ந்து நீராட்டி சீராட்டி பாராட்டி ஊர் காட்டி தேர் காட்டி வளர்ந்த தாய்மாமனை (சூரி), அனுதினமும் பிரியாமல் இருக்கிறான்  அந்தச் சிறுவன் (மாஸ்டர் பிரகீத்) 
 
எந்த அளவுக்கு என்றால்,  அக்காவின் பிரசவத்துக்கு உதவிய டாக்டரை (ஐஸ்வர்ய லக்ஷ்மி) காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் தாம்பத்யமே நடக்காமல்,  அதனால் அந்த டாக்டர் அத்தை தாயாகவே முடியாத அளவுக்கு(???!!!???).  (இத்தனைக்கும் அரண்மனை மாதிரி வீடு . ஆயிரத்து சொச்சம்  அறைகள்) . 
 
அதனால் அந்த டாக்டர் பெண் கோபப்பட, அக்காவோ  நாத்தனார் அதிகாரத்தைக் காட்ட, அது ஈகோவாக வெடிக்கிறது . 
 
அக்கா பக்கம் போனால் மனைவி என்ற தவளை இழுக்கிறது , மனைவி பக்கம் போனால் அக்கா என்ற எலி குதிக்கிறது . குடும்பம் உடைகிறது . 
 
அக்கா மனைவி இருவரும் அவரவர் தரப்புக்காக அளவுக்கு மீறிப் போக , தாய்மாமன் தவிக்க, சிறுவன் துடிக்க … 
 
எப்படி இந்தக் கதையை முடிப்பது என்று புரியாத நிலையில்… ஒரு அதிர்ச்சி மாதிரி-  
 
எஸ்கேப்பிசமாக முடிப்பதற்கான பலியாடுகளாக ராஜ்கிரண் மற்றும் விஜி சந்திரசேகர் கேரக்டர்களை,  ஆரம்பம் முதலே மூலிகை இலை தழை போட்டு வளர்த்து வந்து கடைசியில் ஒரே போடாக வெட்டிப் போட்டு…
 
 படம் பார்ப்பவர்களின் ரசனையின்   கைகளை முறுக்கி , “ஓகே தானே … ஓகே தானே.. சொல்லு .. நல்ல கிளைமாக்ஸ் தானே .. சொல்லு .. சொல்லு ” என்று அதட்டி…
 
அவர்களும் வலி தாங்காமல்…. ” அய்யய்யோ ஆமாமா …. அய்யய்யோ  சூப்பர் கிளைமாக்ஸ்.. அய்யய்யோ  ஆமா கிளைமாக்ஸ் “என்று கதறியபடி  சொல்லி விட்டு வந்தால்…  அதுவே மாமன் படம்
 
இந்தப் படத்தின் பெரும் பலம் படத்தின் கதை . கதையாசிரியர் நடிகர் சூரியே . 
 
அடுத்தது சூரியின் நடிப்புப் பங்களிப்பு .  கொஞ்ச காலம்  முன்பு வரை நாம் சினிமாவில் பார்த்த காமெடி நடிகர் இவர்தானா என்று நமக்கே சந்தேகம் வரும் அளவுக்கு ஒரு சீரியஸ் செண்டிமெண்ட் படத்தில் அவ்வளவு அழகாகப் பொருந்தி அசத்தலாக நடித்து  பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் சூரி . பாம்பால்  கூட இப்படி பக்காவா சட்டை உரிக்க முடியுமான்னு  தெரியல சாமி, அற்புதம் சூரி. 
 
அடுத்து அக்காவாக நடித்திருக்கும் ஸ்வாசிகா. சரியாகச் சொல்ல வேண்டுமானால்   கேரக்டர் அஸாசினேஷனுக்கு   (கதாபாத்திரச் சீர்குலைப்பு… கதாபாத்திரக் கற்பழிப்பு என்று சொல்லலாம்) ஆளான ஒரு கதாபாத்திரத்தில் ஒருவர் இவ்வளவு சிறப்பாக நடித்து அந்த சீர்குலைவுகளைக் கழுவிக் களைந்து சுத்திகரிக்க முடியுமா? பிரம்மிப்பு!  
 
அன்பு ஸ்வாசிகா.. லப்பர் பந்து படத்துக்கு நான் சொன்னதுதான்.. பத்மினி , சாவித்திரி , விஜயகுமாரி வரிசையில் நீங்கள் அழுவது கூட அழகாக இருக்கிறது . சினிமா உங்களுக்கான புது கிரீடங்களுக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டு இருக்கிறது  
 
ஐஸ்வர்ய லக்ஷ்மி,  ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் ஆகியோர் கொடுத்த பாத்திரத்தை குறைவின்றி செய்துள்ளனர்  மாஸ்டர் பிரகீத் சிவன் மனம் கவர்கிறான் . பாபா பாஸ்கர் அட என்று ஆச்சர்யப்படும் அருமையான நடிப்பு. 
 
மற்றவர்களும் நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. 
 
மலடி என்று தூற்றும் மாமியார் முகத்தில் வாந்தியாக பதில் சொல்லும் காட்சி, தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற்போலப் பயன்படுத்தப்படும்  அட்டகாசமான டைரக்டோரியல் டச் . 
 
அக்கா மருத்துவமனையில் ஸ்கேனிங் கிற்குப் படுத்திருக்க, மருத்துவர் அடி வயிறு தெரியும்படி உடையை நெகிழ்த்தச் சொல்ல படுத்திருக்கும் நிலையில் அக்கா சிரமப்பட , 
 
தம்பி ஓடி வந்து, ” இருக்கா நான் பண்றேன்”  என்று கேட்கும் காட்சி அண்மையில் தமிழ் சினிமாவில் வந்த தலை சிறந்த காட்சிகளில் ஒன்று . நமது  வாழ்வியலில்  புனிதமான உறவுகளுக்கு இடையில் உடல் என்பது ஒன்றுமே இல்லை என்ற மாண்பை விளக்கும் காட்சி அது .  வாழ்த்துகள் பிரசாந்த் பாண்டிராஜ் . 
 
இன்னும் என்னைக் கேட்டால், அக்கா சிரமப்பட தம்பி வந்து அக்காவிடம் ஒன்றுமே சொல்லாமல் தானாகவே செய்து இருந்தால் அந்தக் காட்சி இன்னும் இமயமாக உயர்ந்து இருக்கும் .
 
 (ஆனால்  பாசமலர் படத்தில் முதலிரவு அறையில் இருக்கும் தங்கையின் புகைப்படத்தை போகிற போக்கில் சிவாஜி திருப்பி வைப்பது போல…  நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் முன்னாள் காதலியின் கணவனுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே சற்றும் களங்கம் இல்லாமல் முன்னாள் காதலியைப் பார்க்கும் ஹீரோ போல .. ..  மிக மிக கவனமாக  எடுக்கப்பட வேண்டும் . இல்லாவிட்டால் தவறாகப் போய்விடும்)  
 
தாய்மாமன் நெருக்கத்தால் அப்பன் இழக்கும் உரிமையை ஜெயப்பிரகாஷ் சொல்லும் நேர்த்தி,    ஒரு அசத்தலான  இடம் , அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் சிறப்பு . 
 
ஆனால் இவை தவிர திரைக்கதையில் அவ்வளவு சறுக்கல்கள்…. யதார்த்த மீறல்கள் .. தேவைக்கு மேல் நீளும் காட்சிகள்…. இவ்வளவு கதாபாத்திரங்கள் இருந்தும் அசந்தர்ப்பமான  இடங்களில்  தேவைக்கு  மேல் விழும் மாண்டேஜ் ஷாட்கள் .. அதிலும் சூரி முகத்தில் கேக் பூசும் காட்சியில் மேக்கப் கன்டின்யுட்டி தவறுகள் ..
 
இதை இந்தப் படத்தின் கதையின் பாணியிலேயே எப்படிச் சொல்லலாம் என்றால் 
 
ஒரு குழந்தை ..
 
அந்தக் குழந்தை பிறக்கும்போதே 2.5 கிலோ எடையில் அழகாக ஆரோக்கியமாக நன்றாக இருக்கிறது .
ஆனால் அந்தக் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இருந்து அந்தக் குழந்தையை கொலை செய்யும் விதம் விதமான முயற்சிகள் நடக்கின்றன.
 
ஆறு ஏழு வயது வரை (அதாவது இரண்டு மணி நேரம் 33 நிமிடம் வரை ) இப்படி அந்தக் குழந்தையைக் கொல்ல பல முறை முயற்சி நடக்கிறது .
 
ஓரிரு இடங்களில் தெய்வாதீனமாக தப்பிக்கிறது ,
 
ஆனால் போகப் போக அந்தக் குழந்தையை கொலை செய்யும் முயற்சிகள் தீவிரம் அடைகின்றன .
 
ஒரு நிலையில் அந்தக் குழந்தை குற்றுயிரும் குலை உயிருமாக காம்பவுண்டில் ஏறி தாவி தியேட்டர் பக்கம் குதித்து விட்டது
 
எல்லாவற்றையும் மீறி அந்தக் குழந்தைக்கு இருந்த அடிப்படை ஆரோக்கியம் அதை எந்த அளவு காப்பாற்றும் என்று தெரியவில்லை.
 
படத்தின் கதைதான் அந்தக் குழந்தை . திரைக்கதைதான் அந்தக் கொலை முயற்சிகள் .
 
முதலில் கேரக்டர் அசாசினேஷனுக்கு வருவோம்.
 
குழந்தை இல்லாமல் பல வருடம் அவமானப்பட்ட ஒரு அக்கா — அதன் வேதனைகள் அறிந்த அக்கா … தனக்கு அக்கறையோடு மருத்துவம் பார்த்து பிரசவம் நடக்க வைத்த மருத்துவரே தன் தம்பியின் காதல் மனைவியாக வந்த நிலையில்…. தனக்கும் தன் கணவனுக்கும் பல ஆண்டுகள் ஏற்பட்ட ( படத்தில் சொல்கிறபடி ) ‘மலடி – ஆண்மை இல்லாதவன் அவமானம்’ …
 
தன் தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் ஏற்படக் கூடாது என்பதில் எவ்வளவு குறியாக இருப்பாள் ? அதற்கு தன் மகனால் ஒரு நொடி தடை வரும் என்றாலும் அவள்தான் அதை சரி செய்வாள் .
 
ஆனால் இங்கே நேர்மாறு . எப்போதும் அக்கா மகனுடனேயே இருப்பதால் எனக்கு கணவர் நேரம் ஒதுக்கவில்லை என்று வருத்தப்படும் மனைவி மீது, அக்காவுக்கு ஆங்காரம் வருகிறது . அவளை மட்டம் தட்டப் பார்க்கிறாள் . இதற்குப் பெயர்தான் CHARACTER ASSASSINATION. அவள் இயல்பே அதுதான் என்றால் அட்லீஸ்ட் அதை அக்கா என்று சொல்லாமல் தங்கை என்றாவது சொல்லி இருக்கலாம் . மெச்சூரிட்டி லெவல் என்ற சமாதானமாவது கிடைத்திருக்கும்.
 
இது கூடப் பரவாயில்லை . ஆனால் ஆத்திரத்தில் பிய்த்து இழுத்துக் கொண்டு போன தன் மகனை சமாதானம் செய்ய அவள் அடுத்து செய்யும் அந்த போட்டோ சமாச்சாரம் … ரொம்ப இம்மெச்சூரான காட்சி . அதை கடைசிவரை சரி செய்ய முடியாமல் உடைந்து நொறுங்கி விட்டது திரைக்கதை .
 
யதார்த்தமாக யோசித்தால்… ஒரு கணவன் மனைவி வாழும் வீட்டில் கணவனின் அக்கா மகன் கணவன் கூடவே எப்போதும் இருக்கிறான் எங்கே போனாலும் உடன் வருகிறான் என்பது, ஒரு புது மனைவிக்கு எரிச்சல் தந்தது என்பதே ஒரு நல்ல சித்தரிப்பு இல்லை. அப்படி எல்லாம் கடந்துதான் நம் முன்னோர் பெண்கள் வாழ்ந்து செழித்தார்கள் . எனினும் யதார்த்தத்தில் அந்தக் கோபம் இந்தக் கால நியாயம் என்றே வைத்துக் கொள்வோம் .
 
அதற்காக அந்தக் கணவன் மனைவிக்குள் எதுவுமே நடக்கவில்லை. அவள் கர்ப்பம் ஆகவே இல்லை . அவள் கணவனை பொய் சொல்லி பிரித்து வேறு ஊருக்குக் கொண்டு சென்று, சில போர் அடிக்கிற மாண்டேஜ் காட்சிகள் எல்லாம் நடந்த பிறகுதான் (பொதுவாக அதிக கேரக்டர்கள் உள்ள திரைக்கதைகளில் fill up மாண்டேஜ்கள் பெரும்பாலும் பலன் தராது ) , அவள் கர்ப்பமானாள் என்று சொன்னால் …
ன்யா யோவ்…. அந்த ஆறு ஏழு வயசுப் பையன் ஸ்கூல் போக மாட்டானா? குளிக்கப் போக மாட்டானா? விளையாடப் போக மாட்டனா? நைட்டு ரெண்டு இட்லியைப் போட்டு ஒரு கிளாஸ் பால் கொடுத்துட்டா தூங்க மாட்டானா? அந்த வீட்டுல ஒரே ஒரு ரூம்தான் இருக்கா? மத்த ரூமை எல்லாம் வாடகைக்கு விட்டாங்களா? இல்ல அங்கே எல்லாம் பேய் இருக்கா? அறுக்க மாட்டாதவனுக்கு எதுக்கு அம்பத்தி ரெண்டு கருக்கருவா?
 
ஆறு வயசு பையனோடு ஒரு கணவன் மனைவி ஹனிமூனே போலாமே .. என்ன கெட்டுப் போச்சு? அதுக்கு எதுக்கு அவ்வளவு கலவர களேபர ரணகளமாக ஒரு சீன்?
 
படத்தின் கதை சூரி . அவர் இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்கிறார் . அந்த உண்மை சம்பவத்தில் இதெல்லாம் இருக்கா? வாய்ப்பில்லை . இருந்தாலும் அது சூப்பர் லாஜிக் .
 
சினிமாவுக்கு லாஜிக் வேண்டும் . லாஜிக் இல்லாமலும் இருக்கக் கூடாது . சூப்பர் லாஜிக்கும் கூடாது .
 
குறைந்த பட்சம் காதல் , பிச்சைக்காரன் படங்களில் போட்டது போல “இது உண்மைக் கதை ” என்று ஒரு வாக்கியமாவது போட்டு இருக்க வேண்டும். அதை வைத்து எல்லார் வாயையும் அடைத்து இருக்கலாம் . அதுதான் புத்திசாலித்தனம்
 
இரண்டாம் பகுதியில் எல்லா காட்சிகளும் தேவை இல்லாத நீளம் .. அப்படி நீளமாகப் போனாலும் முத்தாய்ப்பாக முடியுதா? உணர்வுக் கூட்டல் வருகிறதா என்றால் அதுவும் இல்லை
 
இப்படி திரைக்கதை சரி இல்லாத காரணத்தால் ஒளிப்பதிவு எடிட்டிங் இசை போன்ற விசயங்களும் பெரிதாகப் பலன் தரவில்லை.
 
ராஜ்கிரணும் விஜி சந்திரசேகரும் சம்மந்தப்பட்ட பல காட்சிகளும் கொட்டும் மழைக்காலத்தில் எலுமிச்சம்பழ ஜூஸ் மாதிரி தேவை இல்லாமல் ஓடுது .
 
அந்தக் காட்சிகளில் ஒரே உயிர்ப்பான விசயம் என்னவென்றால் …
 
”என்னதான் சண்டை போட்டாலும் அவரு பொண்டாட்டியை கை நீட்டி அடிக்க மாட்டார் ” என்பதுதான் .
 
அதையும் போனால் போகிறது என்று ஜஸ்ட் வசனமாக சொல்கிறார்கள் . அந்த வசனத்தை விஜி சொன்னாலாவது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . அதையும் ராஜ்கிரண் தான் சொல்கிறார் .
 
அதை ஒரு காட்சியாக – அதாவது யாரோ ஒருவன் தன் மனைவியை அடிக்க – அதை விஜி தட்டிக் கேட்க, – ”உன் புருஷன் யோக்கியமா. நீயும் அவரும் தினமும் சண்டை போடலியா ?” என்று அவன் கேட்க..
 
அப்போது அவன் முகத்தில் கத்தி வீசுவது அந்த விசயத்தை விஜி சொல்வதாக வைத்திருந்தால் ., அப்படியே பின் நோக்கி கரண்ட் பாய்ந்த கதையாக அதுவரை படத்தில் ராஜ்கிரண் விஜி நடித்த அத்தனைக் காட்சிகளுக்கும் உயிர் வந்திருக்கும் . அதையும் செய்யல.
 
அப்படி இருந்தும் விஜியின் மரணக் காட்சிகள் வெகு நீளம்
 
விஷயம் சிம்பிள் ..
 
இதுபோல கனமான கதைகள் கிடைக்கும்போது கொஞ்சம் நேரம் ஒதுக்கி பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன் , பாரதிராஜா படங்களைப் பாருங்கள் . படம் பார்த்து விட்டு அதன் கதையை யோசியுங்கள். அந்தக் கதையில் உள்ள விபரீதமும் அந்த மேதைகள் அதை எப்படி ட்ரீட் செய்து உள்ளார்கள் என்றும் புரியும் .
 
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் ..
 
படித்தால் மட்டும் போதுமா?
 
படத்தில் பாலாஜியும் சிவாஜியும் அண்ணன் தம்பிகள் . சிவாஜிக்குப் பெண் பார்க்க பாலாஜி போவார் . பாலாஜிக்குப் பெண் பார்க்க சிவாஜி போவார்.
 
தமிழ்க் கலாச்சாரத்தில் ஒருவனுக்குப் பெண் பார்க்க அம்மா, அப்பா, அக்கா, தங்கை , அத்தை மாமா, தாத்தா பாட்டி சித்தப்பா சின்னம்மா பெரியப்பா பெரியம்மா யார் வேண்டுமானாலும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ போய் வருவார்கள் . ஆனால் அவனது அண்ணனோ தம்பியோ தனியே போக மாட்டார்கள் .
 
ஆனால் படித்தால் மட்டும் போதுமா, 1954 ஆ ஆண்டு வந்த நா என்ற வங்காளப் படத்தின் தழுவல் . அந்தப் படம் தாரா சங்கர் பந்தோபாத்யாய் எழுதிய நா என்ற நாவலில் இருந்து உருவானது .
 
வங்காளத்தில் அப்படி அண்ணனுக்கு தம்பி மட்டுமோ and Vice Versa போகிற வழக்கம் இருந்திருக்கலாம் . சரி தமிழில் அதை மாற்றலாமா என்றால் மாற்றினால் மொத்தக் கதையும் கொலாப்ஸ் ஆகிறது . அந்த நிலையில் அந்தக் காட்சியும் படத்தில் இருக்கும் . ஆனால் அதை பீம்சிங்கும் ஆரூர்தாசும் அப்படி அட்டகாசமாக ஹேண்டில் செய்து இருப்பார்கள்
 
குலமா குணமா , கை கொடுத்த தெய்வம் போன்ற படங்களில் வித்தியாசமான சிச்சுவேஷன்களை எப்படி ட்ரீட் செய்து இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் . வாழ்க்கை அனுபவம் வேண்டும்.
 
உடனே ஓல்ட் மூவீஸ் கிரிஞ் என்று பேசக் கூடாது . இப்போது தமிழில் ஓகோ என்று ஓடும் கதைப் படங்கள் எல்லாம் கதையிலோ அல்லது ட்ரீட் மென்ட்டிலோ பழைய படங்களின் இன்னொரு வடிவம்தான்.
 
இப்போதும் சொல்கிறேன் . மாமன் படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது . அசாத்தியமானது . தாய்மாமன் என்ற உறவு பல்லாயிரமாண்டு தமிழ்க் கலாச்சாரத்தின் ஆணி வேர்களில் ஒன்று .
 
இன்றும் உலகமே வியக்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்… போரில் அவனது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்த நிலையில் அவன் தாய்மாமன் (அம்மா முதிய வேண்மாளின் அண்ணன் ) இரும்பிடர்த் தலையார் என்பவரால் வளர்க்கப்பட்டவன்தான் . ஆக, கல்லணைக்கு உள்ளேயும் ஒரு தாய்மாமனின் பாசம் இருக்கு
 
இதைத்தானே நீங்க இந்தப் படத்தில் சொல்லணும் .
 
மாமன் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதே என் ஆசை . சூரி என்ற தங்கமான மனிதனுக்காக
 
படம் முடிந்து வெளியே வந்ததும் சூரியிடம் ”படத்தின் கதை பிரம்மாதம்” என்றேன் . சரியாகப் புரிந்து கொண்டு” படம் எப்படிண்ணே இருக்கு/” என்றார் . நல்லா இருக்கு என்று மட்டும் சொல்லி விட்டு வந்தேன்
 
ஆனால் இந்தப் படம் எவ்வளவு நன்றாக ஓடுகிறதோ அதை விட மூன்று மடங்கு ஓட வேண்டிய படம் . (அப்படி ஒரு கதை . அப்படி ஒரு நடிகர்கள்  அதுவும்  ராஜ்கிரணும் விஜி சந்திரசேகரும்… !  புலிகளைக் கூட்டிக் கொண்டு போய் பொரி உருண்டை சாப்பிடக் கொடுத்த கதையாக ராஜ்கிரனையும்  விஜி சந்திரசேகரையும் சும்மா நிற்க வைத்து  இருக்கிறார்கள்.இருவரும் இந்தப் படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம்    )
 
ஆனால் இந்தப் படம் இவ்வளவுதான் ஓடுது என்றால் அதற்கு ஒரே காரணம் பக்குவம் இல்லாத புரிதல் இல்லாத அலட்சியமான மேம்போக்கான திரைக்கதையே .
– சு.செந்தில் குமரன் 
91 98400 76462 
su.senthilkumaran@gmail.com

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *