ஜெய்வந்த்தின் ஒயிட் ஹர்ஸ் சினிமாஸ் மற்றும் யுரேகாவின் யுரேகா சினிமா ஸ்கூல் தயாரிப்பில் ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன் , மாரிமுத்து நடிப்பில்,
யுரேகா எழுதி இயக்கும் காட்டுப் பய சார் இந்த காளி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .
ஒரு சைக்கோவை தேடி நாயகனான இன்ஸ்பெக்டர் அலைவது போல முன்னோட்டத்தின் காட்சிகள் இருந்தன .
சைக்கோ ஒரு பெண்ணா என்ற கேள்வியுடன் முன்னோட்டம் முடிகிறது .
மோடி அரசின் அராஜகத்தை விமர்சிக்கும் பாட்டு ஒன்று உள்ளது .
அதோடு ‘விலைமாதர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் . சென்னைக்கு சிவப்பு விளக்குப் பகுதி வேண்டும்’ என்ற,
யுரேகாவின் வழக்கமான கோரிக்கையை வலியுறுத்தும் பாடல்கள் காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கின்றன .
படத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரனும் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
நாயகி ஐரா வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும் நிகழ்ச்சியில் நல்ல தமிழில் பேசினார் ” யுரேகாவும் ஜெய்வந்தும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டனர் ” என்றார் .
நாயகன் ஜெயவந்த் தன் பேச்சில் , “தமிழ் நாட்டில் தமிழன் வாழ வேண்டும் வெல்ல வேண்டும் என்ற இன உணர்வோடு,
இந்தப் படத்தை தயாரித்து நடித்து இருக்கிறேன் . அதற்கேற்ற சிறப்பான கதையை யுரேகா கொடுத்து இயக்கி இருக்கிறார் ” என்றார் .
யுரேகா தனது பேச்சில் , ” லாபம் அப்புறம்.. ஒரு நல்ல படம் தர வேண்டும் என்றார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஜெய்வந்த் . அப்படி ஒரு படத்தையே கொடுத்துளேன் .
ஜெய்வந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் . ஐரா எந்த நாயகியும் ஏற்கத் துணியாத கேரக்டரில் நடித்துள்ளார் .
இன்று தமிழகம் முழுக்க வட மாநில ஆட்கள் திட்டமிட்டு திணிக்கப் படுகிறார்கள் . எல்லா கடைகளிலும் வியாபார நிறுவனங்களிலும் டோல்கேட்டிலும் அவர்கள் நம்மிடம்
‘கியா ….கியா…. ‘ என்கிறார்கள் . நாம் அவர்களை தமிழில் பேசச் சொன்னால் அவர்கள் நம்மிடம் ‘இந்தியில் பேசு’ என்கிறார்கள் .
நாம் வட இந்தியா சென்று வேலை பார்த்துக் கொண்டு நம்மிடம் அவர்கள் இந்தியில் பெசும்போது, நாம் அவர்களிடம் ‘தமிழில் பேசுடா’ என்றால் சும்மா இருப்பார்களா ?
அது மட்டுமல்ல … தமிழ் நாட்டில் நடைபெறும் கொலை , கொள்ளை , கற்பழிப்பு , திருட்டு, வழிப்பறிஉட்பட்ட பல குற்றங்களின் பின்னால் இருப்பவர்கள் இந்த வடக்கத்தியர்களே
இதற்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் சதி இருக்கிறது என்ற யூகம் எல்லோருக்கும் உள்ளது .
எனக்கும் உள்ளது . அதை சொல்லி இந்தப் படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ” என்றார். .