செயல் @ விமர்சனம்

சி.ஆர் .ராஜன் தயாரிப்பில் அவரது மகன் ராஜன் தேஜேஸ்வர் ஜோடியாக தருஷி நடிக்க, உடன், 

ரேணுகா , முனீஸ்காந்த, சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா நடிப்பில் … 

விஜய் நடித்த ஷாஜஹான் படத்தை இயக்கிய ரவி அப்புலு அடுத்து இயக்கி இருக்கும் படம் செயல். 
 
படம் புயலா ? புழுதிக் காற்றா ? பார்ப்போம் . 
 
சென்னை தங்க சாலை மார்க்கெட்டை தன் கைக்குள் வைத்து மிரட்டி மாமூல் வாங்கி சம்பாதிக்கும் பிரபல ரவுடி ஒருவனை , ஒரு சாதாரண இளைஞன் ( ராஜன் தேஜேஸ்வர்) ஒரு நாள் அடி பின்னிப் புரட்டி எடுத்து விடுகிறான் . 
 
அதனால் ரவுடிக்கு மரியாதை போய் விடுகிறது . மார்க்கெட்டில் சாதாரண ஆள் கூட அவனை மதிக்காத நிலை உருவாகி , வருமானம் போய் விடுகிறது . 
 
எனவே அந்த இளைஞனை கண்டு  பிடித்துக் கொண்டு வந்து அதே இடத்தில் அவனை அடித்துக் கொன்று , தன் மரியாதையை மீட்க முயல்கிறான் ரவுடி  
 
ரவுடியின் மகன் நன்கு படித்து பெரிய ஆளாக வர விரும்பும் நிலையில் ரவுடியின் மனைவி (வினோதினி) கணவனை எதிர்த்துக் கொண்டு  பிள்ளையுடன் வாழ்கிறாள் .
 
ரவுடி தன்னை அடித்தவனை தேட , அவனோ கேரளாவில் வேலை செய்தபடி , தன் பள்ளித் தோழியை (தருஷி) காதலித்தபடி அங்கேயே இருக்கிறான் . 
அதே நேரம் ரவுடியின் மகனின் படிப்பு ஆர்வத்தை அறிந்து கொண்டு உதவி செய்து புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் நாயகன் ,
 
நாசாவுக்கு செல்லும் தேர்வு எழுதவும்  உதவுகிறான் 
 
ஒரு நிலையில் தன்னை அடித்த நாயகனுடன் பேசும் ரவுடி ”ஒரு முறை சென்னை வந்து கொஞ்சம் நிஜமாக அடிவாங்கிக் கொண்டு, 
 
என்னிடம் தோற்றது போல நடித்தால் போதும் ” என்கிறான் . ஆனால் அப்படி வர வைத்து கொல்வதே ரவுடியின் நோக்கம் 
 
இது புரியாமல் நாயகனும் பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டு சென்னை வருகிறான் . 
 
இங்கே வந்தால் நாயகனின் காதலை நாயகியின் அப்பா ஒத்துக் கொள்ளக் காரணமே ரவுடியை அடித்ததுதான் .
எனவே ரவுடியிடம் தோற்றது போல நடித்தால் காதலில் சிக்கல் வரும் நிலை . எனவே அடிவாங்கிக் கொள்ள நாயகன் மறுக்கிறான் . அவனை கொல்ல முடியாத நிலை ரவுடிக்கு . 
 
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள்  நாயகனை அடித்து  ரவுடி மார்க்கெட்டில் தனது மரியாதையை மீட்காவிட்டால் ,
 
மார்க்கெட்டை தான் எடுத்துக் கொள்வேன் என்கிறான் இன்னொரு ரவுடி . 
 
அடிவாங்கிய ரவுடி குறிப்பிட்ட கால அவகாசம் வாங்கி அதற்குள் நாயகனை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அடிக்க முயல , புது ரவுடியோ நாயகனை கொன்று , 
 
பழைய ரவுடிக்கு மார்க்கெட் கிடைக்காமல் செய்து விட முயல்கிறான் . 
 
ஒரு நிலையில் நாயகனை மார்கெட்டுக்கு வர வைப்பதற்காக , தன் மகனையே நாசாவுக்கான தேர்வு எழுதுவதை தடுக்க முயல்கிறான் ரவுடி . 
மாணவனை காப்பாற்ற நாயகன் மார்க்கெட்டுக்கு வர அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த செயல் . 
 
வட  சென்னையைக் களமாகக் கொண்டு மிக இயல்பாக ஆரம்பிக்கிறது படம் . 
 
ரவுடியை நாயக அடிக்கும் அந்த முதல் சண்டைக் காட்சி சும்மா பட்டையை கிளப்புகிறது . 
 
வட சென்னையின் சூழல், வாழ்வியலை மிக பொருத்தமாக முகங்கள் மற்றும்  நிகழ்வுகளுடன் அழகாக சொல்கிறார் இயக்குனர் ரவி அப்புலு. 
 
நாயகி நாயகன் ஆரம்ப மோதல் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது . 
 
ரவுடியின் மனைவி மகன் கதாபாத்திரங்கள் அருமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன . 
 
ரவுடியின் ஆட்களாக  வரும் முனீஸ்காந்த் – சூப்பர் குட் சுப்பிரமணியம் காமெடி அவ்வப்போது சிரிக்க வைக்கிறது .நாயகன்  ராஜன் தேஜேஸ்வர் பாந்தமாக இருக்கிறார் . உற்சாகமாக நடிக்கிறார் . பேச்சில் பொங்கி வழியும் தெலுங்கு வாடைதான் ரொம்ப சோதிக்கிறது .
 
தருஷி இளமை . நாயகனின் அம்மாவாக வரும் ரேணுகா பொருத்தம் !
 
வினோதினி சிறப்பாக நடித்துள்ளார் . 
 
சூப்பர் குட் சுப்பிரமணி நகைச்சுவை வெடி போடுகிறார் . 
 
கறிக்கடை பாய் காமெடியும் கலகல !
 
ரவுடிகளின் குருவாக வரும் ஜெயபாலன்,  கேரக்டருக்குப் பொருத்தமான  தோற்றத்தில் அசத்துகிறார் . ரவுடியின் கையாளாக வரும் தீப்பெட்டி கணேசனும் சிறப்பு . 
 
படத்தின் முக்கிய பிரச்னை என்னவென்றால் வில்லன் கேரக்டரை வைத்து காமெடியும் செய்கிறோம் என்ற பெயரில் குழப்பி,தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள் . அதனால் வர வேண்டிய திரில்லும் பரபரப்பும் மிஸ் ஆகிறது . 
 
வில்லனின் கோரிக்கையை ஹீரோ தள்ளிப் போடுவதற்கான கால அவகாசத்தில் ஓர் அளவு வேண்டாமா ? இவ்வளவு இழுப்பா ?
 
வில்லனுக்கு கொடுத்த வாக்கை  ஹீரோ ஜஸ்ட் லைக் தட் மீறுவதும் அச்சச்சோ !
 
நாசாவுக்கு போவது நம்ம நாட்டுக்கு பெரிய சேவையா என்ன ? மாணவனுக்கு மண் சார்ந்த வாழ்வியல் லட்சியம் எதுவும் சொல்லக் கூடாதா ? 
 
ஹீரோவை வர வைக்க , ரவுடி தன்  பொண்டாட்டி பிள்ளையையே   பணயமாக்குவதும் சினிமா சினிமா !
 
திரைக்கதையில் என்ன செய்து இருக்கலாம் ?
 
ரவுடி வரச் சொன்னான்…  ஹீரோ வந்தான் … சண்டை . மீண்டும் ரவுடியை ஹீரோ அடி பின்னி எடுத்தான் .  
 
ஒவ்வொரு ஏரியாவிலும் ரவுடிகளுக்கு எதிராக குரல்கள் வந்தன . எல்லா ரவுடிகளும் கவனித்தார்கள் . ஒன்று சேர்ந்து நாயகனை கொல்ல களம் இறங்கினார்கள் . 
 
பின்னணியில் அரசியல் , போலீஸ் என்று கதை  வளர்த்து அதகளம் பண்ணி இருந்தால் , செயற்கரியதாக ஆகி இருக்கும் செயல் . 
 
ஆயினும் .நமக்கு ஒருவன் உதவி செய்தால் , உதவி பெற்றவன் வளர்ந்து வேறு ஒருவனுக்கு உதவ வேண்டும் .
 
இந்த உதவிச் சங்கிலி அறுந்து போகாமல் போனால் சமுதாயத்துக்கு நல்லது என்று படம் சொல்லும் செய்தி அபாரம் . 
 
மொத்தத்தில் , 
 
செயல்…. திறம்! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *