விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆன்டனி தயாரிக்க,
விஜய் ஆன்டனி, அஞ்சலி , அம்ரிதா, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், ஆர் . கே. சுரேஷ், யோகி பாபு, ஜெய பிரகாஷ், நாசர், நடிப்பில் ,
வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் படம் காளி . படம் எப்படி ? பேசலாம் .
அமெரிக்காவில் பிரபல மருத்துவமனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வரும் நம்மூர் இளைஞனான மருத்துவர் ஒருவருக்கு(விஜய் ஆன்டனி) அடிக்கடி ஒரு கனவு . வளர்ந்து நிற்கும் நெல்வயல் நடுவே வரும் மலைப்பாம்பைக் கண்டு மிரண்டு ஓடும் மாடு , ஒரு பாலகனை கொம்புகளால் குத்திக் கிழிக்கப் போக ,
தடுக்க வரும் தாய் மாட்டில் குத்துப்பட்டு விழுவது போல !
அடிக்கடி இந்த கனவு வரும் நிலையில் அவனது தற்போதைய பெற்றோர் வளர்ப்புப் பெற்றோர்தான் என்பதும் ,
அவனை அவர்கள் ஓர் அநாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வளர்த்ததும் தெரிய வருகிறது .
கனவுக்கும் தன் பிறப்புக்கும் சம்மந்தம் இருக்கும் என்று நம்பும் அந்த இளைஞன் அதைக் கண்டு பிடிக்க தமிழ்நாடு வருகிறான் .
அநாதை இல்லத்தில் விவரம் பெற்று அம்மா இருந்த ஊருக்குப் போகிறான் .
அங்கே அம்மா இறந்ததை அறிந்து கொண்டு அப்பாவின் ஊருக்கு செல்கிறான் .
அப்பாவைத் தேடி வந்ததாக சொல்வது அசிங்கம் என்பதால் இலவச மருத்துவம் செய்யும் சமூக சேவகனாக இருந்தபடி அப்பாவைத் தேடுகிறான் .
அந்த ஊர் நாட்டு மருத்துவருக்கும் (அஞ்சலி ) அவனுக்கும் காதல் வருகிறது .
தன்னைப் போல் இடது கைப் பழக்கம் உள்ள பஞ்சாயத்து போர்டு தலைவரிடம் (மது சூதனராவ்) பேச , அவர் தனது கல்லூரிக் கால காதலையும் ,
காதலியை ( அம்ரிதா|) மணக்க அப்பா மறுத்து , வீட்டில் பூட்ட , தான் போவதற்குள் அவள் இறந்த கதையையும் சொல்கிறார்.
பிளாஷ்பேக்கில் காதல் விரியும்போது , காதலனாக விஜய் ஆன்டனி ! ஆனால் கடைசியில்தான் அவள் பெயர் பார்வதி அல்ல தேன் மொழி என்று தெரிகிறது .
அடுத்து காளி என்ற ஒரு நபரின் (நாசர்) கையில் பார்வதி என்று பச்சை குத்தப்பட்டு இருக்க, அவரிடம் பேசுகிறார்கள் .
அப்பாவின் கடனை அடைக்க வயதான – கொடுமைக்கார மனிதருக்கு( வேல. ராம மூர்த்தி) வாழ்க்கைப் படும் பார்வதிக்கும் ( ஷில்பா மஞ்சுநாத்) திருடப் போகும் காளிக்கும் காதல் வருகிறது .
இருவரும் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்கையில் வயசாளியின் அடியாளால் (ஆர் கே சுரேஷ்) கண்டுபிடிக்கப்பட்டு,
பார்வதி கொல்லப் படுகிற சம்பவத்தை அவர் சொல்கிறார் .
பிளாஷ்பேக் காட்சியாக வரும்போது காளியாக விஜய் ஆன்டனி.வருகிறார் . பார்வதி தாயாகாமலே இறப்பதால் அவள் மருத்துவரின் அம்மா இல்லை என்பது தெரிகிறது .
அடுத்து சர்ச் பாதர் ஒருவர் (ஜெயபிரகாஷ்) தன் இளம் வயதில் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடி பாதிக்கப்பட்டு , தாழ்த்தப்பட்ட மக்களின் அன்புக்கு பாத்திரமாவதும் ,
அங்கே செம்மலர் என்ற பெண் (சுனைனா) பாதிரியாரை காதலித்ததும் , உயர் சாதி நபர்கள் வைத்த நெருப்பில் எரிந்த குடிசைகளில் அவளும் செத்தாள் என்ற பதிவு அடங்கிய கதை சொல்லப்படுகிறது .
பிளாஷ் பேக்கில் பாதிரியராக விஜய் ஆண்டனி .
எனில் பார்வதி யார் ? எங்கே ? மருத்துவரால் தனது அப்பாவை கண்டு பிடிக்க முடிந்ததா ? என்பதே காளி.
ஆரம்பக் கனவுக் காட்சியும் அது படமாக்கப்பட்ட விதமும் அருமை . தாயாக இருப்பவர் உண்மையில் வளர்ப்புத் தாய் என்று தெரிய வரும் காட்சிக்கான லாஜிக் சிறப்பு .
பஞ்சாயத்து போர்டு தலைவரின் பிளாஷ் பேக்கில் வரும் ரோமியோ ஜூலியட் நாடகத்தின் முடிவை ,
அந்த காதலர்களின் முடிவில் சிம்பாலிசம் ஆக பயன்படுத்தும் இடத்தில் அட்டெண்டன்ஸ் போடுகிறார் ‘இயக்குனர் ‘கிருத்திகா .
அடுத்ததடுத்து சொல்லப்படும் பிளாஷ்பேக் சம்பவங்கள் என்றாலும் அவற்றில் பஞ்சாயத்து போர்டு தலைவர், கொடுமைக்கார கிழக் கணவன்,
அவனது அடியாள் ஆகியோர் எல்லா சம்பவங்களிலும் இடம் பெறும் வகையில் சமகால சம்பவங்களாக அவை இருக்கும் உத்தியும் அருமை .
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் இனிமை . அரும்பே கரும்பே பாடல் காதுகளில் தேன் தெளிக்கிறது . பின்னணி இசையும் சிறப்பு .
ரிச்சர்டு எம் நாதனின் ஒளிப்பதிவு கிராமியத்தை அழகாக கண் முன் கொண்டு வருகிறது .
சக்தி சரவணனின் சண்டைக் காட்சிகள் அபாரம்.
நாலு வேடம் விஜய் ஆண்டனி . திருடனாக வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் முந்துகிறார்
அஞ்சலி, அம்ரிதா ஃபிரேம்களை கலர்புல்லாக நிறைக்கிறார்கள் . சென்டிமென்ட்டுக்கு சுனைனா .
எனினும் கொடுமைக்கார கிழவனின் மனைவியாக வரும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் முதலிடம் பிடித்து ஜொலிக்கிறார் மருத்துவர் இந்தியா வந்ததும் நண்பராக வரும் யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் .
நாட்டு மருந்து டப்பாவை கடுகு சீரகம் போட்டுக் கொள்ள ஒரு பாட்டி கேட்பது வெடிச் சிரிப்பு .
ஒவ்வொரு பிளாஷ்பேக்கிலும் விஜய் ஆன்டனி வருவது என்பது நண்பராக வரும் யோகி பாபு வின் பார்வையிலான படமாக்கல் என்பது வெகு ஜன ரசிகர்களுக்கு புரியுமா ?
இன்னொரு பக்கம் மருத்துவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும்,
கிளைமாக்சில் அவரது செயல்பாடுகளும் மூன்று பிளாஷ்பேக் சம்பவங்களையும் மிஞ்சும் வகையில் இருக்க வேண்டாமா ? எம் ஜி ஆர் கால உத்தியான டைரி அதுக்கு போதுமா ?
படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களான பார்வதி, செம்மலர் இருவருமே கதாபாத்திரச் சீர்குலைவுக்கு ஆட்படுத்தப்பட்டு இருப்பதும் குறையே .