நூறு சாமி @ விமர்சனம்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா  விஜய் ஆண்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா , விஜய் ஆண்டனி, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில் , கருணாஸ் நடிப்பில் இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம்.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்துப்  பெண் வள்ளி (ஸ்வாசிகா) . சிறு வயதிலேயே கணவனை இழந்த வள்ளி.நண்டும் சிண்டுமாக இருக்கும் இரு மகன்களை வளர்க்க படாத பாடுபடுகிறார். இளம் விதவை என்பதால் ஆண்களின் தொல்லை . வறுமையில் ஒழுக்கமாக இருப்பதன் போராட்டம் எல்லாமும் அவளைச்  சுழற்றி அடிக்கிறது.
 
ஆண்கள் மனைவியை இழந்தால் மறு திருமணம் செய்து கொள்ளும்போது,   பெண்கள் செய்து கொண்டால் என்ன என்ற அவளது இயல்பான சிந்தனை ஒரு முறை சொல்லாக அவளிடம் இருந்து  வெளிப்படுகிறது.
 
கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் அவரது மூத்த மகனிடம் ( அஜய் திஷான்) ,அதை உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்ல, அவனால் அதைத் தாங்க முடியவில்லை.
 
அம்மாவிடம் கோபப்படுகிறான். எனினும் கிறிஸ்தவக் கல்வி நிலைய சிஸ்டர் ஒருவரின் ( லிஜோமோல் ) அறிவுரையால்  அம்மாவுக்கு இன்னொரு திருமண வாழ்க்கை முக்கியம் என்பதை உணர்கிறான்.
 
செல்வியின் இளைய மகனுக்கு (சக்தி) ஒரு காதலி (பாடினி குமார்) . அவளது குடும்பமும் செல்வியின் திருமணத்தை ஏற்காத நிலையில் அந்தக் காதலிலும் பிரச்னை. 
 
இதனால் அண்ணனுக்கும் தம்பிக்கும் மோதல்  .
 
ஒரு நிலையில் தம்பியும் அண்ணனின் கருத்து சரி என்று உணர்கிறான். .  செல்வி தன் மூத்த மகனுக்கு பெண் பார்க்க வைக்கிறாள். 
 
ஆனால் மகன்கள் இருவரும் அம்மாவுக்கு ஏழுமலை(விஜய் ஆண்டனி) என்பவரை மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கிறார்கள். 
 
தன் மகளை செல்விக்கு மருமகளாக அனுப்பும் எண்ணத்தில் தீவிரமாக இருக்கும் செல்வியின் அண்ணனுக்கு  (கருணாஸ்),தங்கைக்கு இன்னொரு திருமணம் என்பது கொலை வெறியை ஏற்படுத்துகிறது. செல்வியின் அம்மா , அக்கா  ஆகியோரும் கல்யாணத்தை எதிர்க்கிறார்கள். 
 
செல்வியை ரொம்ப நாளாக வளைக்க முயன்ற ஊர்ப் பெரிய மனிதர் ஒருவரும் ( பாலாஜி சக்திவேல்).கலாச்சாரம் , சாதி, ஊர் மரியாதை ,  அசிங்கம் என்ற பெயரில் இந்தக் கல்யாணத்தை தடுக்க முயல, நடந்தது என்ன என்பதே படம். 
 
2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தில் செல்வி என்ற கணவனை இழந்த நிலையில்,  அவரது மகன்கள் பாஸ்கர் என்கிற சித்தார்த்தன்,  விவேக்  இருவரும்  அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம். படத்திலும் மகன்களின் பெயர் பாஸ்கர், விவேக்,  செல்வியின்  கணவர் பெயர் ஏழுமலை என்று அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் சசி. 
 
செல்வியின் மூத்த மகன் சித்தார்த்தன் கிண்டிலில் எழுதிய Right to Marry என்ற நூலும் சசிக்கு உதவி இருக்கிறது.
 
அம்மா என்றால் புனிதமானவள். தெய்வம்.. அந்த பீடத்தை அவள் உயிர் சுமந்து பெற்றுக் கொடுப்பதற்கு மட்டுமே  கூட  கொடுக்கலாம். ஆனால் சமூகம் அதோடு  விடுவதில்லை 
 
தொடர்ந்து அவள் தெய்வமாக இருக்க வேண்டும் என்றால்,  சாகும் வரை தியாகம் செய்ய வேண்டும் . தியாகம் செய்ய வேண்டும் அவளுக்கான வாழ்க்கையை அவள் வாழக் கூடாது.( இந்த சுமையின் ஒரு பகுதிகளை மனைவி, சகோதரிகளும் சுமப்பது உண்டு) இதுதான் இன்றும் நிலவரம். 
 
போதும்! அம்மாவை தெய்வமாகப் பார்த்தது போதும் . மனுஷியாகப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள். அவர்கள் விருப்பப்படி அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்கிறது படம் 
 
வறுமையிலும் பாலியல் கண்களில் இருந்து தப்பியும் செல்வி தன் பிள்ளைகளை வளர்ப்பதை  நெகிழ்வாக படமாக்கி இருக்கிறார் சசி . ஹாஸ்டலுக்கு அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி  வைக்க முயன்று தோற்கும் காட்சி முதல் கனமாக மனதில் இறங்குகிறது. 
 
செல்வியின் கிராமத்து வீட்டில் கேமராக்கள் பொருத்தி,  போன் வழியே மகன்களுடன் உரையாடுவது ,   வேலைக்குப் போகும் இடத்தில் வள்ளி  பொட்டு வைத்துக் கொள்வது என்று நவீன கிராம மாற்றங்களை அழகாக பதிவு செய்கிறார் சசி. கரும்புக்காடு உள்ளிட்ட கிராமத்துப் பின்புலங்களையும்  சிறப்பாக திரையில் கொண்டு வருகிறார்.
 
பணக்காரர்களும் பிளாக் காபி குடிக்கிறார்கள் . ஏழைகளும் வரக்காப்பி குடிக்கிறார்கள்  காப்பி ஒன்றுதான்  ஆனால் காரணங்கள்  வேறு என்ற காட்சி….எலியைப் பொறி வைத்து பிடித்தபடி – ஒற்றை அறை வீடு என்ற எலிப் பொறிக்குள் சிக்கிய   எலியாக – வள்ளி நிற்கும் காட்சி…. யாருமில்லாத் தனிமையில் வள்ளி  மின் விசிறியோடு பேசிக் கொண்டு இருப்பது , இவை யாவும் சசியின் சிக்னேச்சர் காட்சிகள். . 
 
மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கிறார் செல்வியாக நடித்து இருக்கும் ஸ்வாசிகா.  உள்ளுக்குள் இருக்கும் இயல்பான சுயம், பிள்ளைகள் மீதான பாசம் , எந்த கஷ்டமான சூழலிலும் எவ்வளவுதான் உடைந்தாலும் ஒரு நிலையில் தானே இறுக்கி அடுத்த கட்டத்துக்கு போகும் தன்மை , பிள்ளைகளிடம் விட்டுக் கொடுக்காத கம்பீரம் என்று…  விருதுக்குரிய நடிப்பைக் கொடுத்துள்ளார் ஸ்வாசிகா.  வாழ்த்துக்கள். 
 
 கரும்பு வெட்டும் வேலையில்  கை  தேர்ந்த ,எந்த சூழலையும் இயல்பான  சந்தோஷத்தோடு எதிர்கொள்கிற, பெண்களை மதிக்கிற, பாட்டியை குளிப்பாட்டி பராமரிக்கும் வேலையை தானே செய்கிற…  ரொம்ப நல்லவன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. 
 
சமுதாயத்துக்கு தேவையான கேரக்டரில் அஜய் திஷான்  சிறப்பாக நடித்துள்ளார். சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ்  ஆகியோரும் இயல்பு.  கவனிக்க வைக்கிறார் தாமரை. 
 
தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு கிராமத்தில் நடக்கும் கதைக்கான நிஜ உணர்வை தருகிறது. 
 
பாலாஜி ஸ்ரீராமின் இசையில் மாயக்கனவே உள்ளிட்ட பாடல்கள், பின்னணி இசை ஆகியவை சிறப்பு. 
 
செல்வியின் வீட்டை வடிவமைத்த வகையில் சசிகுமாரின் கலை இயக்கம் ஜொலிக்கிறது.  
 
தன்னை தவறாக பார்க்கும் ஒரு நபரின் முன் ஒரு பெண் தனது மறுமணம் பற்றிய கருத்தை முதன் முதலில் சொல்வாரா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே  வருகிறது.  
 
சில காட்சிகள்  மிக சாதாரணமாக நகர்கின்றன . மாறாக மகன்கள் சண்டை போட்டுக் கொள்வது உள்ளிட்ட  காட்சிகள்  அதீத உணர்ச்சிக் குவியலாகவும் போகிறது. 
 
தேங்கி விடக்  கூடாது என்ற கவனம் நியாயம்தான் . ஆனால் சில காட்சிகள்  தேவையான அழுத்தம் இன்றி வேகமாக மட்டும் கடக்கின்றன. 
 
வித்தியாசம் என்று நினைத்து செய்யப்பட கிளைமாக்சில்  இந்தக் கதைக்கான கம்பீரம் இல்லாமல் போகிறது. 
 
இப்படி சில ஏக்கங்கள் இருந்தாலும் சொல்ல வேண்டிய கதையை   சிறப்பாக சொல்லி எடுத்து இயக்கி கொடுத்து இருக்கிறார்கள். 
 
நூறு சாமி.. அர்ச்சனை  வாங்கலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *