ராஜ் கமல் இன்டநேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் , அக்ஷரா ஹாசன், அபு ஹசன் நடிப்பில் தூங்காவனம் ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கும் படம் .
மலேசியாவின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரத்தின் மையத்தில் உள்ள ஓர் அலுவலகத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு குதிக்கிறார், அண்டர் கவர் ஆபரேஷன் அதிகாரி அப்புறம் சீக்ரெட் ஏஜென்ட் என்று பல வேலை பார்த்த கே கே எனப்படும் கார்த்திகேயன் ( விக்ரம்)
அவரை இருவர் துரத்த , ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் . போலீஸ் காவல்.
அந்த மருத்துவ மனையில் அண்மையில் வேலைக்கு சேர்ந்த ஒரு தமிழ் நாட்டு இளைஞன் ( அபு) . பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்ட அவனது காதல் மனைவி ( அக்ஷரா) சூல் கொண்டு இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற சூழல் .
கார்த்திகேயனை மீட்க விரும்பும் அவரது ஆள் ஒருவன் , அந்த சூல் கொண்ட பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு , ”கார்த்திகேயனை எப்படியாவது வெளியே கொண்டு வா உன் மனைவியை விட்டு விடுகிறேன்” என்கிறான் காதல் இளைஞனிடம் !
காவல் துறையில் ஒரு கொடூர ஆண் அதிகாரிக்கும் நியாயமான பெண் அதிகாரிக்கும் இடையில் பனிப்போர் .
கார்த்திகேயனை அந்த இளைஞன் வெளியே கொண்டு வர முயல, அப்புறம் என்ன நடந்தது ? கார்த்திகேயனுக்கு என்ன பிரச்னை? கடத்தப்பட்ட பெண் என்ன ஆனாள்? இவை எல்லாம் யாருக்காக யாரால் எதற்காக என்பதே இந்த கடாரம் கொண்டான் .
கடாரம் கொண்டான் என்பது ராஜேந்திர சோழனின் பட்டப் பெயர் . கடாரம் என்பது மலேசியாவின் பழைய பெயர் . சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவை வென்ற காரணத்தால் ராஜேந்திர சோழனுக்கு வந்த பட்டப் பெயர் அது . ( கங்கை கொண்டான் என்ற இன்னொரு பட்டப் பெயரும் அவனுக்கு உண்டு )
அந்த பெயரை வைத்துக் கொண்டு பிரெஞ்சில் வந்த பாயின்ட் பிளாங்க் படத்தை மறு உருவாக்கம் செய்து இருக்கிறார் ராஜேஷ் எம் செல்வா .
மேக்கிங்கில் சிறப்பாக செய்து இருக்கிறார் .
மலேசிய இரட்டை கோபுரத்தை ஒரே ஷாட்டில் அணு அணுவாக அணுகி சட்டென்று அதில் இருந்து விக்ரம் குதிக்கும் காட்சி மேக்கிங் சிறப்புக்கு உதாரணம்.
விக்ரம் அசத்தலாக நடித்துள்ளார் . சின்னச் சின்ன அசைவுகள் பார்வைகள் அந்த உடல் மொழிகள் அபாரம் . ஆனால் நடிப்பில் சற்றே கமல்ஹாசன் பாணி தெரிகிறது .
பெரிய கண்கள் , குறுகுறு சிரிப்பு , குழந்தைத்தனமான முகம் , முயன்று தமிழை சரியாக பேசும் சிரத்தை என்று அக்ஷரா கவர்கிறார் .
அபு ஹாசன் ஒகே .
ஜிப்ரனின் இசை , ஸ்ரீனிவாஸ் குதாவின் ஒளிப்பதிவு , பிரவீன் கே எல் எடிட்டிங் , ஆகியவை சிறப்பு .
திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
என்னதான் கலவரம் என்றாலும் மலேசிய கமிஷனர் ஆபீசுக்குள் அப்படியா தி நகர் ரங்கநாதன் தெரு போல கூட்டம் அம்மும் ?
தமிழ் சப் டைட்டில்களில் ‘ஐயோக்கியன் ‘ , ‘பன்னலாம்’ , ‘காட்டிலாம்’ என்று ஏகப்பட்ட பிழைகள் . நியாயமா ?
கடாரம் கொண்டான் …. அதிரடி ஆக்ஷன் அதகளம்!